தமிழகத்தையே உலுக்கி எடுத்தது மருத்துவர் சுப்பையாவின் படு கொலை. 50 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்து தகராறில் இந்த படுகொலை அரங்கேறியது.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் அஞ்சுகிராமத்தில் உள்ள 10 கோடி ரூபாய் மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில் கடந்த 2013ம் ஆண்டில் செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழக மக்கள் அதிர்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு சுப்பையாவின் பூர்வீகம். சுப்பையாவின் தாய்மாமன் பெருமாள். இவர் அன்னபழம் என்பவரை 2வது திருமணம் செய்திருக்கிறார். திருமணம் ஆனதும் பெருமாளை விட்டு விட்டு பிரிந்து சென்று 3 வருடங்கள் கழித்து கைக்குழந்தையுடன் வந்திருக்கிறார். அது தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று சொல்லி ஆவேசம் அடைந்த பெருமாள், தன் சொத்தை சகோதரி அன்னக்கிளி, அதாவது சுப்பையாவின் தாயார் பெயரில் எழுதி வைத்துவிடுகிறார். இதனால்தான் 50 ஆண்டுகளால நடந்த சொத்து தகராறு படுகொலையில் முடிந்தது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரபல நரம்பியல் மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற சுப்பையா துரைப்பாக்கத்தில் வசித்து வந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து காரில் வீட்டுக்குக் செல்ல முயன்றபோதுதான் கூலிப்படையினர் வெட்டினர். இதில் படுகாயமடைந்த தனியார் மருத்துவமனையில் 9 நாட்கள் உயிருக்கு போராடி சிகிச்சை பலனின்றி 23ம் தேதி உயிரிழந்தார்.
இவரின் படுகொலை குறித்து சுப்பையாவின் மைத்துனர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை தொடர்பாக ஆசிரியர், வழக்கறிஞர் உள்பட 10 பேரை கைது செய்தனர். ஆசிரியர் பொன்னுசாமி, மேரி புஷ்பம், ஐயப்பன், செல்வ பிரகாஷ், யேசுராஜன், வழக்கறிஞர் பாசில், வழக்கறிஞர் வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினியர் போரிஸ் உள்ளிட்ட 10 பேர் கைதாகினர்.
இதுகுறித்த வழக்கை விசாரித்து வந்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நிதிபதி, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 4.8.2021ல் தீர்ப்பளித்தார்.
10 பேர் கைதாகி இருந்த நிலையில் அதில் ஒருவர் போலீஸ் விசாரணையில் அப்ரூவர் ஆகிவிட்டதால் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறியிருந்தார். கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் அப்ரூவர் ஆனதுதான் இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் படுகொலை செய்ததில் உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என்று மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லிஅ தீர்ப்பளித்தார்.
பொன்னுசாமி, பாசில், ஜேம்ஸ் சதீஷ்குமார், வில்லியம்ஸ், முருகன், போரிஸ், செல்வ பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையும், யேசுராஜன், மேரி புஷ்பம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி அல்லி. இந்த வழக்கில் ஐயப்பன் அப்ரூவர் ஆனதால் அவருக்கு எந்த தண்டனையும் அளிக்கவில்லை.
தீர்ப்பை கேட்டதும் 9 பேரும் மிகுந்த சோகத்தில் இருந்தபோது, டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி, மகள் சுவேதா, ஷிவானி ஆகியோர் ஆனந்த கண்ணீர் விட்டனர். ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்து கொள்ளவில்லை. கொலை மற்றும் கூட்டுச்சதி குற்றச்சாட்டுகள் போலீஸ் தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டபோது, அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இறுதியில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு, குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது என்று சொல்லி, 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு மற்றும் ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். வேறு வழக்குகள் விசாரணைக்கு தேவை இல்லை என்றால் 9 பேரையும் விடுதலை செய்யலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.