சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை இன்று காலையில் விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்திவிட்டு தப்பியோட முயன்றபோது பிடிபட்டுள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு, கத்தியை பேண்ட் பையில் செருகியபடி வேகவேகமாக நடந்து சென்றார். மருத்துவரை அவர் கத்தியால் குத்தியதை பார்த்துவிட்ட சிலர் அந்த இளைஞரை பிடிக்கச்சொல்லி சத்தம் போட்டுக்கொண்டே வந்தனர். மருத்துவமனையின் வாசல் அருகே வந்ததும் பேண்ட் பையில் இருந்து கத்தியை எடுத்து ஓரமாக வீசிவிட்டு நடந்தார்.
அப்போது வாசலில் நின்றிருந்த காவலர்களிடம் பின்னால் ஓடிவந்த காவலர்கள் விவரத்தை சொல்லி சத்தம் போட அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பிடிபட்ட அந்த இளைஞர் விக்னேஷ். இவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தான் தந்தையை இழந்தவர் என்றும், அதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயாரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று துடித்ததாகவும் சொல்லி இருக்கிறார்.
நேற்று இரவு புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப்பின்னர் தனது தாய் வலியால் துடித்ததைக் கண்டு தாங்க முடியவில்லை. ஹீமோ சிகிச்சை அதிகமாக அளித்ததால்தான் தனது தாயார் வலியால் துடித்தார் என்றும், அதனால் மனசு தாங்க முடியாமல் இரவில் மது அருந்தியதாகவும் , அப்போது தனது தாய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை கத்தியால் குத்தி கொல்ல வேண்டும் நினைத்ததாகவும், அதன்படியே இன்று காலையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டில் இருந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு, பெருங்களத்தூரில் இருந்து ரயிலில் கிண்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜியை அடித்து சுவற்றி சாய்த்துக்கொண்டு கழுத்தில் கத்தியால் குத்தியதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு அந்த இளைஞரிடம் விசாரணை நடந்து வருகிறது.