
“மிஸ்டர் ஈ.வி.ராமசாமி.. உங்க மேல பிரிட்டிஷ் போலீசார் கண் வச்சிட்டாங்கன்னு நினைக்கிறோம்” என்றார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.
“தெரியும்.. உரிமைக்காகப் போராடுவதை அதிகாரம் விரும்பாது. நீங்க இங்கே போராடுறீங்க. நான் உங்ககூட சேர்ந்திருக்கேன். எப்படி கண்காணிக்காம இருப்பாங்க?”-பெரியார் கேட்டார்.
“நீங்க சட்டவிரோதமா எதுவுமே செய்யவில்லை.”
“நானும் எங்க இயக்கமும் வெளிப்படையா செயல்படுவோம். சட்டத்தை மீறி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் வந்தால், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வோம். துணிந்து ஜெயிலுக்குப் போவோம். வன்முறையில் இறங்கமாட்டோம்”
“இங்கிலாந்துதானே எங்களையும் உங்களையும் ஆட்சி செய்யுது?”
“இரண்டும் தனித்தனி தேசங்களாச்சே.. நான் இந்த நாட்டுக்கு சுற்றுலா பிரயாணிதானே.. குடிமகனில்லையே.. பிரயாணிக்கான எல்லையைத் தாண்டுறேனான்னு கண்காணிக்கலாம்.”
பெரியார் தன்னுடைய ஐரோப்பிய பயணத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஆட்களை சந்தித்ததைவிட, முற்போக்கு அமைப்புகள், சுதந்திர சிந்தனையாளர்கள், கம்யூனிஸ்ட்டுகள் போன்றவர்களுடன்தான் அதிக நேரத்தை செலவிட்டார்.
ரஷ்யாவில் கம்யூனிச அரசாங்கம் அமைந்தபிறகு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் மீது கண் வைத்திருந்தன. அவர்களை சந்திப்பவர்களும் கண்காணிக்கப்பட்டனர். பெரியார் தன் பயணத்தின் நோக்கம் என்னவோ அதன்படி நடந்துகொண்டு, அந்தந்த நாட்டின் சட்டத்தை மதித்தே செயல்பட்டார்.
ஜெர்மனியில் 10 லட்சம் நாத்திகர்கள் அப்போது இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தங்களுக்கென அமைப்பை உருவாக்கி பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் கத்தோலிக்க கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி பகுத்தறிவு சிந்தனையுடனும் கடவுள் மறுப்புக் கொள்கையுடனும் வாழ்கிறவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தார்கள். கிட்டதட்ட 20 லட்சம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி விட்டதாக பத்திரிகைகளில் வெளியான ஆய்வுக் கட்டுரை, ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களை அதிர வைத்திருந்தது.
ஸ்பெய்ன் நாட்டுக்குச் சென்றிருந்த பெரியார் அங்கு பல தேவாலயங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும், மதகுருமார்கள் தங்களின் ஆதிக்கப்பிடிமானம் தளர்ந்து போய்விட்டதாகக் கவலைப்படுவதையும் அங்கு நடந்த பகுத்தறிவாளர் கூட்டங்கள் மூலம் அறிந்தார். ஆஸ்திரியா நாட்டில் உலக நாத்திகர்களின் தலைமை ஸ்தாபனம் உருவாகவும், செக்கோஸ்லோவேகியாவில் உலக நாத்திகர்கள் மாநாட்டைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதை பெரியார் அறிந்தார்.
“இவையெல்லாம் ரஷ்யாவின் முற்போக்காளர்களான போல்ஷ்விக்குககளின் வேலை” என்பதுதான் ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளுடைய அரசாங்கங்களின் குற்றச்சாட்டு. கம்யூனிஸ அரசாங்கம் பணம் அனுப்பி, நாத்திகத்தைப் பரப்புகிறது என்ற எண்ணம் நிலவியதால், ஐரோப்பிய நாடுகள் தங்களின் பழமைமிக்க மதச் சடங்குகளைப் பின்பற்றுவோரைத் தக்கவைக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தன. ஐரோப்பிய கள நிலவரத்தைப் பெரியாரால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள் ஐரோப்பா கண்டத்தில் வளர்ந்து வந்த நிலையில், அங்கு மதநம்பிக்கை மிகுந்த நாடுகளிலும் கூட பெண்களின் உரிமைகள் மேலோங்கியிருப்பதைக் கவனித்தார். ஐரோப்பிய பெண்கள் அமைப்பினர் பெரியாரைப் பேச அழைத்தார்கள். இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி கேட்டார்கள்.
