
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதிலிருந்தே சர்வதேச அரசியலில் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக வரி விதிப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக டிரம்ப் கூறிவந்தார். அந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அந்நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் என டிரம்ப் சொல்லி வந்தார்.
பரஸ்பர வரி விதிப்பில் உள்ள சிக்கல்:
இப்படி வரி அதிகரிப்பதின் மூலம் ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை கடுமையாக உயரும். இதனால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கை குறையும். இதனைத் தொடர்ந்து அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது வெகுவாக குறைந்துவிடும். உதாரணமாக இந்தியாவின் பொருட்கள் இதில் பாதிக்கப்பட்டால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
இந்த பரஸ்பர (Reciprocal) வரி விதிப்பின்படி எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி என்ற விவரம் கடந்த 2ம் தேதி ‘Make America Wealthy Again’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இந்த வரி விதிப்பானது இந்தியா(27%), சீனா(34%), இலங்கை(44%), வங்கதேசம்(37), வியட்நாமம்(46%), தாய்லாந்து(36%) உள்ளிட்ட பல நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பரஸ்பர வரி விதிப்பு குறித்து டிரம்ப் பேசுகையில், “அவர்கள் நம்மிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். நாமும் அவர்களிடம் அதையே வசூலிக்கிறோம். இதற்கு யாராவது வருத்தப்படலாமா?” என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், வர்த்தக கொள்கையைப் பொருத்தவரை இந்தியா கடினமாக நடந்து கொள்வதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். மேற்கொண்டு “இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்து சென்றார். அவர் ஒரு நல்ல நண்பர். நீங்கள் என் நண்பர்தான். ஆனால், நீங்கள் எங்களைச் சரியாக நடத்தவில்லை என்று நான் அவரிடம் கூறினேன். இந்தியா நம் மீது 52 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறார்கள். நாம் பல ஆண்டுகளாக அவர்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை” என டிரம்ப் கூறினார்.
பரஸ்பர வரி மட்டுமின்றி அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இத்தகைய வரி விதிப்பதின் மூலம் சர்வதேச பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமெனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நியாயமற்ற வரிகளுக்கு மிகப் பெரிய விலையை அமெரிக்க மக்கள்தான் செலுத்தப் போகிறார்கள். இதற்காக நாங்கள் எந்த ஒரு வரியையும் விதிக்கப்போவது இல்லை. அப்படி செய்தால் எங்கள் நாட்டிலும் விலை அதிகரிக்கும். வளர்ச்சி குறையுமென ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார்.
இதேபோல், கனடா பிரதமர் மார்க் கார்னி ’அமெரிக்க வரிகள் பல லட்சம் கனடா மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், பிரிட்டன், ஸ்பெயின், ஸ்வீடன் நாட்டுப் பிரதமர்களும் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள வரி உயர்வையும் அதன் தாக்கத்தையும் இந்தியா மதிப்பீடு செய்து வருவதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
இந்தியாவிற்கு என்ன சிக்கல்:
அமெரிக்க இறக்குமதி பொருட்களின் மீது இந்தியா 52 சதவீதம் வரி விதிக்கிறது. இதற்குப் பரஸ்பரமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 27 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் சில துறைகளில் பாதிப்பை ஏற்படுத்துமென்று சிலரும், போட்டி நாடுகளை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. எனவே பெரிய அளவில் பாதிப்பில்லை எனச் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 18 சதவீதமும், இறக்குமதியில் 6.22 சதவீதமும், இருதரப்பு வர்த்தகத்தில் 10.73 சதவீதமும் அமெரிக்கா பங்கு வகிக்கிறது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறாலுக்கு அமெரிக்க மிகப்பெரிய சந்தையாக உள்ளது. மொத்த இறால் ஏற்றுமதியில், 40 சதவீதத்தை அமெரிக்காவிற்கு இந்தியா அனுப்புகிறது. 2023-24ம் ஆண்டில் இந்தியாவின் இறால் ஏற்றுமதி 7,16,004 டன்னாக இருந்தது.
தங்கம், வெள்ளி, அரிய வகை கனிமங்கள், மருந்துகள், செமிகண்டெக்டர், எரிசக்தி, ஐடி சேவை உள்ளிட்டவற்றுக்குப் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தையை இந்திய மருந்து துறை கொண்டுள்ளது.
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்படும் தாக்கம் குறித்து வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி கூறுகையில், ‘ இந்திய வேளாண் ஏற்றுமதியில் குறைவான தாக்கமே ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரிசி மற்றும் கடல் உணவு வகைகள் அமெரிக்க ஏற்றுமதியில் தாக்கம் ஏற்படும். அதே நேரம், இந்தியா தனது வேளாண் ஏற்றுமதியை விரிவுபடுத்தி இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும்’ என்றுள்ளார். இதேபோல் ஜவுளித்துறையிலும் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணிப்புகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பினால் ஏற்பட இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க, மத்திய அரசு தெளிவான பொருளாதார கொள்கையை வகுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு இந்தியா என்ன மாற்று ஏற்பாட்டைக் கொண்டுள்ளது என இது வரையில் எதுவும் கூறவில்லை. மத்திய அரசின் முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
nhm02o
1cwb6l