
ஜெர்மனியில் மிகவும் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனம், கொலோன் பல்கலைக்கழகம். அங்கு தமிழ்த்துறை உள்ளது. அதில் உள்ள நூலகத்தில் பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், பல அரிய நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகளவிலான மொழி ஆய்வாளர்களுக்கு அந்தத் தமிழ்த் துறை நூலகம், அள்ள அள்ளக் குறையாக இலக்கியத் தங்கச் சுரங்கம். உலகில் எத்தனையோ தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டிருக்கின்றன. கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை எனும் தங்கச் சுரங்கத்தை மூடும் நிலை வந்தபோது, அதனைத் தடுத்தாட்கொள்ளும் வகையில், பல தமிழ் அமைப்புகளும் முன்வந்த நிலையில், தனது பங்களிப்பாக ஒரு கோடியே இருபத்தைந்து இலட்ச ரூபாயை வழங்கியது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. தனது ஜெர்மனிப் பயணத்தில் அந்த கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தையும் அங்குள்ள ஓலைச்சுவடிகளையும் பார்த்து பரவசமடைந்திருக்கிறார் முதலமைச்சர்.

தமிழ் நமக்கு உயிர் போன்றது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறது தமிழ்மறையான திருக்குறள். தன்னுயிர் போல் மண்ணில் வாழும் மனித உயிர்களை நேசிப்பதே தமிழ்ப் பண்பாடு. திராவிட இயக்கத்தின் உரிமை சார்ந்த போராட்டங்களும், நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளும் இந்தப் பண்பாட்டின் தொடர்ச்சி.
1968 ஏப்ரலில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, பிரான்ஸ் தலைநகர் பாரீஸூக்கு சென்றார். உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகளையும் அதற்காகத் தயாரிக்கப்பட்ட மலரையும் பார்த்து அங்கு யுனெஸ்கோவின் மால்கம் ஆதிசேஷய்யா மற்றும் தமிழ் வல்லுநர்களுடன் ஆலோசித்தார். ஐரோப்பிய நாட்டில் தமிழ் மலர் அழகாகப் பூத்திருப்பதில் அண்ணாவுக்கு மகிழ்ச்சி. அதை அவர் தன் கைகளில் வைத்துக் கொண்டார்.

பிரான்ஸிலிருந்து இத்தாலி நாட்டின் வாடிகன் நகருக்கு வந்தார். அதுதான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பின் தலைமையகம். பகுத்தறிவாளரான அண்ணா எதற்காக கிறிஸ்தவ மதத் தலைவரான போப் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்? என்ன திட்டம்? மதமாற்றமா? -இன்றைய நிலையில் இப்படி ஆயிரம் கேள்விகள் எழும். எழுப்பப்படும். அன்று வாட்டிகனுக்கு அண்ணா சென்றது, தன் மனதில் தேங்கியிருந்த ஒரு கேள்விக்கான நியாமான-மனிதாபிமான விடையை எதிர்பார்த்துதான்.
1947க்கு முன் இந்தியாவின் பெரும்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. புதுச்சேரி (பாண்டிச்சேரி), காரைக்கால் உள்ளிட்ட பகுதிகள் பிரான்ஸ் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தன. இன்றைய கோவா அப்போது போர்ச்சுகல் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்தபிறகும் இந்தப் பகுதிகள் அந்தந்த நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்தன. 1954 நவம்பர் 1ஆம் நாள் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பிரான்ஸ் ஆதிக்கப் பகுதிகள் விடுதலை பெற்று இந்திய யூனியனுடன் இணைந்தன. ஆனால், கோவா தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டின் ஆட்சியதிகாரத்தின் கீழ் இருந்தது.
காந்திய வழி இந்திய விடுதலைப் போராட்டம் போல கோவா விடுதலை இயக்கத்தின் சார்பிலும் சத்தியாகிரகங்கள் நடந்தன. போர்ச்சுகல் நாடு கண்டுகொள்ளவில்லை. போராட்ட முறைகள் மாறின. போர்ச்சுகல் கோவாவுக்கும் சுதந்திர இந்தியாவுக்குமான எல்லைப் பகுதியில் வாய்ஸ் ஆஃப் ப்ரீடம் என்ற வானொலி தொடங்கப்பட்டு, விடுதலைக் குரல்கள் ஒலிபரப்பாகின. கோவா விடுதலைக்கானப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டக்காரர்களை ஒடுக்க துப்பாக்கியைப் பயன்படுத்தியது கோவாவில் இருந்த போர்ச்சுகல் போலீஸ். காவல்நிலையங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
மூவர்ணக் கொடியை கீழே இறக்கி அவமதித்த போர்ச்சுகல் காவலர் ஒருவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார். போலீஸ் நிலையங்களைத் தாக்கிய போராட்டக்காரர்கள், அங்கிருந்து ஆயுதங்களை அள்ளிச் சென்று, கோவா விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மோகன் ரானடே.
பேட்டிம் என்ற இடத்தில் இருந்த காவல்நிலையத்தை 1955ஆம் ஆண்டு தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றபோது, போலீசின் துப்பாக்கிச் சூட்டில், வயிற்றில் குண்டடிப்பட்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டார். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் போர்ச்சுகல் நாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ரானடேவுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் அருகே உள்ள காக்சியஸ் என்ற இடத்தில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் மோகன் ரானடே.

