இப்போது இருக்கும் நெருக்கடியில் தான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என்று தெரிவித்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் அமீர்.
பருத்தி வீரன் படம் இயக்கிய பின்னர் இயக்குநர் அமீர் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார். அவர் இப்போது தீவிர அரசியலுக்கு வரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நெருங்கிய நட்பில் இருந்த அமீர், கருத்து வேறுபாடுகளால் அவரிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறார். பாஜகவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார் அமீர்.
இந்நிலையில் அமீரிடம் பேசிய செய்தியாளர்கள், நேரடி அரசியலுக்கு வருகிறீர்களா? என்று கேட்க, ’’எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும் என்று சொல்வதைப் போல் நிச்சயம் அரசியலுக்கு வருவோம். இப்போது இருக்கின்ற நெருக்கடிக்கு நான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். என் உள்ளுணர்வு அதைத்தான் சொல்கிறது’’ என்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இது கொலை நாடா? இல்லை தமிழ்நாடா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமீரிடம் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, ‘’மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. வெள்ளை வேட்டியில் நான்கைந்து கறைகள் இருந்தால் பளிச்சென்று தெரியும். அது போன்றுதான் குறைகள் இருக்கின்றன. மற்றபடி சட்டம் ஒழுங்கு எல்லா கால கட்டத்திலும் சரி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சரியாகத்தான் இருக்கிறது’’என்றார்.
விஜய் கட்சி தொடங்கியது குறித்தும், தவெக மாநாட்டில் பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கும், ‘’விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து சொல்லிவிட்டேன். தவெக மாநாட்டில் பங்கேற்க அவர் அழைத்தால் நிச்சயம் செல்வேன்’’என்றார்.