
அது ஹிட்லரின் ஆதிக்கத்திற்கு முந்தைய ஜெர்மனி. முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் ஜெர்மனியில் பெரியார் பயணித்தார். தலைநகரம் பெர்லினில் அவரும் இராமநாதனும் பல இடங்களைப் பார்த்தார்கள். மருத்துவம், மோட்டார் வாகன உற்பத்தி போன்றவற்றில் முன்னேறிக் கொண்டிருந்தது ஐரோப்பிய நாடான ஜெர்மனி.
இங்கிலாந்து, பிரான்ஸ் அளவுக்கு ஜெர்மனி பிற நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவில்லையென்றாலும், அந்த நாடுகள் ஜெர்மனியின் வலிமையை அச்சத்துடன்தான் பார்த்துக் கொண்டிருந்தன. குடியரசு நாடாக இருந்த ஜெர்மனியில் குடிஅரசு பத்திரிகை ஆசிரியரான பெரியார் பயணித்தார்.
சுதந்திர சிந்தனை கொண்டவர்கள் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து கொண்டிருந்தார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டதுடன், தங்களுக்கான தனி வாழ்க்கை முறையையும் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். அது பற்றி கூடி ஆலோசித்தார்கள். அதில் உருவானதுதான் Nude Societies எனும் நிர்வாண சங்கங்கள். அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக பெரியார் அந்த சங்கங்களுக்கு சென்று பார்த்தார்.

மதக்கட்டுப்பாடுகளை மீறுகின்ற உடையில்லா மனிதர்கள் என்பது அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும், மதத்தைப் பரப்பும் சாமியார்களிலும் உடை அணியாதவர்கள் உண்டு என்பதை தன் இளம் பருவத்திலேயே சாமியாராக ஆக வேண்டும் என நினைத்து, காசிக்கு சென்ற பெரியார் அறிவார். சுதந்திர சிந்தனை கொண்டவர்கள் உடைகளுக்கு ஏன் விடுதலை கொடுத்தார்கள் என்பதை அங்குள்ளவர்களிடம் கேட்டார் பெரியார். அவர்கள் விளக்கினார்கள்.
“உங்கள் நாட்டைப் போலவே உலகம் முழுவதும் மதம் என்பது பெண்களை அடக்கி வைக்கிறது. அவர்களுக்குத்தான் அத்தனைக் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்கிறது. கணவனுக்கும் குடும்பத்துக்கும் சமைத்துப் போடுவதற்காக அடுப்பங்கரையில் கிடக்க வேண்டும் என்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதற்காகவும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் ரஷ்யாவில் பெண்கள் போராடினார்கள். வெளியில் வந்தார்கள். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள பெண்களும், மதக் கட்டுப்பாடுகளை விரும்பாத ஆண்களும் வெளியே வந்து ஒன்று கூடினார்கள்”
“உரிமைக்காக வெளியே வருவதும் குரல் கொடுப்பதும் நல்லதுதான். அதற்கு ஏன் உடை அணியாமல் இருக்க வேண்டும்?”
“ஓ.. அதுவா? இயற்கையைத் தவிர வேறு எதுவும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதைக் காட்டுவதற்கான அடையாளமாக, கடற்கரை-ஆற்றங்கரை போன்ற இடங்களில் ஒன்று கூடி சூரிய வெளிச்சத்தில் Sun bath எடுத்தார்கள். அதற்காக ஆடைகளைக் களைந்தார்கள். பின்னர் அதுவும் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. எங்கள் ஜெர்மன் மொழியில் Freikorperkultur என்கிறோம். அதாவது, Free Body Culture என்று அர்த்தம்” என்றார்கள் நிர்வாண சங்கத்தினர். எதிர்ப்பு அல்லது கட்டுடைத்தல் என்பதன் ஓர் அடையாளமாக உடைகளைக் களைவது உலகின் பல நாடுகளிலும் வழக்கமாக உள்ளது.
இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில், சிறப்பு ராணுவச் சட்டத்தின் கீழ் அங்குள்ள மக்கள் கைது, சிறை, பாலியல் கொடுமைகள் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு ஆளானபோது, 2004ஆம் ஆண்டு அந்த மாநிலத்துப் பெண்கள், தங்கள் உடைகளைக் களைந்துவிட்டு, ஒரு துணிப் பதாகையைக் கொண்டு உடலை மறைத்தபடி, இந்திய அரசுக்கும் ராணுவத்திற்கும் எதிராகப் போராடியதை மறக்க முடியாது.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கி வந்த நிர்வாண சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்களை பாலுணர்வு இச்சை கொண்டவர்களாக அந்த நாட்டு அரசாங்கம் பார்க்கத் தொடங்கியது. தனித்துவமான சுதந்திர சிந்தனை கொண்டவர்கள் மதக் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி, அரசு நிர்வாகக் கட்டுப்பாடுகளையும் கண்டுகொள்ளாதவர்களாக வளர்ந்துவிடுவார்கள் என ஜெர்மனி அரசாங்கம் நினைத்தது. பொதுவாகவே, மதம்-கடவுள்-சம்பிரதாயம் போன்ற வலதுசாரி சித்தாந்தத்தை மீறுபவர்கள், இடதுசாரி சிந்தனை கொண்ட பொதுவுடைமைவாதிகளாவது வழக்கம். ஜெர்மனியின் சோஷலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் நிர்வாண சங்கத்திலிருந்து உருவாகிறார்கள் என அரசாங்கம் அஞ்சியது.
