
என்னதான் கல்வி நிதியை முழுவதுமாக நிறுத்தி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை குன்றச் செய்திடலாம் என்று மத்திய அரசு நினைத்தாலும் நீரில் அழுத்திய பந்து மேலெழும்பி நிற்பது மாதிரி உயர்ந்து நிற்கிறது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி.
மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழ்நாட்டின் கல்வி நிதிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வஞ்சம் தீர்க்கிறது மத்திய அரசு என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கொடுக்க வேண்டியதை பெறுவதற்காக கொள்கையை விட்டுத்தர மாட்டோம். பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற உறுதியுடன் உள்ளார் முதல்வர்.

மொழி உணர்வு ரீதியாக தமிழ்நாடு இப்படி பிடிவாதமாக இருப்பதை உணராமல் மத்திய அரசும் நிதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. ஆனாலும் நிதி நிலைமையை சமாளித்து கல்வி வளர்ச்சியில் தடை ஏதும் இல்லாத வண்ணம் செய்து வருகிறார் முதல்வர் என்பது ’தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 -25’ உணர்த்துகிறது.
சட்டப்பேரவையில் இந்த ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், முன்னதாக இன்றைய தினமே இந்த நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளார் முதல்வர். பொருளாதார ஆய்வறிக்கையினை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல் முறை என்பதால் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.
தேசிய அளவில் 6 சதவிகிதம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விடவும் அதிகமாக உள்ளது என்றும், நாட்டிலேயே நான்காவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.
தொடக்கக் கல்வி முதல், உயர்கல்வி வரையிலான மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் – மாணவர் விகிதம் உள்ளிட்டவற்றில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிகம் இருக்கிறது என்று கூறுகிறது அந்த அறிக்கை. அதாவது, தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு 98.4% ஆகவும், தேசிய சராசரி 91.7% ஆகவும் உள்ளது. உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு 97.5% ஆகவும், தேசிய சராசரி 77.4% ஆகவும் உள்ளது. மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு 82.9% ஆகவும், தேசிய சராசரி 56.2% ஆகவும் உள்ளது.
கல்வி நிதியே தராமல் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகின்ற நிலையிலும், கல்வி வளர்ச்சியில் தேசிய சராசரியை விடவும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது கண்டு விழிபிதுங்கி நிற்கிறது மத்திய அரசு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.