ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டிற்காக 1987ஆம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்ற கலைஞர் அங்கே இருந்தது ஒன்றரை நாட்கள் மட்டும்தான் என்றாலும், ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளத்தையும் அள்ளிவிட்டார் என்கிறார் மலேசியா செல்லியல் இதழ் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன். அப்போது கலைஞர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராகக் கூட இல்லை.
1996-ல் நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரான கலைஞர் 1999 ஜனவரியில் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா நாடுகளுக்கு சென்றார். ஒரு மாமாங்கம் கழித்து மலேஷியாவுக்கும், முதன்முறையாக சிங்கப்பூருக்கும் அவர் மேற்கொண்ட அந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளிலும் தமிழர்கள் சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.
நல்ல வேலைவாய்ப்பை எதிர்பார்த்து, போலி முகவர்களிடம் அதிகப் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போனவர்கள், விசா காலம் முடிந்தவர்கள் உள்ளிட்ட சட்டச் சிக்கல்களை எதிர்கொண்ட தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்த்திருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக அங்கு சென்ற கலைஞர் முதலில் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் அவர்களை சந்தித்தார். தமிழர்களின் பாதுகாப்பிற்கும் அவர்கள் பத்திரமாக தாய் நாடு திரும்புவதற்கும் சிங்கப்பூர் சட்டவிதிகளின்படி உரிய ஏற்பாடுகள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் தமிழர்கள் நிறைந்திருந்த அரங்கில் சங்க இலக்கியம் குறித்த அருமையான உரையாற்றினார் கலைஞர். மேடையில் அவர் ஒருவருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டிருந்தது. அதைத் தன் பேச்சில் சுட்டிக்காட்டிய கலைஞர், “நீங்கள் என்னை தன்னந்தனியே அமர்த்தியிருந்தாலும் தமிழர்களாகிய உங்களை நான் ஒருபோதும் தனித்து விட மாட்டேன்” என்றார் தனக்கேயுரிய தமிழ் நடையுடன்.

பெரியார், அண்ணா, குன்றக்குடி அடிகளார் உரையாற்றிய மண்ணில் நான் முதன்முறையாக உரையாற்றுகிறேன் என்றவர், “சிங்கப்பூர் வாழ் சீனர்கள் தங்கள் தாய்மொழியான மான்டரினை அடுத்த தலைமுறைக்கு ஓர் இயக்கமாக கொண்டு செல்வது போல, தமிழர்களும் தாய்மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய அதே நேரத்தில், அண்ணா அவர்கள் சொன்னதுபோல எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்த நாட்டின் சட்டங்களை மதித்துப் போற்றி வாழ வேண்டும். அதன் உயர்வுக்கு பாடுபடவேண்டும்” என்பதை கலைஞர் வலியுறுத்தினார்.
மூன்று நாட்கள் சிங்கப்பூரில் இருந்தவர் அப்போது அங்கு வசித்து வந்த தன் மகள் கவிஞர் கனிமொழி இல்லத்திற்கு சென்று தங்கினார். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்குமான வணிகம்-தொழில் மேம்பாட்டுக்காக அந்தந்த துறைகளின் அமைச்சர்களை சந்தித்துப் பேசியபின், அடுத்த மூன்று நாட்கள் மலேசியா பயணம்.
மலேசியாவின் பிரதமராக மகாதீர் இருந்தார். அவரிடமும் தமிழர்களின் நலன் குறித்துப் பேசிய கலைஞர், மலேசிய தமிழர்கள், தமிழ்ச் சங்கத்தினர் ஆகியோரை சந்தித்தபின் தாயகம் திரும்பினார். இந்தப் பயணத்தில் தி.மு.க பொருளாளரும் அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கலைஞருக்குத் துணையாக இருந்தார்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கான குரலாக ஒலித்த திராவிடம், உலக அரங்கில் இந்தியாவுக்கும் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளின் உரிமைக்குமான குரலாக ஒலித்த முதன்மையான நிகழ்வு, 2001ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் மாநாடு (World Trade Organisation (WTO).
1980களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில ஐ.நா. மனித உரிமை அமைப்பில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உலகப் பிரதிநிதிகளின் பார்வைக்கு ஈழத்தமிழர் பிரச்சினைகளை கவனப்படுத்தியிருக்கிறார்கள். ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க அமைச்சர்கள் பல நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பிரதிநிதிகளாக செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், தோஹா உலக வர்த்தக மாநாடு இந்தியாவின் பங்களிப்பில் ஒரு மைக்ல்லாக மாறியது. அதற்கு காரணமானவர் வர்த்தகத் துறை அமைச்சர் பொறுப்பு வகித்தவரும், கலைஞரின் மனசாட்சியாகத் திகழ்ந்தவருமான முரசொலி மாறன்.
