திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க.வை கலைஞருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தி, 6வது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்த செயல்வீரரான மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், கலைஞர் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு, அதன்பின் ஆட்சி மாற்றத்தால் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட அயலகத் தமிழர் நலத் துறையை உருவாக்கி, உலகில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலன் காக்கும் பணியை மேற்கொண்டார்.
ரஷ்யா-உக்ரைன் போரின்போது அங்கே சிக்கிக்கொண்ட தமிழர்கள் அத்தனை பேரும் பத்திரமாக தாய்மண் திரும்புவதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடனும், தூதரகங்களுடனும் இணைந்து மாநில அரசு செயல்பட, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் தரவுகளைப் பெற்று, போர்க்களத்தில் சிக்கியிருந்த கடைசித் தமிழரை மீட்கும்வரை பணியாற்றினர்.
தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க, அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று மாற்றி, அவர்களுக்கு வீடு, கல்வி, பணக்கொடை, ரேஷன் பொருட்கள், மருத்துவ வசதி, தனியார் வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கியது திராவிட மாடல் அரசு. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் படகுகளில் வந்த இலங்கைத் தமிழர்களையும் திராவிட மாடல் அரசு அரவணைத்தது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம், ஐக்கிய அரபு நாடுகள். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுதான் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கம். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. அயலக அணிச் செயலாளராக முதலில் பொறுப்புவகித்த முனைவர் டி.ஆர்.பி.ராஜா, அயலக அணிச் செயலாளரான எம்.எம்.அப்துல்லா எம்.பி. உள்ளிட்டோர் முதலமைச்சரின் பயணத்தில் இடம் பெற்றிருந்தனர்.
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்ற நமது முதலமைச்சர் அங்கு ஐக்கிய அமீரகத்தின் அரசு துறையினரையும் முதலீட்டாளர்களையும் சந்தித்தார். லூலூ போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தன. அமீரகத் தமிழர்கள் முதலமைச்சருக்கு அளித்த பெரும் வரவேற்பில் அரங்கம் நிறைந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளியே நின்று அவர் வருகையின்போது ஆர்ப்பரித்தனர். புகழ்பெற்ற புஜ் கலிஃபா கோபுரத்தில், ‘தமிழ்’ என்ற சொல் வண்ணவிளக்குகளால் ஒளிர்ந்தது.
முதலமைச்சரின் அடுத்த வெளிநாட்டுப் பயணம், சிங்கப்பூர். இதுவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான். 2023 மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தின்போது தங்கம் தென்னரசு நிதியமைச்சராகிவிட்டார். தொழில்துறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா. சிங்கப்பூர் அரசு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, சிங்கப்பூரின் தொழில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரும் தனது நெடுங்கால நண்பருமான தமிழர் ஈஸ்வரனுடன் முதலமைச்சர் ஆலோசித்தார். அவருடன் சென்று முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்றார்.
சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்று அங்கு தமிழர்களுடன் முதலமைச்சர் தேநீர் அருந்த, அவர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சிங்கப்பூர் வாழ் தமிழ் நெஞ்சங்கள் கலாசார-பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கம் நிறைந்திருந்தது. சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரான தமிழர் சண்முகமும் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்து கொண்டார். சிங்கப்பூரின் உலகளாவிய வளர்ச்சிக்கு காரணமானவரும், தமிழர்கள் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டவரும், அண்ணா-கலைஞர் ஆகியோரிடம் நட்பு பாராட்டியவருமான சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மன்னார்குடியில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, அங்கே அவருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தபோது ஆரவாரம் அடங்க சில நிமிடங்களாயின.

அடுத்ததாக, 2023 மே 25 அன்று இரவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானின் தொழில் நகரமான ஒசாகாவுக்கு சென்றார். இந்திய தூதரகத்தின் கான்சல் ஜெனரல் நிகிலேஷ் கிரி வரவேற்பளித்தார். உற்பத்தி சார்ந்த துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக நடைபெற்ற முதலீட்டாளர் கருத்தரங்குகளில் வெற்றிகரமாக ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கோமாட்சு நிறுவனத்தின் பெரிய தொழிற்சாலையையும் முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணித்தார்.
பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக டோக்கியோவுக்குப் பயணித்தவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான். ஜப்பான் வாழ் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் என்ற பெருமையும் அவருக்கேயுரியது. டோக்கியோ, ஒசாகா, ஹிரோஷிமா, கியோட்டோ உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் தமிழர்கள் குவிந்துவிட்டனர். இன்னும் தங்களின் பண்பாட்டை மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜப்பான் வாழ் தமிழர்களின் குழந்தைகள் அதை நடத்திக் காட்டின. தகவல் தொழில்நுட்பம், வணிகம், தொழில் என ஜப்பானில் தமிழர்கள் நல்ல நிலையில் இருப்பதை முதலமைச்சர் கண்டு மகிழ்ந்தார்.
கழகத்தின் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்களின் சங்கத்தின் சார்பில் அதன் தோழர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் புத்தகங்களைப் பரிசாக அளித்தனர். அந்தப் புத்தகங்கள் ஜப்பான் மொழியில் இருந்தன. ஆனால், முகப்பில் பெரியார் படம் இருந்தது. ஆம்.. பெரியாரையும் திராவிடத் தத்துவங்களையும் ஜப்பான் மொழியில் அங்கு வாழும் நம் தமிழர்கள் மொழிபெயர்ப்பு செய்து, தங்களை உயரவைத்த இயக்கத்திற்கு நன்றி செலுத்தியிருந்தனர். சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளில் 9 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், அடுத்ததாக சில மாதங்கள் கழித்து, ஸ்பெய்ன் நாட்டிற்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தார்.
2024 ஆகஸ்ட் 28 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான்பிரான்சிஸ்கோ நகரில் தரையிறங்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு தூதரக அதிகாரிகளுடன், அங்கு வாழும் தமிழர்கள் குடும்பமாக திரண்டு வரவேற்பளித்தனர். சமூக நிதிக்கும், மனித உரிமைக்குமான குரல்களும் அதன் விளைவான சட்டங்களும் கலிபோர்னியா மாநிலத்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் தனித்துவமாக வெளிப்படுத்தும். அங்கே முதலீட்டாளர்களை சந்தித்தார் முதலமைச்சர். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துணையிருந்தார்.
கடற்கரை நகரமான சான்பிரான்சிஸ்கோவை முதலமைச்சர் மிகவும் ரசித்தார். அதிகாலை நேரத்தில் பாட்டு பாடியபடியே சைக்கிளில் சென்றார். தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் இருந்த புகழ்பெற்ற பாடகர் டோனி பென்னட் சிலை முன்பு படம் எடுத்துக்கொண்டார். அதன்பின் கூகுள், ஆப்பிள், மெட்டா உள்ளிட்ட உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள சிலிகான் வேலிக்கு முதலீட்டு ஒப்பந்தங்களுக்காக சென்றார்.
அங்கிருந்த ஒவ்வொரு நிறுவனத்திலும், அதன் ஒவ்வொரு பிரிவிலும் யாரேனும் ஒரு தமிழர் உயர் பொறுப்பில் இருப்பதை முதலமைச்சர் கவனித்தார். அவர்களும் முதலமைச்சரிடம், திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கைதான் எங்களுக்கு உயர்கல்வி-தொழிற்கல்வியை தந்து இந்த உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்றனர். “ஜெயிச்சிட்டோம் மாறா..” என்கிற உணர்வுதான் சொன்னவர்ளுக்கும், கேட்டவருக்கும்.
2024 செப்டம்பர் 7 அன்று சிகாகோ நகரில் அரங்கம் கொள்ளாத அளவுக்கு திரண்ட தமிழர்கள் முன் பட்டு வேட்டி-சட்டை-தோளில் துண்டுடன் அறிமுகமாகிப் பேசினார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஒரு நூற்றாண்டு கால திராவிடம் என்ன சாதித்தது என்பதற்கு சாட்சியானது அந்தக் கூட்டம்.
(சுற்றும்)
-கோவி. லெனின்
