திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் கூட்டத்தில் காலி நாற்காலிகள் அதிகம் இருந்தன. இதைப்பார்த்து எடப்பாடிக்கே ஜெயிச்சிடுவோம்ங்கிற நம்பிக்கை வரல.. கை, காலெல்லாம் நடுங்குது என்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி.
இந்த நிலையிலும் எடப்பாடி திருந்தவில்லை என்று கடும் தாக்குதல் தொடுத்து அதற்கான காரணங்களை அவர் அடுக்கியிருக்கிறார்.
’’எடப்பாடி என்கிற தனி மனிதனின் சுயநலத்துக்காக, தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த கட்சி கேடயமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலிலேயே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவே இல்லை. இந்த பகுதிகளில் மட்டுமே 35 தொகுதிகளுக்கு மேல் வருகிறது. படித்தவர்கள், இளைஞர்கள் அதிகம் இருக்கும் பகுதி இது. ஆனால் 2021லிருந்து இன்றுவரை இந்த பகுதிகளில் கட்சியை பலப்படுத்த எடப்பாடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 15 முதல் 20 தொகுதிகள் வென்றிருக்கலாம், ஆனால் அண்ணாமலை அப்பொழுது செய்தது தவறு. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு தற்பொழுது செய்ததை போலவே “அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்குங்கள் நாங்கள் கூட்டணிக்கு வருகிறோம்” என்று பிரச்சனையை பேசி முடித்துவிட்டு பாஜகவுடன் தொடர்ந்திருந்தால் கணிசமான தொகுதிகள் கிடைத்திருக்கும். ஆனால் அண்ணாமலையுடன் இருந்த தனிப்பட்ட பிரச்சனையை முன் வைத்து கூட்டணியிலிருந்து வெளிவந்து 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்து, ஒரு சில தொகுதிகளில் நான்காம் இடத்திற்கு செல்லுகிற நிலை ஏற்பட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே கே.சி.பி ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி “வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒன்றுபட்ட அதிமுக தேவை அதற்கு முயற்சி எடுக்க வேண்டும்” என்றபோது அனைத்து அதிமுக தொண்டர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி “தெருவில் போகிறவர்கள்” என்று ஒரு தலைவருக்கு தகுதி இல்லாத பொறுப்பற்ற பேச்சு பேசினார். அதை தவிர்த்துவிட்டு அன்றைக்கே கட்சியை ஒருங்கிணைத்திருந்தால் இன்று பல கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வந்திருப்பார்கள். இந்த அளவு வாக்கு சதவீதம் தேய்மானம் அடைந்திருக்காது. திமுகவுக்கு மாற்று கட்சி அதிமுக மட்டும் தான் என்கிற பிம்பம் இந்த ஓராண்டில் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் ஒன்றிய அளவுக்கு ஏற்ற வெறும் உட்கட்சி அரசியலை மட்டுமே முன்னெடுத்துக்கொண்டு தன் தலைமை தக்க வைத்துக் கொள்வதை மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டு அதிமுகவை மிக மிக பலவீனமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

சமீபத்தில் கூட தானாக முன்வந்து ” பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்று இவர் தலைமையை ஏற்றுக்கொண்டு விஜய் கூட்டணிக்கு வருவது போன்ற பிம்பத்தை எடப்பாடி பழனிசாமியே கட்டமைத்து அதிமுக தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் எதிர்பார்ப்பை உருவாக்கி இன்று அவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்.
களம் வேகமாக திமுக VS தவெக என்று மாறிக்கொண்டு வருகிறது. அதற்கு காரணம் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்து சமுதாய மக்களின் எடப்பாடி மீதான வெறுப்பு. அதேபோல் மேற்கு மண்டலத்தில் செங்கோட்டையன் நீக்கம், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் எந்த மாற்றுக் கட்சிக்கும் செல்லாமல் அதிமுகவுக்காகவே பணியாற்றிக் கொண்டிருக்கிற கே.சி.பி போன்றவர்களை இணைக்காமல் இருப்பதும் கொங்கு மண்டலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் பாதிப்பை உருவாக்குகிறது.

இனியும் எடப்பாடியின் தலைமை தேவையா? கட்சி காப்பாற்றப்பட வேண்டுமா அல்லது எடப்பாடியும் அவரது குடும்பமும் காப்பாற்றப்பட வேண்டுமா? அதிமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது’’என்கிறார்.
