
Come September என்று வசந்த காலத்தை வரவேற்கிறது ஐரோப்பிய கண்டம்.
திராவிட இயக்கம் இந்த இனத்தின் வசந்த காலம்.
பெரியார், அண்ணா, திமுக பிறந்த செப்டம்பர் மாதம், திராவிட மாதம்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனியில் மாண்புமிகு முதலமைச்சர் ஜெர்மன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடினார். செப்டம்பர் 4 அன்று இங்கிலாந்தில் உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
திராவிட இயக்கத் தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி விட்டன.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய நீதிக்கட்சித் தலைவர் டி.எம்.நாயரில் தொடங்கி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட பல திராவிடத் தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள் சமூக நீதியின் அடித்தளத்தை வலுப்படுத்தி, சமூக நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த துணை நின்றுள்ளன.
உலகம் சுற்றும் திராவிடத்தையும், அந்தப் பயணங்கள் தமிழ்நாட்டை பல இலக்குகளில் உலகத் தரத்திற்கு உயர்த்தியதையும்.
அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்காக..
இந்தத் தொடர் கட்டுரை…
ஒரு மாநில முதலமைச்சர் வெளிநாடு செல்வது பெரிய செய்தியுமல்ல, புதிய தகவலுமல்ல. ஆனால், ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக வெளிநாடு செல்வது என்பது 57 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஆச்சரியமான செய்திதான்.
தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மாகாணமாக இருந்த போது First Minister, Premier என்ற பெயரில் முதலமைச்சர்கள் இருந்த மாநிலம் இது. சுதந்திர இந்தியாவிலும் நம் மாநிலத்திற்கு புகழ்மிக்க முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள்.

அந்த முதலமைச்சர்களின் பயணங்கள் நிர்வாகரீதியான கவனம் பெற்றிருக்கிறதே தவிர, சித்தாந்த ரீதியாக தனிக் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அவர்களின் கட்சித் தலைமை டெல்லியில் இருந்தது. அல்லது டெல்லியின் அரசியல் கண்ணோட்டத்திற்கேற்ப செயல்படக்கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் ஒரு முதலமைச்சரின் அரசுப்பணி சார்ந்த கடமையாகத்தான் வெளிநாட்டுப் பயணங்கள் கருதப்பட்டன. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. முதலமைச்சர் அண்ணா 1968 ஏப்ரல் 15ஆம் நாள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அங்குள்ள யேல் பல்கலைக்கழகத்தில் அவருக்கு Chub Fellowship பட்டம் வழங்கப்படும் நிகழ்வையொட்டி அமெரிக்காவுக்கும் ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குமாக ஒரு மாத காலப் பயணத்தை மேற்கொண்டார் அண்ணா. பயணத்திற்கு முன்பாக அண்ணாவைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கேட்ட கேள்விகளும், அண்ணா அளித்த பதில்களும், திராவிட இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வையையும், தனித்த சிந்தனையையும், அண்ணா மேற்கொள்ளும் பயணத்தின் முக்கியத்துவத்தையும் தெளிவாக உணர்த்தின.
பயணத்திட்டத்தின் நோக்கம் என்ன என்று அண்ணாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் விரிவாகவே பதில் தந்தார். “நான் யேல் பல்கலைக்கழகத்தில்ற்குச் செல்ல இருக்கிறேன். அப்பல்கலைக்கழகத்திற்கு வருமாறு என்னை அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு மாதங்களுக்கு முன் அழைத்தார்கள். அப்பல்கலைக்கழகத்தில் ஐந்து நாட்கள் தங்குவேன். அங்கு நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வேன். அங்கு கல்வித்துறையில் என்னென்ன வசதிகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரப்படுகின்றன. ஆசிரியர்கட்கும் மாணவர்கட்குமுள்ள நட்புறவுகள் என்ன என்பனவற்றைக் கவனித்திடவும் ஆராய்ந்திடவும் எண்ணி இருக்கிறேன்” என்று விளக்கினார் அண்ணா.