கோவாவில் விடுதலை போராட்டம் தொடர்ந்து வலுத்த நிலையில், ரானடே சிறைப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து, இந்திய ராணுவத்தின் தலையீட்டால் 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று போர்ச்சுகல் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து கோவா விடுதலை அடைந்து, இந்தியாவுடன் முறைப்படி இணைக்கப்பட்டது. கோவா இந்தியாவுடன் இணைந்தாலும் அதன் விடுதலைக்காகப் பாடுபட்ட ரானடே, அதன்பிறகும் போர்ச்சுகல் நாட்டுச் சிறையில்தான் இருந்தார். அவரை விடுதலை செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் எடுபடவில்லை. கோவா விடுதலையடைந்து 7 ஆண்டுகளாகியும் ரானடே சிறையில் இருப்பதை அறிந்தார் அண்ணா. அவர் ரானடேவை முன்பின்கூட பார்த்ததில்லை. ரானடே, பகுத்தறிவு-முற்போக்கு சிந்தனையாரல்ல. சாவர்க்கர் போன்ற வலதுசாரிகளின் அரசியலால் ஈர்க்கப்பட்டவர்.
வழியும் சிந்தனையும் மாறுபட்டிருந்தாலும், தன் மண்ணின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒருவர், அந்த மண் விடுதலை பெற்ற பிறகும், அந்நிய நாட்டின் சிறையில் இருப்பது நியாயமுமல்ல, மனிதாபிமானமுமல்ல என்பதே அண்ணாவின் எண்ணம்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து அறிந்தவர் அண்ணா. அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தபோது, தன் அருகில் இருந்த ஜனசங்க கட்சியின் எம்.பி. அடல் பிகாரி வாஜ்பாய், ரானடேவின் விடுதலக்காக பேசியதைக் கேட்டிருக்கிறார். அதனால்தான், தன் அமெரிக்கப் பயண நிகழ்ச்சிகள் தொடர்பாக பிரதமர் இந்திராவுக்கு கடிதம் எழுதி, இந்திய நிலைப்பாடுகள் குறித்து அண்ணா கேட்டறிந்தார். முதலமைச்சரான அண்ணாவின் ஜனநாயகத் தன்மையை[யம் அவருடைய பக்குவத்தையும் இந்திரா அம்மையாரும் அறிந்தவர் என்பதால், அண்ணாவுக்குள்ள உரிமையை சுட்டிக்காட்டி பதில் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்தான், போர்ச்சுகல் நாடு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் நாடு என்பதால், கத்தோலிக்கத் தலைவரான போப் ஐந்தாம் பால் அவர்களை வாடிகனில் அண்ணா சந்தித்தார்.
போப் சொன்னால் போர்ச்சுகல் அரசு நிச்சயம் கேட்கும் என்பதை உணர்ந்தே, வாடிகன் நகரில் 1968 ஏப்ரல் 17 அன்று போப் ஐந்தாம் பால் அவர்களை சந்தித்த அண்ணா, ரானடேவின் விடுதலைக்கு உதவ வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு, போப்பிடம் திருக்குறள் ஆங்கில உரைநூல், பாரீஸ் உலகத் தமிழ் மாநாட்டிற்கான மலர், இன்னும் சில புத்தகங்களை பரிசாக அளித்தார்.
போப்புடனான அண்ணாவின் சந்திப்புக்குப் பிறகு, 1969 ஜனவரியில் ரானடேவை போர்ச்சுகல் அரசு விடுதலை செய்தது. 14 ஆண்டுகால சிறைவாசம் முடிந்தது. அதன்பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான நடைமுறைகள், அதற்கான சட்ட முயற்சிகள் எல்லாம் நிறைவடைந்து 1969 மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்த ரானடேவை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் இந்திராகாந்தி நேரில் வரவேற்றார்.
“உங்கள் கோவாவுக்கு நீங்கள் போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார் பிரதமர். அப்போது ரானடே, “நான் முதலில் மெட்ராஸ் போக விரும்புகிறேன்” என்றார். இந்திராகாந்தி ஆச்சரியத்துடன் பார்த்தார். ரானடேவோ, “என்னுடன் இருந்தவர்கள் கூட என்னை மறந்தவிட்ட நிலையில், என் விடுதலைக்காக போப்பிடம் வலியுறுத்தி, இந்த விடுதலையை சாத்தியமாக்கிய முதலமைச்சர் அண்ணாதுரையைப் பார்க்க வேண்டும்” என்றார்.
இந்திராகாந்தி சற்று துயரமான குரலில், “அண்ணாதுரையை நீங்கள் பார்க்க முடியாது. உடல்நலன் பாதிக்கப்பட்டு அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்” என்றார். ரானடே கலங்கினார். பிரதமர் இந்திராவின் பக்கத்தில் தி.மு.க.வின் எம்.பி. நாஞ்சில் மனோகரன் நின்று கொண்டிருந்தார். ரானடேவை நாஞ்சிலார் சென்னைக்கு அழைத்து வந்தார். அண்ணா புதைக்கப்பட்ட கடற்கரை சதுக்கத்தில் கதறிய ரானடே, தன் விடுதலைக்கு காரணமான அண்ணா எனும் முகமறியா மாமனிதருக்கு கண்ணீரால் நன்றி செலுத்தினார்.
அமெரிக்கா செல்லும் வழியில் வாடிகன் நகரில் கிடைத்த சில மணித்துளிகள் சந்திப்பில் பெரும் காரியத்தைச் செய்தவர் அண்ணா. அதனால்தான் அவர் பேரறிஞர்.
(சுற்றும்)
-கோவி. லெனின்