அங்குள்ள சூழல்களை பெரியார் உன்னிப்பாகக் கவனித்தார். அவரைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை அறிவார். ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு அதிகமாக இருந்தது. 1930களில் பொதுவாக இந்தியாவிலும் அதில் தமிழ்நாட்டிலும் படித்த பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அறிவியல் வளர்ச்சியும் போதுமான அளவில் இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரயில், தபால், தந்தி சேவைகள்தான் எளிய மக்களுக்கு கிடைத்த அதிகபட்ச அறிவியல் முன்னேற்றம். தனிப்பட்ட முறையிலான முன்னேற்றம் என்பது குறைவு.
Amboise கப்பலில் பயணிக்கத் தொடங்கியதிலிருந்து அந்தக் கப்பல் எந்தெந்த துறைமுகங்களில் நின்றதோ அங்கெல்லாம் இறங்கி மக்களின் வாழ்க்கை முறையை கவனித்து வந்தார் பெரியார். கெய்ரோவுக்கான ரயில் பயணத்திலும், அதன்பின் ஐரோப்பாவில் கிரேக்கம், போர்ச்சுகல் நாடுகளிலும் மக்களை கவனித்தார். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் எனப் பல மதத்தினரையும் அவர் சந்தித்தார். அவர்களது மதம் என்பது நம்பிக்கை சார்ந்ததாகவும், மனதுக்குள் மட்டுமே உள்ளதாகவும் இருந்தது. உடையிலோ, நெற்றிக்குறி போன்ற புறத்தோற்றத்திலோ வெளிப்படவில்லை.
இந்திய நிலைமை வேறு என்பதை அவர் அறிவார். உடையில் காணப்படும் வேறுபாடுகளுடன் நெற்றிக் குறியீடுகள் மூலம் சைவமா-வைணவமா, வடகலையா-தென்கலையா என்பதைச் சொல்லிவிடலாம். சட்டையைக் கழற்றினால் மதத்துடன் சாதி அடையாளத்தையும் பார்த்துவிடலாம். பெயர் வைப்பதில்கூட இந்த சாதிக்கு இன்ன பெயர்தான் என்றிருந்த காலம் அது. அன்றாட வாழ்வில் மதமும் சாதியும் அதற்கேற்ற சடங்குகளும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்திய மண்ணில் பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டுமென்றால், சுதந்திர சிந்தனைகள் கொண்ட அமைப்புகள் உடனடி சாத்தியமில்லை. நிர்வாண சங்கங்கள் தேவையில்லை. நம் நாட்டுப் பெண்களிடமிருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டு, புத்தகத்தைக் கொடுத்தால் போதும் என்பதே பெரியாரின் எண்ணம்.
படிக்கட்டும். படிக்கத் தொடங்கினால் சிந்தனை வளரும். தன்னை ஏன் குடும்பத்திலும் சமுதாயத்திலும் அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பதை பெண்கள் சிந்திப்பார்கள். உரிமையைக் கேட்பார்கள். முன்னேற்றம் அடைவார்கள். சொத்துடைமை கொண்ட இந்திய வாழ்க்கை முறையில், குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு கொடுத்தால் அவர்கள் ஆண்களை நம்பியிருக்க வேண்டிய தேவையின்றி தற்சார்பு வாழ்வைப் பெறுவார்கள். சுயமரியாதை இயக்கம் முன்னெடுக்க வேண்டிய பாதை இதுதான் என்பதால் பெரியார் ஏற்கனவே அதற்கானத் தீர்மானங்களையும் நிறைவேற்றியிருந்தார்.
ஜெர்மனியில் இருந்த நாட்களில் சோஷலிஸ்ட்டுகளின் சங்கங்களுக்கு சென்றார். அங்குள்ளவர்களிடம் உரையடினார். அரசு நிர்வாகத்தில் இருந்தவர்களையும் பெரியாரும் இராமநாதனும் சந்தித்தனர். அரசாங்கத்தின் கொள்கைகளையும் சோஷலிஸ்ட்டுகளின் சிந்தனைகளையும் தெரிந்து கொண்டார்கள். ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் சென்றபோதும் அப்படித்தான்.
பார்த்தவற்றிலும் அறிந்தவற்றிலும் முன்னெடுக்க வேண்டியவை எவை, முரண்பாடுகள் உள்ளவை எவை என ஆராய்ந்து, நமது மண்ணில் நடைமுறைப்படுத்த வேண்டிய சீர்திருத்தங்களை தெளிவாகவே வரையறுத்துக் கொண்டார் பெரியார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்