
droupadi murmu spark media
ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்து தீர்ப்பளித்த நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு, 10 மசோதாக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
மேலும், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாவிற்கு ஆளுநர் 1 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாவிற்கு 3 மாதத்திற்குள்ளும் முடிவெடுக்க வேண்டும் என்ற கால வரம்பையும் நிர்ணயித்தது.
இந்நிலையில், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசியலமைப்புச் சட்டத்தில் கால வரையறைகள் இல்லாதபோது, உச்ச நீதிமன்றம் எப்படி இத்தகைய தீர்பினை வழங்க முடியும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்கள் எழுப்பப்பட்டுள்ளது.

கேள்விகள்:
- பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?
- ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, அவர் தன்னிடம் உள்ள அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
- பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நியாயப்படுத்தத்தக்கதா?
- பிரிவு 200-ன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?
- அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறைகள் இல்லாத நிலையில், பிரிவு 200-ன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநர் பயன்படுத்தும் நோக்கத்திற்காக, நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு விதிக்க முடியுமா?
- பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
- அரசியலமைப்பு நிர்ணயித்த காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவர் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத பட்சத்தில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா? நடைமுறைப்படுத்தும் முறை பரிந்துரைக்கப்படுமா?
- ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும் போது, பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் கருத்தைப் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?
- பிரிவு 200 மற்றும் 201-ன் கீழ் ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பே, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
- குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்களை பிரிவு 142-ன் கீழ் மாற்ற முடியுமா?
- மாநில சட்டமன்றத்தால் கொண்டு வரப்பட்ட மசோதா பிரிவு 200-ன் கிழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறையில் உள்ள சட்டமாகுமா?
- பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா?
- அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரின் அதிகாரங்களைத் திருத்தவோ அல்லது மாற்றவோ பிரிவு 142 பயன்படுத்த முடியுமா? மேலும், முரணான உத்தரவுகள் அல்லது ஆணைகள் பிறப்பிக்கப்படும் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுமா?
- பிரிவு 131-ன் கீழ் வழக்கு தொடர்வதைத் தவிர மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான முரண்களை தீர்க்க உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறதா?