
கலைஞர் 1970 ஜூலை 2ஆம் நாள் ரோம் நகரத்தை சென்றடைந்தார். அதன் பழமை நிறைந்த பிரம்மாண்டம் கலைஞரை ஈர்த்ததில் வியப்பில்லை.
“இந்த நகரத்துடன்தானே என் மண்ணை ஆண்ட சோழ மன்னர்கள் பூம்புகார் துறைமுகத்லிருந்து கடல் வாணிகம் செய்தனர். இந்த ரோமாபுரியுடன்தானே பாண்டியன் நல்லுறவு வைத்திருந்தான். இந்த ரோமாபுரி ராணிகள் பற்றித்தானே என் அண்ணன் அற்புதமான படைப்பைத் தந்தார்” என்பதுதான் கலைஞரின் எண்ணம். அண்ணா சந்தித்த கத்தோலிக்க கிறிஸ்தவத் தலைவர் போப் அவர்களை கலைஞர் சந்திக்கும் வாயப்பு அமைந்தது.
நாட்டுக்குள் ஊர் இருக்கும். ஆனால், ஊருக்குள் ஒரு நாடு இருக்கிறதென்றால் அது ரோம் நகரில் உள்ள வாடிகன்தான். இத்தாலி தலைநகரான ரோமாபுரிக்குள் உள்ள தனித்துவமான நாடு கத்தோலிக்கர்களின் தலைவர் இருக்கும் வாடிகன் நாடு. உலகம் பல ஆச்சரியங்களையும் விசித்திரங்களையும் கொண்டதுதானே..

போப் ஆண்டவரை கலைஞர் சந்தித்தார். அண்ணாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை வகிப்பதைத் தெரிவித்தார். அண்ணாவுடனான சந்திப்பையும், அந்த மாமனிதர் தனக்காக எதுவும் கேட்காமல், போர்ச்சுகல் நாட்டு சிறையிலிருந்த கோவா விடுதலைப் போராட்ட வீரர் மோகன் ரானடேவின் விடுதலைக்காப் பேசியதையும் கலைஞரிடம் போப் நினைவு கூர்ந்தபோது, அண்ணாவின் உயரம் மீண்டும் இமயம் அளவுக்குச் சென்றது.
கலைஞருக்கு ஒரு பதக்கத்தை அணிவித்த போப், சமாதானச் செய்தி அடங்கிய ஒரு நற்சான்றையும் அளித்தார். தமிழ்நாட்டின் சிறப்பு மிக்க கலைப்பொருட்களை போப்பிடம் வழங்கினார் கலைஞர். இப்படி எத்தனையோ பொருட்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து ரோம் நகருக்கு வந்திருக்கிறது. தன் கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் அளித்து விடைபெற்றார் கலைஞர்.
ரோம் நகர்மன்றத்தின் சார்பில் வரவேற்பு, அங்குள்ள தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் என கலைஞரின் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு, பனிபடர்ந்த ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு கலைஞர் சென்றார். ஆல்ப்ஸ் மலையும் ரைன் நதியும் அவரை ஈர்த்தன. வெப்ப நாடான இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு ஸ்விட்சர்லாந்து ஒரு சொர்க்கம். கலைஞருக்குத்தான் சொர்க்கம்-நரகம் என்பதில் நம்பிக்கை இல்லையே.. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்கிற தமிழரின் மரபுப்படி மூன்று நாட்கள் ஸ்விட்சர்லாந்தின் இயற்கை எழிலை ரசித்தவர், ஜூலை 7ஆம் நாள் பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸ் நகரத்தை அடைந்தார். இந்திய தூதரக அதிகாரிகளுடன் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளும் கலைஞரையும் தயாளு அம்மாளையும் வரவேற்றனர்.
பாரீஸில் வாழும் தமிழர்கள் கலைஞரின் வருகையை அறிந்ததும் திரளாக கூடிவிட்டனர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். அங்கே தனிநாயகம் அடிகளைக் கண்டார் கலைஞர்.
