உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் 12.8 லட்சம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. மோடி 2.0வில் இதற்கு தீர்வு கிடைக்காததால் மோடி 3.0லாவது தீர்வு கிடைக்கும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் 1.8 லட்சம் பேர்.
தனியாரில் ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு ரூ.2 லட்சத்திற்குமேல் ஆகும் என்றிருந்த நிலையில், வெறும் 13 ஆயிரம் ரூபாயில் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவை, கடந்த 2017ல் தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி நிறுவனம் மூலம் 2 ஆண்டுகளுக்கான ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியது மோடி அரசு. இதில் நாடு முழுவதிலும் 12.8 லட்சம் பேர் சேர்ந்தனர்.
இவர்களுக்கு 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2019 மார்ச் மாதம் வரை பயிற்சி நடந்துள்ளது. 18 மாதங்களுக்கு பிறகு பயிற்சி பெற்று தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து அந்தந்த மாநிலங்களில் பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
24 மாத கோர்ஸ் என்று சொல்லிவிட்டு 18 மாதங்களில் சான்றிழ் கொடுத்தது தவறு என்று அந்தந்த மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடர, உயர்நீதிமன்றங்கள் அந்த சான்றிதழ் செல்லும் என்று உத்தரவிட்டதால் பணியை தொடர்ந்து வந்துள்ளனர். ஆனால், தனியார் நிறுவனங்கள் விடாப்பிடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், 24 மாத கோர்ஷை 18 மாதத்தில் முடித்து சான்றிதழ் அளித்தது செல்லாது என்று சொன்னது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் 12.8 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஒருவருக்கு 13 ஆயிரம் ரூபாய் வீதம் 12.8 லட்சம் பேருக்கு 1,664 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்து விட்டது ஒன்றிய பாஜக அரசு என்று பாதிக்கப்பட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டம் குறித்து ஒன்றிய அரசு, அரசிதழில் வெளியிடாததுதான் இந்த வழக்கு தோற்றுப்போனதற்கு காரணம் என்று சொல்லப்பட்டதால், அரசிதழில் வெளியிடும்படி கோரி குடியரசுத்தலைவருக்கு பாதிக்கப்பட்டோர் கடிதம் எழுதி இருந்தனர். அதற்கு பதிலேதும் இல்லை. தற்போது மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், அந்த திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டால் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெறலாம் என்று நினைக்கின்றனர் பாதிக்கப்பட்டோர். என்ன செய்ய போகிறார் பிரதமர் மோடி? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.