
வெளிநாடுகளின் வளர்ச்சியை மட்டுமல்ல, அங்குள்ள பழமையான நகரங்களின் பண்பாட்டுப் பெருமைகளையும் அதைப் போற்றிப் பாதுகாக்கும் மேலநாட்டவரின் கலை ஆர்வத்தையும் கலைஞர் கவனிக்கத் தவறவில்லை. இந்தியாவிலிருந்து அவர் சென்ற முதல் வெளிநாட்டு நகரம் இத்தாலியின் தலைநரான ரோம்.
ரோமாபுரி என்று பழந்தமிழர்கள் அதனை அழைத்தார்கள். கடல் வாணிகத் தொடர்பும் தமிழர்களுக்கு இருந்தது. அந்த ரோமாபுரி இப்போதும் சிறந்து விளங்குகிறது. கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் தமிழர்களின் வாணிபத்துடன் தொடர்புடைய பண்பாட்டு நகரம். அதுவும் இப்போது சிறந்து விளங்குகிறது. ஆனால் அந்த நகரங்களுடன் அன்றைய காலத்தில் புகழ் பெற்றிருந்த சோழர்களின் துறைமுக நகரான பூம்புகார் கடலுக்குள் மூழ்கிவிட்டது. ஆழிப்பேரலைகளின் கோரப் பசிக்கு உணவாகிவிட்டது தமிழ்நாட்டின் பண்பாட்டு நகரம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை என தமிழ் இலக்கியங்கள் பூம்புகார் -காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை விளக்குகின்றன. ஏட்டில் பதிவாகியுள்ள நகரம் நாட்டில் இல்லையே என்ற கவலை கொண்ட கலைஞர், கடலில் புதைந்த பூம்புகாரை கரையில் உருவாக்கினார். தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் எப்படி சித்திரிக்கப்பட்டுள்ளதோ அதுபோலவே எழுநிலை மாடம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம் ஆகியவற்றை அமைத்தார். கண்ணகியின் சிலம்பு வடிவ மணி மண்டபத்தை உருவாக்கினார். பூம்புகார் கடற்கரையை கண்கவர் சுற்றுலாத்தலமாக்கி அங்கே இலக்கியம் கூறும் இந்திர விழாவை சித்திரை பௌர்ணமி நாளில் நடத்தினார். கவியரங்குகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இலக்கியப் பட்டிமன்றங்கள் என தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டினார். ரோமாபுரி பாண்டியன் என்ற புதினத்தையும் படைத்தளித்தார்.
திராவிட மாடல் அரசின் இன்றைய முதலமைச்சர் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடலுக்குள் மூழ்கிய பூம்புகாரை ஆய்வு செய்யும் பணிகளுக்கு அனுமதியளித்துள்ளார். அதன் விளைவாக, கடலாய்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. பண்பாட்டுப் பெருமையைப் பாதுகாத்து, அறிவியல் வளர்ச்சியை முன்னெடுக்கும் திறனை, தன் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு மிகச் சரியாக வெளிப்படுத்தியவர் கலைஞர்.
பெரியார், அண்ணா சிந்தனைககள் வழியில் கலைஞர் ஆட்சி செய்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர்களின் சிந்தனைகள் போய்ச் சேரவேண்டும் என்பதில் கலைஞர் உறுதியாக இருந்தார். கவைஞர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே பெரியாரின் வெளிநாட்டுப் பயணம் தொடங்கிவிட்டது. அதுவும் தமிழர்கள் நிறைந்துள்ள வெளிநாடுகளில் அவர்களிடம் பகுத்தறிவு சிந்தனையைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் மேற்கொண்ட முதல் பயணம், மலேயா நாட்டிற்குத்தான். மலேசியாவும் சிங்கப்பூரம் ஒரே நாடாக மலேயா என்ற பெயரில் இருந்த 1929ஆம் ஆண்டு பெரியார் அங்கு பயணம் செய்தார்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ரஜூலாக் என்ற கப்பலில் மனைவி நாகம்மையார், இராமநாதன், சாமி.சிதரம்பரம், நடராசன் ஆகியோருடன் அவர் பயணித்தார்.
டிசம்பர் 20ஆம் நாள் மலேயாவின் பினாங்கு நகரில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தார். பெரியாரையும் நாகம்மையாரையும் உடன் வந்தவர்களையும் மிகச் சிறப்பாக அங்குள்ள சுயமரியாதை இயக்கத்தினரும், தமிழ் அமைப்பினரும், தமிழ் வணிகர்களும் வரவேற்றனர். மலேயா, சீன, சிங்கப்பூர் மக்களும் பெரியாரைக் காண்பதில் ஆர்வம் காட்டினர். அரசு தரப்பிலான பிரமுகர்களும் வரவேற்றனர்.
