
ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் பிரான்ஸ் தலைநகருக்கு வந்த கலைஞரை ஒரு மாணவர், ‘பாரி நகருக்கு வருக’ என்று வரவேற்றார். சென்னையில் உள்ள பாரீஸ் கார்னரை பாரிமுனை என்று சொல்வது போல, உலகின் நவீன நாகரிகத் தொட்டிலான பாரீஸ் நகரை, தமிழ் மன்னன் பாரி பெயரிலான நகராக அந்த மாணவர் குறிப்பிட்டதை கலைஞர் மிகவும் ரசித்தார்.
1970 ஜூலை 15 அன்று பாரீஸ் நகரில் புகழ்பெற்ற பல்கலைக்கழக மண்டபத்தில் மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு தொடங்கியது. கடல் கடந்து வெகுதூரத்தில் உள்ள நகரில் 30 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், 60 பன்னாட்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்களும் பங்கேற்ற சிறப்பான மாநாட்டை கலைஞர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
“என் சொந்த விழியினும் மேலாகத் தமிழ் மொழியை மதிக்கிறேன் என்ற உணர்வுடன் இந்த மாநாட்டை வரவேற்கிறேன். பங்கு கொள்வதில் மகிழ்கிறேன். கடந்த நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பிரெஞ்சு பண்பாடு அறிமுகமானது என்பதை இந்த மாநாடு நினைவூட்டுகிறது. தமிழின் வளர்ச்சியில் பிரான்ஸ் கொண்டுள்ள நாட்டத்தை இங்கு வெளியிடப்பட்ட தமிழ்-பிரெஞ்சு அகராதி காட்டுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து இந்த மாநாட்டுக்கு வந்துள்ள குழுவில் 18 பேர் உள்ளனர். அவர்கள் 4 கோடி தமிழர்களின் பிரதிநிதிகள். தமிழர்கள் உலகெங்கும் பரவியுள்ளனர். ஆனால், மொரீஷியஸ் நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழை மறந்து வருகிறார்கள். அதுபோல இன்னும் சில நாடுகளில் உள்ள தமிழர்களும் தாய்மொழியை இழக்கின்ற நிலை உள்ளது. தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் வளரவும், அங்குள்ள தமிழர்களோடு தொடர்பில் இருக்கவும் வகை செய்ய வேண்டும்.
மொழிப் பிரச்சினை மீது கவனம் செலுத்துவது தவறோ, குற்றமோ ஆகாது என்பதை ஸ்விட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அண்மையில் சென்றபோது கண்டேன். நாம் பழம் பெருமை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் பயனில்லை. தமிழை உலக மொழிகளுக்கு இணையாக அறிவியல் கண்ணோட்டத்துடன் வளர்க்க வேண்டும். அதற்கு 6 லட்சம் சொற்களுக்கு குறையாத அளவில் ஆங்கிலம்-தமிழ் அகராதியை உருவாக்க வேண்டும்.
தமிழ் வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்த மாநாட்டின் மூலம் மூன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, தமிழ்நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் மாணவர்கள் பரிவர்த்தைனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டாவதாக, தமிழை நவீன மொழியாக்கும் விதத்தில் ஆங்கிலம்-தமிழ் அகராதியை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழை வளர்க்கவும் பரப்பவுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
-இதுதான் மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் தொடக்க உரையாகும். எந்த நாட்டுக்குச் சென்றாலும் தாய்மொழியாம் தமிழின் பெருமையுடன், காலத்திற்கேற்ற அதன் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தியதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர் கலைஞர்தான்.
கல்லூரிகளில் தமிழ் வழிக்கல்வி, உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழுக்கு செம்மொழித் தகுதி, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தமிழ் இணைய மாநாடு, கணினியில் தமிழ்ப் பயன்பாடு எனத் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தொண்டாற்றியவர்தான் 14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த கலைஞர். எவன் மறுத்தாலும், அவரை எவன் வெறுத்தாலும், கலைஞர்தான் தமிழினத் தலைவர்.
பாரீஸ் நகரில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டின் நிகழ்ச்சிகள் முழுமையடையும் வரை மதியழகன் தலைமையிலான தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடக்க உரையாற்றிய கலைஞர் அன்று மாலையே இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வந்து சேர்ந்தார். லண்டன் மாநகரில் புகழ்பெற்ற கண் மருத்துவராக இருந்தவர் சர் ஸ்டீவர்ட் டியூக் எல்டர்.
தன்னுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த டாக்டர் ஆபிரகாம் அவர்களுடன் சென்று லண்டன் டாக்டரின் கண்களைப் பரிசோதனை செய்து கொண்டார் கலைஞர். பரிசோதனைகள் நிறைவில், “மெட்ராஸில் நடந்த சிகிச்சைகளுக்குப் பிறகு உங்களுக்குத் தரப்பட்ட மருந்துகளையே தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் போதும். இப்போதைக்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படாது” என்றார் லண்டன் டாக்டர். அடுத்த நாள், டாக்டர் பெட்போர்ட் என்பவரை சந்தித்து அவரிடமும் ஆலோசனை பெற்றார் கலைஞர். அந்த டாக்டரும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றே தெரிவித்தார்.
லண்டன் செய்தியாளர்கள் கலைஞரை சூழ்ந்துகொண்டு இந்தியாவின் நிலை, தமிழ்நாட்டின் வளர்ச்சி, உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்க, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களான அவர்களுக்கு முரசொலி பத்திரிகையாளரான முதல்வர் கலைஞர் தனக்கேயுரிய பாணியில் பதில்களைத் தந்தார். பேட்டி என்பதைத் தாண்டி, பத்திரிகையாளர்களின் கலந்துரையாடல் போல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த சந்திப்பு நடந்தது.
கவென்ட்ரி என்ற இடத்தில் உள்ள பெர்கூசன் டிராக்டர் தொழிற்சாலையை கலைஞர் பார்வையிட்டார். தமிழ்நாட்டில் விவசாயத்தை நவீனக் கருவிகள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்பதை அமெரிக்காவுக்கு அண்ணா சென்றிருந்தபோது, அங்கு பண்ணை வயல்களைப் பார்த்து தெரிந்துகொண்டார். உழவுக்குப் பயன்படும் நவீன இயந்திரமான டிராக்டரை அதிகளவில் பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்ள பெர்கூசன் தொழிற்சாலையை கலைஞர் சுற்றிப்பார்த்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு அந்த நிறுவனம் ஒரு டிராக்டரை பரிசளித்தது.
மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்ட கலைஞர், “தாங்கள் எனக்கு அன்பாகத் தந்ததை எங்கள் கோவையில் உள்ள விவசாயக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன். அந்தக் கல்லூரிக்கு தங்கள் நிறுவனத்தின் சார்பிலேயே அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மூன்று வாரகாலம் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கலைஞர் 1970 ஜூலை 21 அன்று பெரும் வரவேற்புடன் சென்னைக்குத் திரும்பினார்.
கலைஞர் தனது அடுத்த வெளிநாட்டுப் பயணத்தை, 1971ஆம் ஆண்டு மேற்கொண்டார். நவம்பர் 8ஆம் நாளன்று அவர் பறந்தது அமெரிக்காவுக்கு…
(சுற்றும்)
-கோவி. லெனின்