142 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க இருந்தவர் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். கடைசி நேரத்தில், பயணத் திட்டம் மாறியது. வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன் தலைமையில் இந்தியக் குழுவை அனுப்பினார். உலகாளவிய எந்த மாநாடாக இருந்தாலும் அதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கைகளே ஓங்கியிருக்கும். உலக வர்த்தக மாநாட்டில் பொருட்கள் குவிப்பு தடுப்பு சட்டம், விவசாய மானியங்கள், ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் மானியங்கள் வழங்குதல் போன்றவை விவாதிக்கப்படவிருந்தன. அதற்குரிய வரைவு ஒப்பந்தங்களும் ரெடியாக இருந்தன.
முரசொலி மாறன் தன்னுடைய பயணத்திற்கு முன்பாக பிரதமர் வாஜ்பாயை சந்தித்தார். “மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு?” என்ன என்று கேட்டார். அதற்கு பிரதமர், “வர்த்தக அமைச்சரின் நிலைப்பாடு என்னவோ அதுதான் இந்தியாவின் நிலைப்பாடு” என்று மாறன் மீது நம்பிக்கை வைத்து, சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார். அத்துடன், மற்ற நாடுகளிலிருந்து வரும் அதிபர்களுக்கும் பிரதமர்களுக்கும் இணையாக இந்தியாவின் பிரதமர் சார்பில் பங்கேற்கும் வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன் தலைமையிலான குழுவினரின் பயணத்திற்காக தனி விமானத்தையும் கொடுத்து வழியனுப்பினார்.
விமானப் பயணத்திலேயே வரைவு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார் முரசொலி மாறன். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. தயாராகவும் இல்லை. பத்திரிகையாளரான முரசொலி மாறனுக்கு ஒரு பழக்கம் உண்டு. விடிய விடிய படிப்பார். குறிப்புகள் எடுப்பார். சரியான தரவுகளுடன் கட்டுரையோ, புத்தகமோ எழுதுவார். வர்த்தக அமைச்சராகவும் அதையே செய்தார். வரைவுத் தீர்மானங்களை அவரே படித்து, குறிப்புகள் எடுத்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்தியாவுக்கு பாதகமான அம்சங்களை பட்டியலிட்டார். உலகில் உள்ள பெரும்பாலான வளரும் நாடுகளுக்கும் அதே பாதிப்பு உண்டாகும் என்பதை உணர்ந்தார்.
உலக வர்த்தக மாநாட்டில் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாட்டு அமைச்சர்களை அழைத்து தனியாக ஒரு கூட்டம் நடத்தினார் முரசொலி மாறன். ஒப்பந்தத்தில் உள்ள பாதகங்களை விளக்கி ஆதரவைத் திரட்டினார். அதன்பின் தன்னுடைய உரையை முன்வைத்தார்.
“நாம் ஒரு வலுவான பொது வர்த்தக அரங்கத்தை வேண்டுகிறோம். அது விதிமுறைகளைச் சார்ந்து இயங்க வேண்டும். அதிகாரத்தை சார்ந்தல்ல” என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அதிகாரமிக்க நாடுகளின் தலைவர்கள் முன், மாறனின் குரல் ஒலித்தது. “வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் உலக வர்த்தக அமைப்பு முன்னெடுக்க கூடாது” என்கிற அவருடைய ஒற்றை வரி தீர்மானத்திற்கு வளரும் நாடுகள் ஆதரவளித்தன.
அமெரிக்கா திகைத்தது. அதன் அதிபர், இந்திய பிரதமரிடம் பேசினார். மாறன் குரல்தான் இந்தியாவின் குரல் என்றார் பிரதமர். வேறு வழியில்லை. உலக வர்த்தக மாநாட்டின் வரலாற்றில், முதல் முறையாக வரைவு ஒப்பந்தங்கள் முழுமையாகத் திருத்தங்கள் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வளரும் நாடுகள் ஒற்றுமையாக நின்றால், அமெரிக்காவுக்கே கடிவாளம் போடலாம் என்கிற உலகளாவிய சம்பவத்தை செய்தவர் திராவிடச் சிந்தனையாளர் முரசொலி மாறன்.
(சுற்றும்)
-கோவி. லெனின்
