
அமைதியாக இருந்து வந்த பன்னீர்செல்வம் இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் பெரிதாக அலையடித்திருக்கிறார்.
பாஜகவையே நம்பிக்கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை கடைசி வரையிலும் கண்டுகொள்ளவே இல்லை. அவருக்கு தன்மானம் இருக்காதே பின்னே? தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்வி நிதியை பாஜக மத்திய அரசு தராததை கண்டித்து பாஜகவுக்கு தனது எதிர்ப்பை பதிவை செய்த பன்னீர்செல்வம், இன்றைக்கு காலையில் நடைபயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பன்னீர்செல்வம். இந்த சூடு அடங்குவதற்கும் அடுத்ததாக முதல்வரின் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்து அரைமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தி தமிழக அரசியல் களத்தை சூடேற்றி வைத்திருக்கிறார்.
முதல்வருடான இந்த சந்திப்பில் பன்னீர்செல்வத்தின் மகன் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தும் இருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரையிலும் வந்து பன்னீர்செல்வத்தை வரவேற்று அழைத்துச் சென்றார்.

பன்னீர்செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுகவை எதிர்ப்பது எங்கள் நிலை அல்ல என்று கூறியிருந்தார். இதையும் பன்னீர்செல்வம் முதல்வர் இல்லத்திற்கு சென்றதையும் வைத்து திமுக கூட்டணியில் பன்னீர் அணி இணைய வாய்ப்பிருக்கிறது என்கிற பேச்சு எழுந்திருக்கிறது.
ஆனால், முதல்வருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை . உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கே சென்றேன். மு.க.முத்துவின் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவித்தேன் என்கிறார் பன்னீர்செல்வம். முதல்வரும், ‘’உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. கூட்டணி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை வேறு வகையான தேர்தல் வியூகம் வகுத்திருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.