தனது அமெரிக்கா பயணத்தின் போது மேலும் பல பகுதிகளுக்கு செல்ல இருப்பது குறித்தும் அவர் தெளிவாக சொன்னார். “நான் பல அமெரிக்க மாநிலங்களுக்குப் போவதாக இருக்கிறேன். எடுத்துக்காட்டாக கான்சாஸ் மாநிலத்திற்குச் செல்வது, அங்குள்ள வேளாண் ஆராய்ச்சிப் பண்ணையை நேரில் கண்டறிந்து அதன் நுட்பங்கள் பவலற்றைத் தெரிந்து கொள்ள முயல்வேன். அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் தொழிற்சாலை நிர்வாகம் என்னை அங்கு வரும்படி அழைத்திருக்கிறது. அங்கு சென்று பார்வையிடுவேன். ஹவாய் தீவுக்கு சென்று கிழக்கு-மேற்கு கலாச்சாரம் பற்றி பேச இருக்கிறேன். ரோம் நகரில் போப் அவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறேன். பாரீஸில் ஐ.நா.வின் கிளைக் கழகமான யுனெஸ்கோவில் தங்க இருக்கிறேன். பாரிசில் அடுத்த உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருக்கிறது. அது பற்றி யுனெஸ்கோ பொதுச்செயலாளர் மால்கம் ஆதிசேஷய்யா அவர்களிடம் பேச்சு நடத்த இருக்கிறேன். ஜப்பானில் தங்கி இருக்கும்போது சேலம் இரும்பாலைத் திட்டம், தூத்துக்குடி மீன்பிடி படகுத் துறைத் திட்டம், வேதிஇயல் தொழிலுக்கு உதவி பெறுவது ஆகியவை குறித்தும் பேசுவேன்” என்று தன் பயணத்திட்டம் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தெந்த வகையில் உதவும் என்பதை செய்தியாளர்களிடம் அண்ணா விளக்கினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணா தன் மாநிலத்தின் நலனுக்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டாலும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1962ஆம் ஆண்டு தனது முதல் உரையில், I belong to the Dravidian Stock என்று சொன்னவராயிற்றே.. அதனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றி அயல்நாடுகளில் என்ன சொல்வீர்கள் என்று செய்தியாளர்கள் அண்ணாவிடம் கேட்டார்கள்.
இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு பதவியேற்பு உறுதிமொழி எடுத்தவர் அண்ணா. அதனால், வெளிநாட்டுக் கொள்கை பற்றி முன்கூட்டிய பிரதமர் இந்திராகாந்திக்கு கடிதம் எழுதி, அது பற்றி பதிலையும் பெற்றிருந்த அண்ணா, “வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை எங்களுக்கு ஏறத்தாழ பொதுவான கருத்தொற்றுமை இருக்கிறது” என்பதை செய்தியாளர்களிடம் சொன்னார். அப்போதைய காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (ரஷ்யா) பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம்.
உலக நாடுகள் அமெரிக்கா பக்கமோ அல்லது ரஷ்யா பக்கமோ ஏதேனும் ஒரு வல்லரசுக்கு ஆதரவாக அணிவகுத்து நின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நேரு காலத்திலிருந்தே சோவியத் யூனியனான ரஷ்யாவுடன் நட்புறவு நிலவியது. என்றாலும், எந்த ஒரு வல்லரசு பக்கமும் சார்பு நிலை எடுக்காமல், அணி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இந்தியாவின் தலைமையில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தன. பிரதமர் இந்திராகாந்தியும் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அதுபற்றி, பிரதமரின் கடிதம் மூலம் கருத்துகளை அறிந்து கொண்டதாக செய்தியாளர்களிடம் அண்ணா தெரிவித்தபோது, வியட்நாம் நிலை பற்றிய கேள்வியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்திருந்த நிலையில், வல்லரசின் தாக்குதலை வியட்நாமின் மக்கள் படை துணிவாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொண்டது. வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்ற குரல்கள் உலகின் பல நாடுகளிலும் எதிரொலித்தன. இந்தியாவின் ஆதரவும் வியட்நாம் பக்கம்தான். குறிப்பாக பொதுவுடைமை இயக்கத்தினரும், திராவிட இயக்கத்தினரும் வியட்நாம் மக்களின் நியாயத்தையும் தீரத்தையும் ஆதரித்தனர். வியட்நாம் குறித்த தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை அண்ணா விளக்கினார்.
“வியட்நாம் பிரச்சினையில் இராணுவத் தீர்வு கூடாது என்பது நம் கருத்து. அமெரிக்க குடியரசுத் தலைவரே அமைதிப் பேச்சுகளைத் துவங்க முன்முயற்சி எடுத்து வருகிறார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடக்கும் தருணத்தில் நான் அமெரிக்கா செல்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்ற அண்ணாவின் சொற்களில், உலக அமைதிக்கான அவருடைய தெளிவானப் பார்வை வெளிப்பட்டது.
எத்தனை உயர்வான கருத்துகளைத் தெரிவித்தாலும், செய்தியாளர்கள் எப்போதும் மிக சாதாரணமான, ரொம்பவும் இயல்பான விஷயத்திற்கெல்லாம் கேள்வி கேட்டு, அதற்கானப் பதிலைப் பெற்று, அதை பரபரப்பாக்க வேண்டும் என நினைப்பது அப்போது முதல் இப்போது வரை தொடர்கிறது. அப்படி ஒரு கேள்வியை அண்ணாவிடம் நிருபர்கள் கேட்டார்கள்.
“வெளிநாட்டிற்கு எந்த உடையில் செல்வீர்கள்?”
“சாதாரண உடையில்தான் செல்வேன். சில இடங்களில் குளிர் இருப்பதால் வெப்பம் தரும் உடைகளைக் கொண்டு செல்கிறேன்” என்றார் அண்ணா.
உடை என்பது தேவைக்கேற்றபடி அணிவதுதான் அதில் பாரம்பரியப் பெருமையோ, ஆடம்பர அலங்காரமோ முக்கியமல்ல என்பதை உணர்த்திவிட்டு அமெரிக்கா புறப்பட்ட அண்ணா, அங்கே நிகழ்த்திய சம்பவங்கள்…
(சுற்றும்)