
உலகம் சுற்றும் திராவிடம்
14
Red Salute
எந்த சாக்ரடீஸின் சிலை முன்பு பெரியார் உணர்ச்சிப்பூர்வமாக நின்றாரோ அந்த ஏதென்ஸ் நகரில் இரண்டு வாரங்கள் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச அரசாங்கத்தின் அனுமதிக்கான காத்திருப்பு அது. அங்குள்ள நாத்திகர் சங்கங்களின் மூலம் பயணத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தார் பெரியாருடன் பயணித்த இராமநாதன். 1932ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அனுமதி கிடைத்தது.
கருங்கடலில் பயணிக்க வேண்டும். சிட்செரின் என்ற நீராவிக் கப்பல் தயாராக இருந்தது. அதில்தான் பயணம். மீண்டும் ஒரு கரை தெரியா பயணம். இந்த முறை கடல் காய்ச்சலால் பெரியார் அவதிப்பட்டார். சென்னையிலிருந்து அவருக்குத் துணையாக வந்த ராமு என்ற உறவினர் பெரியாரைப் பார்த்துக்கொண்டார். ஒருவழியாக கருங்கடலைக் கடந்து ஒடெஸ்ஸா துறைமுகம் வந்தது நீராவிக் கப்பல். அங்கிருந்து கீவ் நகருக்கு ரயிலில் சென்றார்கள். பிப்ரவரி 14ந் தேதி சோவியத் யூனியன் (ரஷ்யா) தலைநகர் மாஸ்கோவை அடைந்தார் பெரியார். பண்பாட்டு உறவுக்கான மையத்தல் முறையாகப் பதிவு செய்துகொண்டு, மே மாதம் வரை சோவியத் யூனியனில்தான் இருந்தார்.
இரும்புத்திரை நாடு என்று சோவியத் யூனியன் பெயர் பெற்றிருந்தது. மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவோ, அமெரிக்காவைப் போலவோ உள்நாட்டு விவரங்கள் சோவியத் யூனியலிருந்து வெளியே கசியாது. லெனின் நடத்திய புரட்சிக்குப் பிறகு அமைந்த கம்யூனிச அரசை அவர் மறைவுக்குப் பிறகு, ஜோசப் ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருந்த காலம் அது.
ஜார் மன்னர் ஆட்சியில் இருந்த ரஷ்யாவுக்கும் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவுடன் பல நாடுகள் ஒன்றிணைந்த சோவியத் யூனியனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அமெரிக்கா போன்ற வல்லரசுகளை மிஞ்சும் வளர்ச்சியை நோக்கி சோவியத் யூனியன் முன்னேறியது. அறிவியல், வானியல், படைபலம் ஆகியவற்றில் சோவியத் யூனியன் பெரும் வளர்ச்சி கண்டிருந்தது. உள்கட்டமைப்புகள் மேம்பட்டிருந்தன. ஜனநாயக காற்று மட்டும் ரொம்ப கம்மியாக வீசியது. அதனால் அரசு தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகள் மட்டுமே வெளியுலகை எட்டின. மற்றவை இரும்புத் திரைக்குப் பின்னே இருந்தன.
திரைக்கு முன்பும் பின்புமான சோவியத் யூனியனை நேரில் காண வந்திருந்தார் பெரியார். அவரின் பயணத்திற்கேற்ப உதவி செய்வதற்கும் மொழிபெயர்ப்பதற்குமான ஆட்கள் ரஷ்யாவில் இருந்தனர். அதனால், தன் பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதை நிறைவேற்றும் ஆர்வம் பெரியாரிடம் இருந்தது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் எனும் பழமையான ரஷ்ய நகரம் லெனின்கிராடு என்று பெயர் மாற்றத்துடன் சமூக மாற்றமும் கண்டிருப்பதைப் பெரியார் கவனித்தார். நாத்திகர் சங்கத்துடன் இணைந்து தொழிலாளர் சமூகத்தை சந்தித்து கலந்துரையாடினார். குளிருக்கேற்ற உடையும், பனிக்குல்லாவும் அணிந்து தாடியுடன் இருந்த பெரியாரிடம் ஒரு சிறுவன், “நீங்க இந்தியாவிலிருந்து வரீங்களா? ” என்று கேட்டான். “ஆமாம் என்றார் பெரியார். “உங்க நாட்டுல ஏழை-பணக்காரன்னு ரெண்டு வகை மக்கள் இருப்பாங்களா?” என்று கேட்டான். “ஆமாம்.. ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எல்லாம் உண்டு” என்றார் பெரியார். “எங்கள் நாட்டில் அதெல்லாம் கிடையாது. எல்லாரும் சமம்” என்றான் சிறுவன் பெருமிதத்துடன்.