அடிகளும் பிரெஞ்சு பேராசிரியர் பிலியோசாவும் கலைஞரைத் தனியாக சந்தித்துப் பேசினர். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் சிறப்பாக நடத்தியிருந்தார் அண்ணா. மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு பாரீஸில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வந்தன. அந்த மாநாட்டு அமைப்பாளர்தான் பேராசிரியர் பிலியாஸோ. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகச் செயலாளர் தனிநாயகம் அடிகள்.
இருவரும் கலைஞரிடம், “அண்ணா இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். நீங்கள் இங்கே நடக்கும் மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டை தொடங்கி வைக்க வேண்டும்” என்றனர். “தமிழ்நாடு அரசின் சார்பில்தான் கே.ஏ.மதியழகன் பங்கேற்கவிருக்கிறாரே?” என்றார் கலைஞர். “அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் பாரீஸூக்கு வந்துள்ள நிலையில், உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தால் எங்களுக்கு பெருமை” என்றனர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள். ஜூலை 15ந் தேதிதான் மாநாடு தொடங்குகிறது. இன்னும் ஒரு வார காலம் இருக்கிறது.
கலைஞரின் பயணத்தில் அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரான்ஸ் நாட்டு கலாச்சார உறவு அமைச்சர் எட்மண்ட் மைக்கேல் கலைஞரை அழைத்து விருந்தளித்து, தமிழ்நாட்டுடனான பிரான்ஸ் கலாச்சாரத் தொடர்புகள் பற்றிப் பேசினார். யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் அதன் இயக்குநராக இருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா, யுனெஸ்கோ தலைமையகத்தில் கலைஞருக்கு விருந்தளித்து, அண்ணா வந்திருந்தபோது அவருடன் பழகிய நாட்களையும், அண்ணாவின் எளிமையையும் அறிவாற்றலையும் வியந்து கூறினார். அண்ணா எல்லா இடத்திலும் தனக்கு அண்ணனாக இருந்து வழிகாட்டுவதை நினைத்து கலைஞர் மகிழ்ந்தார்.
மூனிச் மேயர், பவேரியா அமைச்சர் எனப் பலருடைய அறிமுகமும் கலந்துரையாடலும் கலைஞரின் பயணத்தில் முக்கியத்துவம் பெற்றன. அதன்பிறகு அவர் ஜெர்மனி நாட்டிற்குச் சென்றார். ஜெர்மனி நாடு அப்போது மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என இரண்டாக இருந்த காலம். மேற்கு ஜெர்மனி ஜனநாயக நாடாகவும், கிழக்கு ஜெர்மனி கம்யூனிஸ்ட் நாடாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் வீழ்ந்த ஹிட்லரின் ஜெர்மனி, பின்னர் இரண்டானது. இரண்டையும் பிரித்தது பெர்லின் சுவர். ஒரே நாட்டினரை, ஒரே குடும்பத்தினரை, ரத்த உறவுகளை இந்த நாடாகவும் அந்த நாடாகவும் இரண்டாகப் பிரித்த சுவர் அது. 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் புரட்சிக்குப்பிறகு அந்த சுவர் தகர்க்கப்பட்டு மீண்டும் ஒரே ஜெர்மனியானது.
1970ல் கலைஞர் சென்றது மேற்கு ஜெர்மனி நாட்டிற்குத்தான். தொழில்வளம் மிக்க நாடு ஜெர்மனி. அதனால், அங்குள்ள பொருளாதார அமைச்சரும் கலைஞரும் சந்தித்தனர். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு ஜெர்மனியின் உதவி தேவை என்பதை கலைஞர் வலியுறுத்தினார். அவர் பயணித்த ஐரோப்பிய நாடுகளில் பார்த்தவையெல்லாம் மனதில் திரைக்கதையாக உருவானது. அதை அப்படியே தமிழ்நாட்டிற்குப் பொருத்திப் பார்த்தார் கலைஞர். அதுதான் அவர் உருவாக்க விரும்பிய தமிழ்நாடு. விரும்பியது மட்டுமல்ல, நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கியும் காட்டினார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்