
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதுபோல பெரியாரும் பிரெஞ்சு ராணுவ வீரர்களும் பேசிக்கொண்டிருந்த போது நடுநடுவே உணவு கொண்டு வரப்பட்டது. புதுச்சேரி துறைமுகத்தில் கப்பல் நின்றபோது அங்குள்ள சுயமரியாதை இயக்கத்தினர் கப்பலில் வந்து பெரியாரையும் இராமநாதனையும் வாழ்த்திவிட்டு, கையோடு கொண்டு வந்திருந்த உணவு வகைகளை பரிமாறினார்கள். கொழும்பிலும் தமிழர்கள் நம் வழக்கமான உணவை வழங்கினார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை கரை தெரியாத தொடர் கப்பல் பயணத்தில் அதன்பிறகு கொடுக்கப்பட்ட உணவு என்ன என்பதை பெரியார் குறிப்பிடுகிறார். “சோல்ஜருக்கு கொடுக்கப்பட்ட ஆகாரமே எங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதாவது தினம் 2 வேளை வேக வைத்த உருளைக் கிழங்கும், கொள்ளு அல்லது அவரை, கடலை முதலிய ஏதாவதொரு தானியமும் வேகவைத்து கொடுப்பதுடன், உருண்டை ரொட்டி 3-ம் இதுகளும் மாட்டு மாமிசத் துண்டும், சாராயமும் கொடுக்கப்படுவது வழக்கம். காலையில் பால் இல்லாத காப்பியும் ரொட்டியும் உண்டு. இவற்றுள் சாராயம், மாட்டு மாமிசம் ஆகியவைகளை நாங்கள் உபயோகிக்வில்லை. மற்றதுகளுடனும், கொழும்பிலும் சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் வாங்கின பிஸ்கட், ஆரஞ்சுப்பழம் ஆகியவைகளுடனும் காப்பி, டீயுடனும் சரிப்படுத்திக் கொண்டோம்”
டிசம்பர் 17ந் தேதி கொழும்பு துறைமுகத்தில் கரையைப் பார்த்த பெரியார் அதன்பிறகு 7 நாட்கள் கழித்து டிசம்பர் 24ந் தேதி ஜிபுட்டி (Djibouti) என்ற பிரெஞ்சு துறைமுகத்தைப் பார்க்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபுட்டி அப்போது பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. பெரியாரும் இராமநாதனும் பயணித்தது பிரான்ஸ் நாட்டு கப்பல் என்பதால் அந்த துறைமுகத்தில் நங்கூரமிட்டது. உப்பு நீரின் தேசம் என்று ஜிபுட்டி அழைக்கப்படுகிறது. உலகின் அதிகளவிலான உப்பு நீர் நிலைகள் இந்த நாட்டில் இருக்கிறதாம். எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா நாடுகளை எல்லையாகக் கொண்டத ஜிபுட்டியை, ஆப்பிரிக்காவின் கொம்பு என்கிறார்கள். ஆப்பிரிக்க வரைபடத்தில் அந்த நாடு சற்று நீண்டிருப்பதை காணலாம்.
Amboise கப்பலில் இருந்த ராணுவ வீரர்களிடம், ஜிபுட்டி தேசத்தின் முக்கியத்துவம் பற்றி பெரியார் விசாரிக்கிறார். “பிரெஞ்சு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த மடகாஸ்கர் தீவுக்கு ஏற்றுமதி செய்ற பொருட்களுக்கும் இறக்குமதி செய்கிற பொருட்களுக்கும் ஜிபுட்டிதான் துறைமுகம். இறங்கிப் பார்த்துட்டு வாங்க” என்கிறார்கள். பெரியாரும் இராமநாதனும் ஜிபுட்டியில் வாழும் மக்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் தெரிந்துகொள்ளலாம் என தரையிறங்கினார்கள்.
