
அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று பொதுவெளியில் வெளிப்படையாக பழனிசாமி கேட்டும், வர முடியாது என்று சொன்னதோடு அல்லாமல் அதிமுகவை கடுமையாக விமர்சித்து ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி தலைவர்கள் பழனிசாமி முகத்தில் கரியைப் பூசி இருக்கிறார்கள்.

’’விழுப்புரத்தில் கம்யூஸ்னிட் மாநாட்டிற்கும், திருச்சியில் விசிக மாநாட்டிற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விசிக கொடி கம்பத்தை நட மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும். சிந்தித்துப் பாருங்கள்.. அதிமுகவில் சேரும் கட்சிகளை நாங்கள் ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்போம்’’ என்று சிதம்பரத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்டுகளை அழைப்பு விடுத்தார். இதை திமுக கூட்டணிக்கட்சிகள் நிராகரித்துள்ளன.

உணர்ச்சியை தூண்டுகிறார்கள் -திருமாவளவன் ( விசிக தலைவர்)
‘’அவுங்க கூப்பிட்டதும் நான் போயிருந்தா என்னை ஆஹா ஓகோன்னு சொல்லி இருப்பாங்க. நான் அங்க போகல. அங்க போறதுக்கு வாய்ப்பில்ல. அதனால் கொச்சைப்படுத்தும் நோக்கில் சொல்கிறார்கள். அவர்களது நோக்கம் எங்களது வளர்ச்சி அல்ல. திமுக கூட்டணிக்குள் ஒரு குழப்பம் ஏற்படும் என்று அதிமுக சந்தேகத்தை எழுப்புகிறது. இதன் மூலமாக ஒரு விரிசலை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறது அதிமுக. ஏன் 3 சீட்டுக்கு போற, 6 சீட்டுக்கு போறன்னு இன்றைக்கு திடீர் கரிசனம் பல பேருக்கு வந்திருக்குது. இப்படி உணர்ச்சியை தூண்டிவிட்டு திமுக மீது எங்களுக்கு வெறுப்பு வரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும்’’

ரத்தக்கறை படிந்த கம்பளம் -முத்தரசன் ( சிபிஐ மாநில செயலாளர்)
’’பழனிசாமி கோவை மேட்டுப்பாளையம் பியில் பேசுகிறபோது கம்யூனிஸ்டுகளே இல்லை. அவர்களுக்கு முகவரியே இல்லை . காணாமல் போய்விட்டார்கள் என்று சொன்னார். ஒரு வார இடைவெளியில் என்ன ஞானஸ்தானம் பெற்றார் என்று தெரியவில்லை. ஒரு வேளை சிதம்பரம் வந்ததால் நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என்று தெரியவில்லை.
கம்யூனிஸ்டுகள், விசிக போன்ற திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வர வேண்டும் என்று அழைக்கிறார். கோவையில் கம்யூனிஸ்டுகளே இல்லை என்று சொல்லிவிட்டு சிதம்பரத்தில் கம்யூனிஸ்டுகளை கூட்டணிக்கு அழைக்கிறார் பழனிசாமி. இது நல்ல நகைச்சுவை. 2025 ஆண்டில் மிகச்சிறந்த நகைச்சுவை பழனிசாமியின் இந்த பேச்சுதான். கூட்டணிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாது எங்கள் அணிக்கு வந்தால் ரத்தினக்கம்பளம் விரித்து நாங்கள் வரவேற்போம் என்கிறார். அது ரத்தினக்கம்பளம் அல்ல; ரத்தக்கறை படிந்த கம்பளம். பாஜக எனும் அந்த ரத்தக்கறை படிந்த கம்பளத்தில் பழனிசாமி பயணம் செய்கிறார். ஆபத்தை உணர்ந்தும் அதில் பயணம் செய்கிறார். அப்படி பயனம் செய்பவர் திமுக கூட்டணி கட்சிகளை அதிமுகவுக்கு அழைப்பது சிறந்த நகைச்சுவைக்கு உரியது.‘ ’’

வஞ்சக வலை – சண்முகம் (சிபிஎம் மாநில செயலாளர்)
’’எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி.
போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.
ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான்’’.