
“உங்கள் நாட்டில் தொழிலாளர்கள் நிலை என்ன?” -இங்கிலாந்துக்கு வந்திருந்த பெரியாரிடமும் இராமநாதனிடமும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கேட்டார்கள். ஐரோப்பிய பயணத்தில் பெரியார் நேரடியாகத் தன் பங்களிப்பை செய்த நாடு, இங்கிலாந்து. காரணம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாபுர்ஜி ஷக்லத்வாலா என்பவர்தான் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல் எம்.பி. ஆனவர். இங்கிலாந்துக்கு சென்ற நான்காவது நாளில் ஷக்லத்வாலாவின் அறிமுகம் பெரியாருக்கு கிடைத்தது.
1932ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கோடைக் காலத்தை ஷக்லத்வாலா துணையுடன்தான் பெரியார் கழித்தார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரான க்ளமென்ஸ் தத் என்பவரும் உடனிருந்தார். அதனால், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பலர் பெரியாரிடம் கேள்விகளைக் கேட்டபடி இருந்தனர்.
“எங்க நாட்டில் சாதிப் படிநிலையில யார் கீழே இருக்காங்களோ அவங்க அதிகமா உழைக்கணும். மேல இருக்கவங்க உட்காந்து தின்னுக் கொழுப்பாங்க” என்ற உண்மையை பெரியார் சொன்னபோது, தோழர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கேட்டனர். “உங்க நாட்டு தொழிலாளர் இயக்கங்கள் எப்படி?”என்று பெரியார் அவர்களிடம் கேட்டார். “நேரடியா பார்த்து தெரிஞ்சுக்குங்க” என்றனர் கம்யூனிஸ்ட் தோழர்கள்.
இங்கிலாந்து நாட்டில் முக்கியமான இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று கன்சர்வேடிவ் பார்ட்டி. மற்றொன்று, லேபர் பார்ட்டி. இதில் இரண்டாவதாக உள்ள கட்சி சற்று முற்போக்கானதாகவும் தொழிலாளர் நலன் சார்ந்ததாகவும் கருதப்படுவது வழக்கம். 1932 ஜூன் 26 அன்று மெக்பரோ லேக் பார்க்கில் தொழிலாளர்களுக்கான பொதுக்கூட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியிருந்தார்கள். தொழிலாளர் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான லான்ஸ்பரி பேசினார். இங்கிலாந்து தொழிலாளர்கள் பற்றியும் இந்தியத் தொழிலாளர்கள் பற்றியும் அவர் பேசியது, பெரியாரின் பார்வையில் அப்படி ஒன்றும் முற்போக்கானதாக இல்லை. தொழிலாளர்களுக்காக இங்கிலாந்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் பேசுகிற அளவுக்கு தொழிலாளர் கட்சியின் செயல்பாடு இல்லை என்பதை லான்ஸ்பரி பேச்சின் மூலம் பெரியார் புரிந்துகொண்டார்.
லான்ஸ்பரி பேசிய பிறகு அதற்கு பதில் தரும் வகையில் பெரியார் பேச விரும்பினார். நவீன ஜனநாயகத்தின் தொட்டிலான இங்கிலாந்து இடமளித்தது. என்ன பேசப் போகிறார் இந்த தாடிக்காரர் என்று கூட்டம் எதிர்பார்த்தது.
“தோழர்களே.. இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்கதாய் கருதுகிறோம்” என்று பெரியார் தொடங்கியதுமே கூட்டம் அதிர்ந்தது. தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர், இந்தியத் தொழிலாளர்களின் அவல நிலையைப் பேசிக் கொண்டிருந்தார்.
