உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்திய அரசின் புதிய சட்டம், பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டுடன் கலைஞர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, 1996ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தியாவின் முதன்மையான மாநகராட்சிகளில் ஒன்றான சென்னை மாநகராட்சியில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் மேயர் பதவி காலியாக இருந்தது. மேயர் என்ற சொல்லையே அன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை.
மாநகராட்சி மேயர்களையும் நகராட்சி-பேரூராட்சி சேர்மன்களையும் நேரடியாக மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை கலைஞர் ஆட்சி நடைமுறைப்படுத்தியது. ஏறத்தாழ 30 லட்சம் வாக்காளர்களைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
மில்லினியம் எனப்படும் புத்தாயிரம் ஆண்டு அதாவது 2 K kids, Gen Z தலைமுறையினரை அப்போதே மனதில் கொண்டு 1996-2001 ஆட்சிக்காலத்தில் சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் சென்னையை வடிவமைத்தவர் மேயர் மு.க.ஸ்டாலின். உலகமயம்-தாராளமயம் என உலகத்தின் போக்குகள் மாறியிருந்த காலகட்டத்தில் பல நாடுகளிலும் உள்ள பெருநகரங்களில் உள்கட்டமைப்புகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன, மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகின்றன என்பதை சென்னை மேயர் அறிந்துகொள்ளும் வகையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட அமைப்பு முன்னெடுத்த உலக சமாதனாத்திற்கான மேயர்கள் மாநாடு பயன்பட்டது.

நிர்வாகப் பொறுப்புடன் இன்றைய கழகத் தலைவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் அதுதான். அமெரிக்கா மட்டுமின்றி மேலும் சில இடங்களுக்கும் அவர் சென்று வந்ததை ‘பயணச் சிறகுகள்’ என்ற நூலாக வழங்கியிருக்கிறார். 2006-2011 ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பின்னர் துணை முதலமைச்சராக தொழில்துறையையும் கூடுதலாக ஏற்ற நேரத்தில், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது தொடர்பாக ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தார். இத்தகைய நிர்வாகப் பொறுப்பு ஏதுமின்றி 2012ஆம் ஆண்டு, திராவிடக் கொள்கை உறுதி மிக்க கலைஞரின் உடன்பிறப்பாக அவர் மேற்கொண்ட பயணம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
ஈழத்தமிழர் நலன் காக்க 1956லேயே பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, 1977 முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி, சிறை சென்று, சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, ஆட்சியை இழந்து, ராஜீவ் காந்தி கொலைப்பழியை சுமந்து, தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்து, தடா சட்டத்தின்கீழ் பலர் கைதாகி, அதன்பிறகும் ஈழத்தமிழர் நலன் காக்க மறியல், மனிதச்சங்கிலி என நடத்தி, ஈழத்தமிழர் பெயரால் சல்லிக்காசோ, தேர்தல் ஆதாயமோ அடையாத ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என்பதை உடன்பிறப்புகள் நெஞ்சு நிமிர்த்தி சொல்வார்கள்.
அந்த உடன்பிறப்புகளின் உயிருக்கு உயிரான தலைவரான கலைஞரை துரோகி என்று சொல்லி அரசியல் வியாபாரம் செய்தது ஒரு கூட்டம். அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் உணர்வோடு கலந்த அக்கறையுடன் 12-8-2012 அன்று சென்னையில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கம் (டெசோ) (Tamil Eelam Supporters Organisation) மாநாட்டை நடத்தி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைப் பங்கேற்கச் செய்தார் கலைஞர். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. அமைப்பிடம் கொண்டு சேர்த்து, இலங்கையில் நடந்து முடிந்த கொடூரப் போரின் சூழலையும், இனஅழிப்பு செய்யப்பட்ட நிலத்தில், எஞ்சியிருக்கும் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டிட முயற்சி எடுக்கவும் வலியுறுத்தும் பொறுப்பை திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கழகத் தலைமை ஒப்படைத்தது.

அவரும் ஒன்றிய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு எம்.பி.யும் கடுங்குளிர் நிலவிய அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 2012 அக்டோபர் மாத இறுதியில் புறப்பட்டார்கள். நவம்பர் 1 அன்று ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியசன் அவர்களை சந்தித்து டெசோ மாநாட்டின் 14 தீர்மானங்களை அளித்த தளபதி மு.க.ஸ்டாலின், “இது எங்கள் தொப்புள் கொடி உறவுகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். ஓர் இனத்தை அழிக்கும் முயற்சியாக நடைபெற்ற போர் குறித்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் நியாயமான விசாரணை நடத்தவேண்டும். இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் உள்ள சிங்கள ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டு, அங்கே தமிழர்கள் அமைதியான வாழ்க்கை வாழ ஐ.நா.சபை உறுதி செய்ய வேண்டும். ஏறத்தாழ 1 இலட்சம் தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்துள்ளனர். குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்களுக்கான குடியுரிமையை உறுதி செய்யவேண்டும். பல நாடுகளின் சிறைகளில் உள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உருக்கமுடனும் உணர்வுப்பூர்வமாகவும் கேட்டுக்கொண்டார். ‘இரத்தம் வடியும் இதயத்தின் துடிப்பு’ என்கிற ஈழத் தமிழர்கள் நிலை குறித்த ஆவணப்படத்தின் ஒளிப்பேழையை ஐ.நா.வின் துணைச் செயலாளரிடம் அளித்தார் ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலு.
ஐ.நா.துணை பொதுச் செயலாளரும் மற்ற அதிகாரிகளும் ஆலோசித்தனர். ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனீவாவுக்கு செல்லவிருப்பதை அவர்களிடம் தளபதியும் அமைச்சர் டி.ஆர்.பாலுவும் தெரிவித்தனர். 11.6.2012 அன்று ஜெனீவா நகருக்கு சென்று ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்களிடம் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அளித்தார் தளபதி. அவருடன் சென்றிருந்த டி.ஆர்.பாலு, ஏற்கனவே இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்தால் இலங்கை நிலவரத்தை விளக்கினார். தீர்மானங்களில் உள்ளதை நிறைவேற்றினால் ஈழத்தமிழர்களின் வாழ்வு மலரும் என தமிழரான நவநீதம் பிள்ளையிடம் தளபதி தெரிவித்தார். சாத்தியமான அம்சங்கள் பற்றி பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் அதன்பின், கலைஞரின் நலன் பற்றி தளபதியிடம் விசாரித்தார்.

ஜெனீவா பயணத்திற்குப் பிறகு இலண்டன் சென்றனர். அங்கே நவம்பர் 7 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் இலண்டன் மற்றும் பிற நகரங்களில் உள்ள தமிழர்கள் திரண்ட கூட்டத்தில் தளபதியும் டி.ஆர்.பாலுவும் கலந்துகொண்டனர். தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்கள் பெயரில் வயிறு வளர்க்கும் கூட்டம் அங்கே வந்து தன் கைவரிசையைக் காட்ட நினைத்தாலும், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுக் குரலாக இலண்டன் கூட்டத்தில் தளபதி தன் கருத்துகளைத் தெரிவித்தார். கழகத்தின் மீதான உலகத் தமிழர்களின் நம்பிக்கையை உறுதி செய்வதே அவரது இலண்டன் பயணத்தின் நோக்கமாக அமைந்தது.
டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா.அவையிலும், மனித உரிமை ஆணையத்திலும் வழங்கிவிட்டு, 11-11-2012 அன்று சென்னை திரும்பிய தளபதியையும் அமைச்சர் டி.ஆர்.பாலுவையும் வரவேற்க விமானநிலையத்தில் பூங்கொத்துடன் காத்திருந்தவர், எந்நாளும் தமிழுணர்வு மாறாத தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர்.
(சுற்றும்)
-கோவி. லெனின்