“எங்கள் நாட்டில் இந்து சம்பிரதாயப்படி பெண் என்பவர் இழிபிறவி. போன ஜென்மத்துல அவங்க செஞ்ச பாவ காரியத்தாலதான் இந்த ஜென்மத்துல பெண்ணாகப் பிறந்திருக்காங்க அப்படிங்கிறது சாஸ்திர விதி. ஒரு குடும்பத்துல எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும், ஒரு ஆண் குழந்தைகூட இல்லைன்னா அந்தக் குடும்பத்தை பிள்ளையில்லாத வீடுன்னுதான் எங்க நாட்டுல சொல்லுவாங்க. ஒரு வீட்டில் எல்லாரும் சோகமா இருந்தாங்கன்னா, பொம்பள புள்ள பொறந்த வீடு மாதிரி ஏன் எல்லாரும் மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்கன்னு கேப்பாங்க” என்று பெரியார் சென்னபோது ஐரோப்பிய வெள்ளைக்காரப் பெண்கள் அவரிடமிருந்து மேலும் எதிர்பார்த்தார்கள்.
“எங்க நாட்டுல பெண்களுக்குப் படிக்கிற வசதி கிடையாது. நாளைக்கு ஒருத்தன் வீட்டுக்குப்போற புள்ளைக்கு எதுக்கு படிப்புன்னு கேட்பாங்க. படிக்கிறதுக்காக வெளியே அனுப்புனோமுன்னா பெண்கள் கெட்டுப் போயிடுவாங்கன்னு படிக்க விடமாட்டாங்க. எப்பவும் ஆண்களோட கட்டுப்பாட்டிலேயே வச்சிப்பாங்க. 11, 12 வயசு ஆகும்போதே கல்யாணம் பண்ணிக் கொடுத்துடுவாங்க. தாலிங்கிற பேருல ஒரு கயிற்றைக் கட்டிட்டா அந்த ஆண்கூடத்தான் பெண் கடைசி வரைக்கும் வாழணும். இதில், பல பெண்களுக்கு தாலி கட்டுற நேரம் வரை புருசன் யாருங்கிற முகமே தெரியாது. சில ஆண்கள்கூட மனைவியின் முகத்தை கல்யாணத்துக்கு முன்னாடி வரை பார்த்திருக்க மாட்டாங்க.” -பெரியார் சொல்லச் சொல்ல கேட்டவர்களுக்கு புருவம் உயர்ந்தது.
“கணவன் எப்படிப்பட்டவன், அவன் குடும்பம் எப்படிப்பட்டதுங்கிறதைப் பார்க்கக்கூடாது. காலம் முழுக்க அந்தக் குடும்பத்துக்கு சமைச்சிப் போடுறது, துவைச்சிப் போடுறது, வீட்டு வேலை பார்க்குறதுதான் பெண்களோட நிலை. புருசன் எத்தனை பொஞ்சாதி வேணும்னாலும் வச்சிக்கலாம். பொண்டாட்டி அவன் நினைப்புலதான் வாழணும். மேல்நாட்டுல இருக்கிற மாதிரி கல்யாணத்தை ரத்து செய்ய முடியாது. குடும்ப சொத்திலும் பெண்களுக்கு பங்கு கிடையாது. புருசன் சொத்திலும் உரிமை கிடையாது. கணவன் இறந்துபோய்விட்டால், மனைவி இளம் வயதில் இருந்தாலும் இன்னொரு கல்யாணத்தை நினைச்சுப் பார்க்க முடியாது. விதவைக்கோலத்தில் உட்காந்திருக்கணும். பத்திய சாப்பாடுதான் அளவா கிடைக்கும். நல்ல உடுப்பு, புஷ்பம், வாசனை திரவியம் எதுவும் பயன்படுத்த முடியாது” என்று இந்தியாவில் அன்றைக்கு இருந்த பெண்களின் நிலையை ஐரோப்பிய பெண்கள் கூட்டத்தில் பெரியார் சொன்னதுடன், இதை மாற்றுவதுதான் சுயமரியாதை இயக்கத்தின் வேலைத்திட்டம் என்பதை விளக்கினார்.
கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், பெண்ணுரிமை அமைப்புகள் என முற்போக்கு இயக்கங்களுடன் பெரியார் தொடர்ந்து கலந்துரையாடுவதை பிரிட்டிஷ் போலீசார் கண்காணித்தனர். லண்டனில் உள்ள இந்திய சனாகனிகள் உன்னிப்பாகக் கவனித்தனர். ஏறத்தாழ 25 நாட்கள் இங்கிலாந்தில் இருந்த பெரியாருக்கு போலீசின் நெருக்கடி அதிகமானது. பெரியாரின் ஐரோப்பிய பயணம் நிறைவு கட்டத்தில்
இருந்தது.
அவர் மிகவும் விரும்பி பார்க்க ஆசைப்பட்ட சோவியத் யூனியன் எனும் ரஷ்யாவில் ஏற்கனவே மூன்று மாத காலம் தங்கிவிட்டார். அதுதான் இந்த பயணத்தின் உச்சம்.
(சுற்றும்)
-கோவி. லெனின்