
சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினை நேரில் பார்க்க வேண்டும் என்கிற பெரியாரின் விருப்பத்தை அதிகாரிகள் மூலம் தெரிவித்து, உரிய நடைமுறைகள் மூலம்தான் நிறைவேற்ற முடியும் என்றனர் ரஷ்யாவில் பெரியாருடன் துணை இருந்தவர்கள். அப்படியே சந்திப்பதாக இருந்தாலும் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும் என்பதையும் பெரியாரிடம் தெரிவித்தனர்.
“கட்டாயமில்லை. வாய்ப்பு இருக்குமென்றால் பார்க்கலாம்” என்ற பெரியார், மாஸ்கோ மே தினப் பேரணியை ஸ்டாலின் பார்வையிட, துருக்கி பிரதமர் இஸ்மெட் இனோனு அந்தப் பேரணியில் சோவியத் யூனியன் அரசின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதையும் பெரியார் பார்த்தார்.
மே தின கொண்டாட்டங்கள் சோவியத் யூனியனில் ஒரு நாளுடன் முடிந்துவிடுவதில்லை. தலைநகரில் மாஸ்கோவில் மட்டுமே அது நடைபெறுவதுமில்லை. பல நகரங்களிலும், தொழிற்சாலைகள்-பண்ணைகள் நிறைந்த சிறிய ஊர்களிலும்கூட தொழிலாளர்களால் மேதின விழாக்கள் நாட்கணக்கில் சிறப்பாகக் கொண்டாடப்படுவதை பெரியார் கவனித்தார்.

வால்கா நதியில் அவர் பயணித்த மோட்டார் படகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. படகை இயக்கிக் கொண்டிருந்தவர் ஒரு ரஷ்ய பெண்மணி. ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப அவர் படகை நன்றாக செலுத்தினார். மேற்பார்வையிடும் ஆண் அதிகாரி அந்தப் பெண்மணிக்கு சில நுணுக்கங்களை மட்டும் அவ்வப்போது சொன்னார். ரஷ்யாவின் வால்கா, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆறு. அதில் பயணிப்பது பெரியாருக்குப் பிடித்தமாக இருந்தது. அதைவிட ஒரு பெண்மணி அந்தப் படகை ஓட்டுவது அவருக்குப் பிடித்திருந்தது.
கம்யூனிச நாடான சோவியத் யூனியனில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வதை பெரியார் தொடர்ந்து கவனித்து வந்தார். சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை, திருமணத்தை முடிவு செய்யும் உரிமை, ராணுவம்-போலீஸ் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உரிமை பற்றியெல்லாம் பேசியும் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இருந்தார் பெரியார். தான் விரும்பியவை சோவியத் யூனியனில் நடைமுறையில் இருப்பதைக் கவனித்தார்.
மாஸ்கோவில் இருந்த மோட்டார் தொழிற்சாலையிலும், அஜர்பைஜான் எண்ணெய் வயல்களிலும் அவர் பெண்கள் பணியாற்றுவதைக் கண்டார். வாய்க்கால் வெட்டுவது போன்ற அதிக உடலுழைப்பைத் தர வேண்டிய வேலைகளில்கூட பெண்கள் கூட்டமாக ஈடுபட்டிருப்பதைப் பார்த்த பெரியாருக்கு ரஷ்யப் பெண்கள் ஆடம்பர வாழ்ககையைவிட அர்த்தப்பூர்வமான வாழ்க்கையை நம்புவதாக உணர்ந்தார். எந்த வேலையாக இருந்தாலும் அதை எளிமைப்படுத்துவதற்கு நவீனக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அந்தக் கருவிகளைக் கையாளும் தொழில்நுட்பத்தையும் பெண்களுக்கு கற்றுக் கொடுத்திருந்தது சோவியத் யூனியன் அரசாங்கம்.
ரஷ்ய நாட்டு மருத்துவமனைகளையும் சிகிச்சை முறைகளையும் பெரியார் நேரில் தெரிந்துகொண்டார். தொழிலாளர்கள் நிறைந்த நாடு என்பதால் அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு இருந்தது. காய்ச்சல், சளி போன்ற தொடக்கநிலை பிரச்சினைகளுக்கு வீட்டுக்கே டாக்டர்கள் வந்து வைத்தியம் செய்யும் வசதி இருந்தது. அந்த டாக்டர் தரும் சான்றிதழ் அடிப்படையில் தொழிலாளிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்ப அளிக்கப்படும்.
மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டுமென்றால், வீட்டு வைத்தியம் செய்த டாக்டரின் பரிந்துரைக் கடிதம் வேண்டும். அதைக் கொண்டு வந்து காட்டினால், அதில் உள்ள விவரங்களைப் பார்த்து, தேவையான பரிசோதனைகள் செய்து மேல்சிசிச்சை அளிக்கும் நடைமுறை சோவியத் யூனியனில் இருந்தது. சிகிச்சை செலவை அரசாங்கமே பார்த்துக் கொள்ளும்.