அரபு மொழி பேசும் முஸ்லிம் மக்கள் வாழும் நாடு என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால் பிரெஞ்சுக்காரர்களும் உலவிக் கொண்டிருந்தார்கள். கருத்த நிறமும் சுருண்ட முடியும் கொண்ட ‘கமாலியர்’ என்ற சமூகத்தினரே அங்கு அதிகம். வசதி வாய்ப்பற்ற ஏழைகள். கூலித் தொழிலாளர்களாக துறைமுகத்திலும் மற்ற பகுதிகளிலும் அவர்கள் வேலை செய்வதைப் பெரியார் பார்க்கிறார். கமாலியர் சமூக பெண்கள் நம் நாட்டு மலைவாழ் மக்களைப்போல அணிகலன்களுடன், நீளமான உடை அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். யாரும் முகத்தை மூடியிருக்கவில்லை. முக்காடு மட்டும் போட்டிருந்ததாகக் குறிப்பிடும் பெரியார், அரபு நாட்டில் இருந்து ஜிபுட்டிக்கு வந்து வணிகம் செய்பவர்களையும் பார்க்கிறார்.
“நம் பக்கத்திய அதாவது மரைக்காயர்கள் ராவுத்தமார்களைப் போல சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல உடை உடுத்திக்கொண்டு சுத்தமாகவும், நல்ல தோற்றத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் முதலாளிகளாகவும் சற்று நாகரிக வாழ்க்கைக்காரர்களாகவும் காணப்படுகிறார்கள். இங்கு பம்பாய், குஜராத்தி வியாபாரிகள் சிலரையும் பார்த்தோம்” என்று பெரியார் பதிவு செய்கிறார். எந்த மண்ணில் கால் வைத்தாலும் அந்த மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், மனிதர்களை எது வேறுபடுத்துகிறது என்பதையெல்லாம் பெரியார் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். ஜிபுட்டியிலிருந்தும் கடிதங்கள் எழுதி அனுப்பிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.
செங்கடலில் கப்பல் பயணம் பெரியாருக்குப் பிடித்திருந்தது. பல கப்பல்கள் கடந்து செல்வதைக் கவனித்தார். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப்பல்களைப் பார்த்தவர், அதன்பின் ஒரு மணி நேரத்திற்கு கப்பல்கள் கடந்து போவதைக் கவனித்தார். “சூயஸ் போர்ட் கிட்ட வந்துட்டோம்” என்றனர் பிரான்ஸ் ராணுவத்தினர்.
டிசம்பர் 29ந் தேதியன்று சூயஸ் துறைமுகத்திற்கு Amboise கப்பல் வந்து சேர்ந்தது. குளிர் காற்றை உணர்ந்தார் பெரியார். நான்காவது வகுப்பில் பயணிப்பவர்கள் பட்டியில் அடைபட்டவர்கள் போல புழுக்கத்தில்தான் இருந்தனர். இப்போதுதான் வெக்கை தணிந்தது போன்ற உணர்வு. சூயஸ் துறைமுகத்தில் நின்ற மற்றொரு கப்பலைக் கண்டு அதிசயித்தார் பெரியார். “வாங்க பாக்கலாம்” என்று கூப்பிட்டார் இராமநாதன்.
Empress of Britain (பிரிட்டன் பேரரசி) என்பது அந்தக் கப்பலின் பெயர். பெயருக்கேற்பவே அழகும் அலங்காரமும் இணைந்து பிரம்மாண்டமாக இருந்தது. கனடியின்-பசிபிக் போக்குவரத்துக் கப்பலான Empress of Britain 42,500 டன் எடை கொண்டது. மணிக்கு 20 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அன்றைய காலத்தில் இத்தனை பிரம்மாண்டமாகவும், இந்தளவு வேகமாகவும் செல்லக்கூடிய கப்பல் வேறெந்த நாட்டிலும் இல்லை. கடல் வியாபாரத்தில் அக்கறை செலுத்திய பிரிட்டிஷார், கப்பல் கட்டுமானத்திலும் புகழ் பெற்றிருந்தனர். பிரிட்டிஷாரின் டைடானிக் 2.0 என்று சொல்லலாம்.

