
கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று சொல்லுகிறாரே தவிர அண்ணாமலை கட்டுப்படுவதாக தெரியவில்லை. இல்லை, கட்சித்தலைமையே அவரை இப்படித்தான் பேசச்சொல்லி இருக்கிறதோ என்னவோ?
அமித்ஷாவே 2026இல் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று சொன்ன பிறகும், 2026ல் கூட்டணி ஆட்சி என்று சொல்லமாட்டேன். பாஜக ஆட்சி என்றுதான் சொல்வேன் என்று அடம்பிடிக்கிறார் அண்ணாமலை.
2026ல் அதிமுக ஆட்சிதான் என்று பழனிசாமியும் அவரது தரப்பினரும் எவ்வளவுதான் சமாளிப்பது? இல்லை, இல்லை பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று எல்லாத்தையும் தவிடு பொடி ஆக்கிவிடுகிறது பாஜக.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? என்ற குழப்பம் ஏற்பட்டு அதிமுகவினர் அதிர்ந்திருக்கும் நிலையில், கூட்டணி ஆட்சி என்பதையே அதிமுகவினர் ஜீரணிக்க முடியாமல் திணறும் நிலையில், அதிமுக கூட்டணி ஆட்சி இல்லை, கூட்டணி ஆட்சி இல்லை, பாஜக ஆட்சிதான் என்று சொல்லி ஏகத்துக்கும் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
கூட்டணி என்று உள்ளே வந்து அதிமுகவை மொத்தமாக விழுங்கித் திண்ணப்போகும் பாஜகவின் உள்நோக்கம் புரிந்தும், அவர்களுடன் பழனிசாமி கூட்டணிக்கு சம்மதிருப்பதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அதிமுகவின் முன்னாள் மூத்த நிர்வாகி கே.சி.பழனிசாமி.
’’வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயையும் இணைத்து கூட்டணி ஆட்சி, அதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்கிற வகையில் ஆட்சியமைக்க முயற்சிக்கிறது பாஜக, தான் முதலமைச்சர் ஆக வேண்டும், தன்னைசுற்றியுள்ள சகாக்கள் அமைச்சர்கள் ஆக வேண்டும். கடந்த கால ஊழல் வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும் தங்கள் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள வேண்டுமென்கிற சுயநலத்தோடு பழனிசாமியும் அவரது சகாக்களும் இதற்கு ஒத்துழைத்தால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசியல் களம் பாஜக VS திமுக என்று உறுதிப்படுத்தப்பட்டு, மறைமுகமாக பாஜக ஆட்சி ஏற்படுத்த ஒத்துழைப்பது, அதிமுகவை ஆளும்கட்சி என்கிற அந்தஸ்திலிருந்தும், அரசியல் களத்தில் இருந்தும் அப்புறப்படுத்துகிற முடிவாக இருக்கும்’’ என்று எச்சரிக்கிறார் கே.சி.பழனிசாமி.
அவர் மேலும், ’’அதிமுகமாபெரும் இயக்கத்தை அழிவு பாதைக்கு அழைத்துச்செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள உடன்படுகிறார்கள். இதை எம்.ஜி.ஆரின் விசுவாசிகள், அண்ணாதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்’என்றும் பழனிசாமிக்கும் அவரது சகாக்களுக்கும் அறிவுறுத்துகிறார்.
xtalgw