பெண்கள் உடல்நலனுக்கு கம்யூனிச அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்தது. அதுவும் கர்ப்பிணிகளாக இருந்தால், உரிய இடைவெளியில் பரிசோதனைகள் நடைபெறும். சத்தான உணவு, மருந்துகள் தரப்படும். குழந்தையின் வளர்ச்சி கண்காணிக்கப்படும். மகப்பேறு காலம் முழுவதும் அரசாங்கமே அக்கறை எடுத்துக்கொள்ளும். பிரசவத்தில் தாயும் சேயும் நலம் என்கிற செய்தியை உறவினர்களிடம் சொல்லும் வரை மருத்துவமனை ஊழியர்கள் அனைத்துப் பணிகளையும் கவனிப்பார்கள்.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களைத் தொற்று நோய்களிலிருந்தும், தொற்றா நோய்களிலிருந்தும் காப்பாற்ற முன்னெச்சரிக்கை சிகிச்சை முறைகள் உண்டு. “ரஷ்யா இந்த வேகத்தில் மருத்துவக் கட்டுப்பாட்டை வளர்த்தெடுத்தால், மனிதன் 100, 200 வருசம் வாழக்கூடிய அளவுக்கு வந்துவிடுவான்” என்றார் மருத்துவமனைகளைப் பார்வையிட்ட பெரியார்.
நாத்திகர் சங்கத்தினர் அவரை ஒரு பதிவுத் திருமண அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். 22 வயது பெண்தான் பதிவு அலுவலராக இருந்தார். சோவியத் யூனியனில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண், தன் விருப்பத்திற்குரியவரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது.
திருமணம் செய்து கொள்ள அங்கு வந்த ஜோடியுடன் வேறு யாரும் இல்லை. தங்கள் வயது, இருப்பிடம், கல்வித்தகுதி, வேலை உள்ளிட்ட விவரங்களுக்கான ஆதாரங்களைக் காட்டினார்கள். அந்த பெண் அலுவலர் அந்த ஆவணங்களை சரிபார்த்தார். சரி என்றார்.
அந்த ஜோடி மோதிரம்கூட மாற்றிக்கொள்ளவில்லை. மேல்நாட்டு பாணியில் முத்தம் கொடுக்கவில்லை. பதிவேட்டில் கையெழுத்திட்டார்கள். அதற்குரிய சான்றிதழ்களை மகிழ்வுடன் வாங்கிக்கொண்டார்கள். அலுவலர் வாழ்த்துச் சொன்னார். அவர்கள் புன்னகையுடன் நன்றி தெரிவித்து, வாழ்விணையராகப் புறப்பட்டார்கள்.
“என்னங்க.. இப்படி சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிட்டாங்க. எங்க ஊருல மந்திரம் ஓதி, புகையப் போட்டு, சடங்கு சம்பிரதாயம், சாப்பட்டு பந்தின்னு ஒரு நாள் முழுக்க கல்யாணத்தை நடத்துவாங்க. இது மாதிரி எளிமையாத்தான் கல்யாணம் பண்ணனும்னு சுயமரியாதை திருமணத்தை எங்க இயக்கம் நடத்துது” என்றார் பெரியார்.
அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு விவாகரத்து நடைமுறையையும் கவனித்தார். ஒரு பெண் தன் கணவனிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார்.
“எதற்காக விவாகரத்து கேட்குறீங்க?”
“என் கணவர் அடித்து கொடுமைப்படுத்துகிறார்” -என்ற பெண் தன்னைக் கணவன் அடித்தது தொடர்பான மருத்துவ ஆதாரங்களைக் கொடுத்தார். அவை சரியான ஆவணங்களா என அலுவலர்கள் சரிபார்த்தார்கள். கணவனின் கருத்து கேட்கப்பட்டது. விவாகரத்து வழங்கப்பட்டது. இனி இருவரும் அவரவர் விருப்பப்படியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழலாம். பிள்ளைகளை யார் வளர்ப்பது என்பதற்கான சட்ட உரிமையும் உண்டு.
சோவியத் ரஷ்யாவில் கைவிடப்பட்ட குழந்தைகள் என்று யாரும் கிடையாது. எல்லாக் குழந்தைகளும் அரசாங்கத்தின் குழந்தைகள். அவர்களின் வளர்ப்பு, படிப்பு, வேலை எல்லாவற்றையும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். ஜோசப் ஸ்டாலின் ஆட்சியிலும் குழந்தைகளுக்கான அன்புக்கரங்கள் இருந்தன.
உலக நாடுகள் பலவும் பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், சோவியத் யூனியன் தன் மக்களுக்கானத் திட்டங்களை செயல்படுத்தி வளர்ச்சிப் பாதையில் செல்வதை பெரியார் ஒப்பிட்டுப் பார்த்தார்.
“மிஸ்டர் ராமசாமி.. மே தின கொண்டாட்டத்தின் நிறைவா கிரெம்ளின் மாளிகையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான விருந்து நிகழ்ச்சி நடக்குது. உங்களையும் விருந்தினரா அழைச்சிருக்காங்க” – அழைப்பு வந்தது பெரியாருக்கு.
(சுற்றும்)