நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவு ரசிகர்களை உருக வைத்துள்ளது.
தன் தாயின் உடல்நிலை குறித்து அந்தப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சத்யராஜின் மனைவி மகேஸ்வரி(66) கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வந்தன. ஆனால், அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. அவரது மகள் திவ்யாவே அதுகுறித்து மனம் திறந்துள்ளார்.
‘’கடந்த நான்கு ஆண்டுகளாக என் அம்மா கோமாவில் இருந்து வருகிறார். எங்கள் வீட்டில் வைத்தே அவரை கவனித்து வருகிறோம். டியூப் வழியாகவே உணவை செலுத்தி வருகிறோம். இதனால் நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். ஆனாலும், மருத்துவ சிகிச்சையால் என் அம்மா குணமடைந்துவிடுவார் என்றூ அதிக நம்பிக்கையுடன் உள்ளோம். எங்க அம்மா பழைய மாதிரி கிடைப்பார்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும், ‘’அப்பா தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வருகிறார். எனக்கு அவர் தாயாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய் நாதாம்பாள் பாட்டி தவறிவிட்டார். நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன். நானும் அப்பாவும் சக்திவாய்ந்த தாய்களாக மாறி ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி வருகிறோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.