“நிராயுதபாணியாக போராடிய தொழிலாளர்களை எங்கள் இந்திய சிப்பாய்கள் சுட மறுத்ததற்காக தோழர்.லாஸ்பெரியின் தொழிலாளர் கட்சி கவர்ன்மெண்டானது அந்த சிப்பாய்களுக்கு 15 வருஷ கடினக் காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்” -பெரியார் இப்படி சொன்னதுமே அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இன்னும் என்னென்ன சொல்லப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அங்கிருந்தவர்களிடம் இருந்தது. பெரியார் தொடர்ந்தார். “இந்திய சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8 அணா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் 5 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறர்கள். தொழிலாளர்கள் சங்கமான டிரேட் யூனியனை ஆதரிப்பதாகவும் அதில் சேர்ந்து உழைப்பதாகவும் இங்கே பறைசாற்றுகிறீர்கள். ஆனால் எங்கள் ஏழை சுரங்க வேலைக்காரர்களும் மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து ஒரு டிரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித்ததற்காக அதன் அதிகாரிகளையும் அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல் உங்கள் தொழிலாளர் கட்சி அரசாங்கமானது மீரட் சிறையில் அடைத்துப் போட்டுவிட்டது. 80ஆயிரம் இந்திய ஆண்-பெண் தொழிலாளர்கள் எங்கள் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்” என்று பெரியார் அடுக்கிக் கொண்டே போக, இந்தியாவிலிருந்து வந்திருப்பதால் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் என்று நினைத்தார்கள் தொழிலாளர் கட்சியினர்.
பெரியார் தொடர்ந்தார். “ஆப்பிரிக்க கிராமங்களின் மீது ஆயிரக்கணக்கான முறை ஆகாய படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பர்மியர்களையும் கிராமத்தார்களையும் சுட்டுக்கொன்றதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்று பிரிட்டிஷ் ஆட்சி நடைபெறும் இடங்களில் எல்லாம் உள்ளூர்த் தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறை பாய்வதையும், இங்கிலாந்தை ஆளும் தொழிலாளர் கட்சியின் அரசாங்கம், பெயரில் மட்டும்தான் தொழிலாளரைக் கொண்டுள்ளதே தவிர, அவர்களின் நலனைக் கவனிப்பதாகத் தெரியவில்லை என்பதையும் லேக்பார்க் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பெரியார் தன் பேச்சின் நிறைவில்,
“யாக் ஷையார் தொழிலாளிகளே.. நீங்க இந்த போலி சமூக கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கியிருங்கள்” என்றார். அவரது பேச்சு லேபர் பார்ட்டியினரை அதிர வைத்தது. கம்யூனிஸ்ட் தோழர்களைக் கவர்ந்தது.
“தோழர் ஈ.வெ.ரா… உண்மை நிலையை அப்படியே சொல்லிட்டீங்க.” -தோழர்கள் பாராட்ட அருகிலிருந்த இராமநாதன் ஆமோதித்தார். “எங்க நாட்டுல இவரை எந்த கூட்டத்துக்கு கூப்பிட்டாலும், கூப்பிட்டவங்க முன்னாடியே கூட்டத்துல உண்மையைப் போட்டு உடைச்சிடுவாரு’‘ என்றார்.
இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, சர்வதேச தொழிலாளர்களுக்கான அமைப்பு, தினக்கூலிகளுக்கான சங்கம், தொழிலாளர் நலன் சார்ந்த பத்திரிகைகளின் அலுவலகங்கள் எனப் பல இடங்களுக்கும் சென்றார் பெரியார். செய்தித்தாள்கள் பெரியளவில் சமுதாய மாற்றத்திற்குத் துணை நிற்பதைக் கண்டார்.
“என்னங்க இராமநாதன், எதுக்காக கஷ்டப்பட்டு குடிஅரசு பத்திரிகையைக் கொண்டு வரேன்னு இப்ப புரிஞ்சுதுங்களா?”
“நம்ம மக்கள்கிட்டேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாற்றத்தைக் கொண்டு வரணும்னு முயற்சி பண்ணுறீங்க.”
“அதனாலதான் நானே எழுதி, நானே அச்சு கோர்த்து, நானே அச்சடிச்சி, நானே படிக்கிற நிலை வந்தாலும் பத்திரிகையை நிறுத்தமாட்டேன்னு சொன்னேன். நிச்சயம் ஒரு நாள் மாற்றம் வரும்”
“நிச்சயம் வரும்” என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஷகலத்வாலா, “நீங்க ஒரு கூட்டத்துக்கு அவசியம் வரணும்” என்றார்.
“என்ன கூட்டம்?” பெரியார் கேட்டார்.
வரலாற்றுச் சுவடுகளில் பதியப் போகும் கூட்டம் அது என்பதை அப்போது யாரும் யோசிக்கவில்லை.
(சுற்றும்)
-கோவி. லெனின்