அதே நேரத்தில் கப்பல் பயணத்திற்கான இன்ஸ்பெக்டர் முதல் மலேயா நாட்டு அதிகாரிகள் வரை பெரியாரிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். “ஐயா, உங்களுக்கு பலத்த வரவேற்பு இருக்கிறது. அதே நேரத்தில், உங்கள் வருகைக்கு எதிர்ப்பும் இருக்கிறது. அதனால் கடவுள், மதம் பற்றி பேசாமல் தவிர்த்துவிடுஙகள்” என்று பெரியாரிடம் கேட்டுக்கொண்டனர். அவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்ட பெரியார் தனக்கேயுரிய பதிலை அளித்தார்.
“எனக்கு கடவுள் மீதோ, மதம் மீதா தனிப்பட்ட பகை இல்லை. அதன் பெயரால் மக்கனை பகுத்தறிவுடன் சிந்திக்க விடாமல் தடுப்பதைத்தான் எதிர்த்து பிரச்சாரம் செய்கிறேன். நான் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கத் தெரியாமல், பயந்தாங்கொள்ளித்தனமாக என் பிரச்சாரத்தைத் தடுக்கப் பார்க்கிறார்கள். உண்மையில் மக்களுக்கு அறிவும் நன்மையும் உண்டாகும்படியான ஒரு கடவுளோ, மதமோ இருக்குமென்றால் அதற்கு என் ஒருவனால் ஆபத்து வருமா?” என்று கேட்டார். அதிகாரிகளிடம் அளித்த விளக்கத்தைத்தான் மலேயா நாட்டில் பினாங்கு, பட்டர் வொர்த், கோலாலம்பூர், சிங்கப்பூர், மூவார் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்களிடம் பெரியார் அளித்தார்.

பல்வேறு அமைப்புகள் அவரை வரவேற்று தேநீர் விருந்து அளித்தன. பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பேசச் சொன்னார்கள். தமிழ் முரசு பத்திரிகை ஆசிரியர் சாரங்கபாணி, அ.சி.சுப்பையா, பினாங்கு அமீது களஞ்சியம், சீனிராவுத்தர், ஒலி முகமது என பலரும் அவர் பயணத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர். மலேயாவில் வாழும் தமிழர்களின் உழைப்பு, அவர்கள் குடும்ப நிலை, அதே மலேயாவில் வாழும் மற்ற இனத்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள உயர்வு எல்லாவற்றையும் பெரியார் தன் பரப்புரையில் சுட்டிக்காட்டினார்.
தம்பன் என்ற ஊரில் பெரியார் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தங்கியிருந்தபோது 40 வயது பெண்மணி ஒருவர் 20 வயது மகளுடன் பெரியாரை பார்க்க வந்தார்.
“சாமி.. இங்கே இந்தியாவிலிருந்து வந்திருக்கிற சாமியார் எங்கே?” என்று கேட்டபடியே, பெரியாரை பார்த்துவிட்டு, “நீங்கதானே அந்த சாமி? என்று தன் மகளுடன் பெரியாரின் காலில் விழுந்தார். பெரியார் அந்த அம்மையாரையும் மகளையும் எழுந்திருக்கச் சொல்லிவிட்டு, “நான் சாமியல்ல..வெறும் ஆசாமிதான்” என்றபோதும் அந்த பெண்மணி நம்பவில்லை. “பெரிய மனுஷங்க இப்படித்தான் சொல்லுவாங்க. எங்களை ஆசிர்வதிக்கணும்” என்றார்.
அத்துடன் விடவில்லை. “சாமி.. இது என் மகள். கல்யாணமாகியும் குழந்தையில்லை. நீங்கதான் அவளுக்கு குழந்தை உண்டாக ஆசீர்வதிக்கணும்” என்றார். பெரியார் சிரித்தபடியே தன் பக்கத்தில் இருந்த நாகம்மையாரை சுட்டிக்காட்டி, “எங்களுக்கு கல்யாணமாகி 20 வருசமாகுது. இதுவரைக்கும் எங்களுக்கே குழந்தையில்லை.. நான் எப்படிம்மா உங்க மகளுக்கு ஆசீர்வதிக்க முடியும்?” என்று கேட்டும், நாகம்மையார் ஆமாம் என்று சொல்லியும் அந்த பெண்மணி அங்கிருந்து போகவில்லை.
பெரியார் அந்தப் பெண்மணியிடம், “சரி.. இப்போதைக்கு குழந்தை இல்லாவிட்டால் பரவாயில்லை. இரண்டு, மூணு வருஷம் கழிச்சி பொறக்கட்டும். அதுவும் அளவா பெத்துக்குங்க. இங்கே சம்பாதிக்கிறதை சிக்கனமா செலவு பண்ணி, சேமிச்சி வச்சி, சொந்த நாட்டுக்கு போகும்போது கஷ்டமில்லாம வாழப் பாருங்க” என்றார். அதன்பின்தான் அந்த அம்மையார் நிம்மதியுடன் தன் மகளை அழைத்துச் சென்றார்.
அவர் போனதும் பெரியார் தன் அருகிலிருந்தவர்களிடம் சொன்னார், “நமக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு” என்று.
மலேயாவில் மட்டுமா, தமிழ்நாட்டிலும் வடமாநிலங்களிலும் அவர் தன் வேலையைத் தொடர்ந்து செய்தார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்