ஒன்பது அடுக்குகள் கொண்ட அந்த பிரம்மாண்ட கப்பலை கடல் நீரில் பார்க்கும்போது, “நவீன ராஜமாளிகையே தண்ணீரில் மிதப்பது போல தோன்றும்” என்கிறார் பெரியார். எம்பரஸ் அறை என்பதுதான் கப்பலில் மிக முக்கியமான பகுதி. பயணிகளின் கேளிக்கைக்கான நடன அறை. டைடானிக் படத்தில் ரோஸ்-ஜேக் நடனக் காட்சிகளையும் அரங்கத்தையும் நினைவுபடுத்திக் கொள்ளவும். நீச்சல் குளம், ஸ்பீக்கர், அசுத்த காற்றை வெளியேற்றிவிட்டு, சுத்தமான காற்றை ஒவ்வொரு 7 நிமிடமும் உள்ளே அனுப்பும் வசதி இவற்றையெல்லாம் பெரியார் பார்க்கிறார். அவரை மிகவும் கவர்ந்தது, கரைக்கும் கப்பலுக்குமான டெலிபோன் வசதி. அறிவியல் தொழில்நுட்பம் மக்களை இணைக்க வேண்டும். அதற்கு இத்தகைய நவீனத் தொலைத் தொடர்பு அவசியம் என்பதுமே பெரியாரின் விருப்பம்.
அவர் சென்ற கப்பல் டிசம்பர் 29 மதியம் 2 மணிக்கு சூயஸ் கால்வாயில் பயணிக்கத் தொடங்கியது. செங்கடலுக்கும் மத்திய தரைக்கடலுக்குமிடையே 100 கிலோமீட்டர் நீளத்திற்கு மண்தரையில் கால்வாய் வெட்டி, கடலைத் திருப்பிவிட்ட மனிதப் பேராற்றலின் விளைவே சூயஸ் கால்வாய். இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான கடல் பயண தூரத்தையும் நாட்களையும் மிச்சப்படுத்தியது. இதைப் பயன்படுத்துவதற்கு டோல் கட்டணம் உண்டு என்பதை பெரியார் குறிப்பிட்டிருப்பதுடன் 1931ஆம் ஆண்டிலேயே ஒரு கப்பலுக்கு 10ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக அறிந்ததாகவும் சொல்கிறார்.
அன்றைய இரவு 10 மணிக்கு எகிப்தின் போர்ட் சைட் துறைமுகத்தில் Amboise கப்பல் நின்றது. அங்குதான் பெரியாரும் இராமநாதனும் இறங்க வேண்டும். 11 மணிக்கு இறங்கி, ஒரு வழிகாட்டிக்கு 7 ரூபாய் கொடுத்து, சாப்பாடு வசதியில்லாத ஒரு விடுதியில் தங்கினார்கள். காலையில் போர்ட் சைட் என்கிற புதிதாக உருவாக்கப்பட்ட நகரத்தின் கட்டமைப்பையும் பார்க்கிறார்கள். எகிப்து நாடு ஆப்பிரிக்காவில் இருந்தாலும் அங்குள்ள ஆண்களும் பெண்களும் ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருப்பதையும், கிறிஸ்தவர்களா முஸ்லிம்களா என வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவுக்கு அவர்களின் உடை இருந்ததையும் பெரியார் குறிப்பிடுகிறார்.
போர்ட் சைட்டிலிருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு ரயில் பயணம். பழம்பெருமை மிக்க எகிப்து நாகரிகம், உலகப் புகழ்பெற்ற நைல் ஆற்றின் சிறப்புகள், இந்திய ரயில்களில் உள்ள வகுப்புகளுக்கும் எகிப்து ரயில் வகுப்புகளுக்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள், மழை இல்லாத கிராமங்களில் மண்சுவர் வீடுகள்- பலகையை கூரையாக்கி அதன்மீது மண் பரப்பி அடுக்கு மாடிகளைக் கட்டியிருக்கும் விதம் எனப் பலவற்றையும் விவரித்தபடியே நம்மையும் பயணத்தில் அழைத்துச் செல்கிறார் பெரியார்.
இந்தியர்கள் மீது எகிப்தியர்களுக்கு உள்ள மதிப்பையும், ஐரோப்பியர்கள் மீதான அவர்களின் வெறுப்பையும் சுட்டிக்காட்டும் பெரியார், தன்னுடைய தாடியுடனான தோற்றத்தை பயணிகள் ஆர்வத்துடன் பார்த்ததையும் மகிழ்ச்சியாக சொல்கிறார். ஐரோப்பா நோக்கிப் பயணித்த அந்த தாடிக்காரர், முதலில் சென்ற ஐரோப்பிய நாடு… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தன்னைப் போலவே பகுத்தறிவு பேசிய தாடிக்காரரான சாக்ரடீஸ் பிறந்த கிரேக்கம்.
(சுற்றும்)
-கோவி. லெனின்