அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, திமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று உண்மை நிலை இருக்க, அதிமுகவோ இந்த வெற்றிக்கு உரிமை கொண்டாடுகிறது. அதிமுக இதில் உரிமை கொண்டாடுவது சரியா?
கடந்த 2009ம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த கலைஞர், பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் 3% உள் இட ஒதுக்கீடு அருந்ததியருக்கு வழங்குவதற்கு வகை செய்கின்ற சட்டம் கொண்டு வந்தார். இதை எதிர்த்து புதிய தமிழக கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் என்ற தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று 2020ல் தீர்ப்பளித்தது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அருந்ததியர் உள் ஒட ஒதுக்கீட்டிற்கு சாதகமான இடைக்கால தீர்ப்பை வழங்கியது.
அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்ப்பு குறித்து, ‘’திமுகவின் சமூக நீதி கொள்கைக்கும் கலைஞரின் முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூகநீதி சிந்தனையுடன் செயல்படும் பேரியக்கம் திமுக. 23.1.2008ல் சமூக பொருளாதாரத்தில் அடித்தளத்தில் அந்ததியினர் இருப்பதால் அவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்கிட முடிவு செய்து அறிவித்தது கலைஞர் அரசு. 27.11.2008ல் அருந்ததியினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 3% இட ஒதுக்கீடு வழங்கி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றியது திமுக அரசு.
சட்ட முன்வடிவுக்கான கலைஞரின் உரையை உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற முறையில் நான் அவையில் எடுத்துரைத்தேன். 29.4.2009ல் இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டது. அருந்ததியினர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்தில் அந்த உள் ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதம் என்று அப்போது தெரிவித்திருந்தார்.
அன்றைய திமுக அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அப்போது தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. வாதங்கள் நிறைவுற்று 1.8.2024ல் உள் ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை தீர்ப்பளித்தது.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!
முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.
இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ திமுக அரசின் இந்த வெற்றிக்கு உரிமைகொண்டாடுகிறார். உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கின் போது அதிமுகவின் சட்ட முன்னெடுப்புகளும், முயற்சிகளும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்கிறார்.