அதிமுகவில் அடிமட்ட தொண்டராக இருந்து அமைச்சர் பதவி வரைக்கும் உயர்ந்தவர் வைத்திலிங்கம். சசிகலாவின் திவீர ஆதரவாளரான இவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டியவர் என்று இப்போதும் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஓபிஎஸ் அணியில் மிகவும் பலமாக இருந்து வரும் வைத்திலிங்கம் வீட்டில் இன்று ED ரெய்டு நடக்கிறது. ஏன் இந்த ரெய்டு? யார் சொல்லி நடக்குது இந்த ரெய்டு?
கடந்த 2011 -16 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அக்கால கட்டத்தில் சென்னை அடுத்த பெருங்களத்தூரில் 1453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனம் கட்டியது ஸ்ரீராம் பிராப்பர்டீஸ். இதற்காக வீட்டு வசதித்துறையிடன் அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி கொடுப்பதற்காக 27.90 கோடி ரூபாய் வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளித்தது அறப்போர் இயக்கம்.
இந்த புகாரினை அடுத்து வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணயின் போது 2011-2016 கால கட்டத்தில் வைத்திலிங்கம் தன் பெயரிலும் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் வருமானத்திற்கு அதிகமாக வைத்திலிங்கம் சொத்து சேர்த்தது தெரியவந்தது.
லஞ்சப்பணம் எல்லாம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு இயக்குநர்களாக இருக்கும் முத்தம்மாள் நிறுவனத்தின் பெயரில் கடனாக வழங்கப்பட்டது போல் கணக்குக் காட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, முறைகேடான பண பரிவர்த்தனை புகாரின் பேரில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிற்கு 5 கார்களில் 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். காலை 7.30 மணியில் இருந்து வைத்திலிங்கம் மற்றும் அவரது தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் இருக்கும் வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே பேய்கரம்பன் கோட்டையில் வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வம் வீட்டில் ஆள் இல்லாததால் பூட்டிக்கிடந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று சோசதனை நடத்தி வருகின்றனர் அமலாக்கத்துறையினர்.
ரெய்டு நடப்பதை அறிந்ததும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் வீட்டு முன்பு குவிந்து ரெய்டை கண்டித்து கோஷம் எழுப்பினர். எதற்காக வைத்திலிங்கம் வீட்டில் ED ரெய்டு? யார் சொல்லி நடக்குது? குரல் எழுப்பியவர்களை ஓடிவந்து பூட்டிய வாசல் கேட்டுக்கு பின்னிருந்து சமாதானப்படுத்தினார் வைத்திலிங்கம்.