திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர், சமூக நீதி அடிப்படையிலான வகுப்புவாரி இடஒதுக்கீட்டுத் தொகுதிகளை வலியுறுத்தி இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணத்திலிருந்தே, உலகளாவிய அரசியல் சூழல்களையும், பொருளாதார வளர்ச்சியையும் கவனிக்கும் பார்வை திராவிடத் தலைவர்களுக்கு இருந்து வந்தது. கம்யூனிச அரசாங்கம் நடந்த சோவியத் யூனியன் எனும் ரஷ்யாவையும், ஐரோப்பிய நாடுகளின் முற்போக்கு கொள்கைகளையும் தெரிந்துகொள்வதற்காகவே ஓராண்டு கால அளவிலான பயணத்தை மேற்கொண்டவர் பெரியார்.
முதலமைச்சராக அண்ணாவும், கலைஞரும், அவர்களைத் தொடர்ந்து இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் கல்வி, மருத்துவம், தொழில், பண்பாடு, சுற்றுலா ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னேறுவதற்கும் பயன்பட்டு வருகின்றன.

2021க்குப் பிறகு தொழில்துறையில் தமிழ்நாடு பெற்றுள்ள முதலீடுகளால் உருவான தொழிற்சாலைகளும் அவை வழங்கியுள்ள வேலை வாய்ப்புகளும் முக்கியத்தும் வாய்ந்தவை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. அந்தளவுக்கு தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பு தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெர்மனிக்கு செல்கிறார். டசல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து அவர் வெளியே வரும்போது இந்திய தூதரக அதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ஜெர்மனி வாழ் தமிழர்கள் திரண்டிருந்து வரவேற்பு அளிக்கின்றனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அரங்கம் நிறைந்திருக்கிறது. மலேயாவில் பெரியார் சந்தித்த தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களுக்கும், ஐரோப்பாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த உயர்நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்களுக்குமிடையிலான கல்வி-பொருளாதார-சமூக நிலையிலான முன்னேற்றம்தான் கடந்து வந்து கால இடைவெளியின் தடயங்கள்.
ஜெர்மனியின் நார்த்ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தின் தலைமை அமைச்சர் (மினிஸ்டர் பிரசிடென்ட்) ஹென்ட்ரிக் வுஸ்ட். அதாவது, நமது மாநிலத்தின் முதலமைச்சர் பதவி போல. இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்த முதலமைச்சர் தனது மாகாணத்தில் உள்ள முதலீட்டாளர்களை சந்திக்க வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், தமிழ்நாட்டு முதலமைச்சரை தனது தலைமைச் செயலகத்திற்கு அழைத்தார் ஹெண்ட்ரிக்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜாவும் தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டபோது, நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண முதலமைச்சரின் சிறப்பு கான்வாய் விடுதி வாசலில் காத்திருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமருக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்குமோ அப்படிப்பட்ட வரவேற்புடன் தமிழ்நாட்டின் முதலமைச்சரை தன் கான்வாய் மூலம் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து இரு தரப்பு தொழில் வர்த்தக உறவுகள் குறித்து உரையாடினார் அந்த மாகாணத்தின் தலைமை அமைச்சர்.
வெளிநாடுகளிலுள்ள வசதிகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திட திராவிட இயக்க ஆட்சியில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற திராவிடத் தத்துவத்தை உலக நாடுகளில் பரவிடச் செய்வதற்கான தொடர் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் எந்தவித பதவிகளுக்கும் ஆசைப்படாமல் கருத்துப் பரப்பலையே முதன்மையாகக் கொண்டுள்ளது.
‘பெரியாரை உலக மயமாக்குவோம், உலகை பெரியார் மயமாக்குவோம்‘ என்கிற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கருத்தரங்குகளை நடத்தி பெரியார் கொள்கைகயையும், சமூக நீதி தத்துவத்தையும் தொடர்ந்து பரப்பி வருகிறார்.

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் மட்டுமின்றி அந்நாட்டின் பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்கேற்கும் மன்றமாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரியாரின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தகங்களாக வெளிவருகின்றன. ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு செய்பவர்கள் பெரியார் சிந்தனைகள் மீது ஈடுபாடு கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வுகளைத் தொடர்கின்றனர்.
உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கருத்தரங்குகளும் நடத்தப்பட்டுள்ளன. கால் நூற்றாண்டுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பங்கேற்று சிறப்பித்தார்.
அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆன்டனி கல்லூரியின் ஏசியன் ஸ்டடீஸ் சென்டர் சார்பில் 4-9-2025 அன்று முன்னெடுக்கப்பட்ட சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைத்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. 1932ஆம் ஆண்டில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் துணையுடன் இலண்டன் நகரில் உள்ள பூங்காவிலும் சதுக்கங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் பெரியார்.
தொழிலாளர்கள் சுயமரியாதை கொண்டவர்களாக உரிமைகளைப் பெற வேண்டும் என்று இங்கிலாந்தில், தான் பங்கேற்றக் கூட்டத்தில் பேசியவர் பெரியார். அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அவருடைய படத்தை, பெரியாரின் கொள்கை வாரிசாக-இயக்கத்தின் நான்காம் தலைமுறைத் தலைவராகத் திறந்து வைத்து உரையாற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர். சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் குறித்த ஆய்வுப் புத்தகங்கள் வெளியிடப்பட்டு, இரண்டு நாள் கருத்தரங்கமும் நடைபெற்றது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் உடலுழைப்புத் தொழிலாளர்களாக பர்மா, இலங்கை, மலேயா, மடகாஸ்கர் தீவுகள் எனப் பயணித்த தமிழர்கள், கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு உயர்படிப்பு முடித்து உயர்ந்த வேலைகளுக்கு செல்கிறார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் கப்பலில் பயணித்து இலண்டன் நகரில் அலைந்து, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்காக பாடுபட்டு அங்கேயே இறந்தார் நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் தாரவாட் மாதவன் நாயர். அந்த சமூக நீதிக் கொள்கையை ஆய்வு செய்து, சுயமரியதை இயக்கத்தின் வெற்றிகரமான தாக்கத்தைக் கொண்டாடுகிறது, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம். உலகப் பல்கலைக்கழகங்கள் எங்கும் திராவிடம் பரவுகிறது. திராவிடத் தலைவர்களின் உலகப் பயணம் தொடர்கிறது.
(முற்றும்)
-கோவி. லெனின்
