கல்வி வளர்ச்சியில் திமுகவின் பங்கு அளப்பரியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து அத்துறை மேலோங்க புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இணைய சேவை வசதி செய்துதர முடிவெடுத்துள்ளது திராவிட மாடல் அரசு.
கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட நீதிக்கட்சி 100 ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை வகுத்தது. நீதிக்கட்சியின் நீட்சியான திராவிட கட்சிகள் இந்த திட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன.
வயிற்றுக்கு நிறைவும், செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளிச்சாலைகளை மாற்றும் முயற்சியாக சமூகநீதியை உள்ளடக்கிய காலை உணவுத்திட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர். மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் படாமலிருத்தலை உறுதி செய்தல், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், இரத்தசோகை, குறைபாட்டினை நீக்குதல், மாணவர்களின் வருகையை அதிகரித்தல், தக்க வைத்துக்கொள்ளுதல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகிய குறிக்கோள்களைக் கொண்டு இந்த திட்டத்தினை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் இந்த காலை உணவுத்திட்டம் மூலம், தினமும் அரசுப்பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த காலை உணவுத் திட்டத்தினால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் திட்டங்களை தந்த திராவிட மாடல் அரசு, கல்வித்துறையில் ஒரு புரட்சியாக தமிழ்நாட்டின் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 19,668 அரசுப்பள்ளிகளில் இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி சேவை பணி நிறைவடையும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
அரசின் இந்த முயற்சி, அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல பேருதவியாக என்று கல்வியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.