ரஷ்ய புரட்சி 1917ல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சோவியத் யூனியன் என்கிற புதிய வல்லரசு உருவாகி 15 ஆண்டுகள் கழித்து பெரியார் அங்கு வந்திருந்தார். அந்த சிறுவனுக்கு 10 அல்லது 12 வயது இருக்கலாம். அவன் பிறந்ததிலிருந்து கம்யூனிச ஆட்சியைத்தான் பார்க்கிறான். சொத்துடைமை-நிலவுடைமை இல்லாத எல்லாருக்கும் எல்லாம் என்கிற பொதுவுடைமைக் கொள்கையைத் தவிர வேறு எதுவும் அந்த சிறுவனுக்குத் தெரியாது. அதனால்தான், உலகில் ஏழைகள் பணக்காரர்கள் என்று இருவகையாக மக்கள் இருக்கிறார்கள் என்பது அந்த சிறுவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏழை-பணக்காரர்கள் இல்லாத ஒரு நாடு இந்த உலகத்தில் இருக்கிறது என்பது பெரியாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அஜர்பைஜான் இன்று தனி நாடு. அப்போது சோவியத் யூனியனில் ஒரு பகுதி. அங்கு பூமிக்கடியில் இருந்து எண்ணெய் எடுக்கும் வயல்களை நேரில் போய் பார்வையிட்டார் பெரியார். மாஸ்கோ நகரில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலைக்குப் பெரியாரை அழைத்துச் சென்றனர். “உங்க நாட்டுல பெட்ரோலை பூமி கொடுக்குது. அது அரசாங்கம் உற்பத்தி செய்கிற கார்களுக்குப் பயன்படுது” என்று பெரியார் சொன்னார். “எங்கள் நாட்டில் எல்லாமும் அரசாங்கத்துக்கு உரிமையானது. அவையெல்லாம் மக்களுக்குப் பயன்படக்கூடியது” என்றார் பெரியாருடன் வந்த வழிகாட்டி.
மாஸ்கோ செஞ்சதுக்கம் பெரியாரை ஈர்த்தது. அங்கேதான் ரஷ்ய புரட்சியை தலைமையேற்று நடத்திய விளாடிமீர் இல்யீச் லெனின் உடல் பதப்படுத்தப்பட்டு கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. நிம்மதியாக உறங்குவது போன்ற லெனின் உடலை இப்போதும் ரஷ்யாவுக்கு செல்பவர்களால் காண முடியும். 1924ல் லெனின் இறந்தார். 6 ஆண்டுகள் கழித்து அவரது உடலைப் பெரியார் பார்த்தார். “பொணத்தை வீட்டுக்குள்ள வைக்கக்கூடாது. பொழுது சாயுறதுக்குள்ள கொண்டு போய் எரிச்சிடணும்” என்கிற மண்ணிலிருந்து சென்றவருக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு தலைவரின் உடலை உறங்குவது போன்ற தோற்றத்தில் பார்ப்பது வியப்பாக இருந்தது.
கூட்டுறவு முறையில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள், கூட்டுறவு முறையில் நடைபெறும் பண்ணை விவசாயம் எல்லாவற்றையும் பெரியார் பார்த்தார். பண்ணை வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார்
“எல்லா நாளும் வயல் வேலைதானா?” என அவர் கேட்டதற்கு, “எங்களுக்கும் வீக் எண்ட் உண்டு” என்றார் ஒருவர்.
வாரத்தில் ஐந்து நாட்கள் வயலில் வேலை செய்யும் அவர்களில் சிலர், தங்களுக்கான விடுமுறை நாட்களில் நீதிபதிகளாக செயல்படுவதை வியப்புடன் அறிந்தார் பெரியார். ரஷ்ய பண்பாட்டில் நீதிமன்றங்கள் அனுபவம் வாய்ந்த உள்ளுர் பெரியவர்களைக் கொண்டு ஜூரி என்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதையும் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவல் உள்ளிட்ட ரஷ்ய கதைகளைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். உள்ளூர் நீதிமன்றங்கள் சில, நம்ம ஊர் அரசமரத்தடி-ஆலமரத்தடி பஞ்சாயத்து போல நடைபெறுவதும் உண்டு.
புரட்சியில் மலர்ந்த சோவியத் யூனியனில் கட்டப் பஞ்சாயத்து போல் இல்லாமல், பழைய பண்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாக மக்களின் பங்களிப்புடனான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அங்கே நீதி எப்படி வழங்கப்படுகிறது என்பதை பெரியார் உன்னிப்பாகக் கவனித்தார்.
(சுற்றும்)