எப்படியும் 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை எல்லாம் அதிரடியாகவே செய்து வருகிறது.
அதிமுகவில் இருந்து வெளியே இருப்பவர்களை மீண்டும் இணைப்பதிலும், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதிலும் துளி கூட சம்மதம் இல்லாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இதை எடப்பாடியுடன் இருப்பவர்களே விரும்பவில்லை. அதனால்தான் அதிமுக ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிவிஎஸ் ஹெஸ்ட் ஹவுஸ், பாஸ்கரன் வீடு, உம்மிடி பங்காரு செட்டியார் கெஸ்ட் அவுஸ் என அடிக்கடி ரகசிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
எடப்பாடிக்கு எதிராக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் எல்லாமே பாஜகவின் ஆதரவுடன் தான் நடக்கிறது என்பதற்கு உம்மிடி பங்காரு செட்டியார் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததுதான் சாட்சியாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோலை செய்த கொடுத்ததே உம்மிடி பங்காரு குடும்பம்தான். அதனால் மோடிக்கு இக்குடும்பம் மிக நெருக்கம். இதனால்தான் பாஜக ஆதரவுடன் தான் இக்கூட்டங்கள் நடந்து வருகிறது என்பதை அறிந்து ஆடிப்போயிருக்கிறார் எடப்பாடி.
தனக்கு எதிராக இத்தனை ரகசிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வரும் நிலையிலும் தன் நிலையில் இருந்து இறங்கி வராமல் எடப்பாடி பிடிவாதமாக இருப்பதால் அடுத்த அஸ்திரத்தை எடுத்தது பாஜக. தங்கள் வழிக்கு வராத எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு, சசிகலா மற்றும் எஸ்.பி.வேலுமணி மூலமாக அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிவிட முயற்சி நடக்கிறது என்கிறார்கள். எம்.எல்.ஏக்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் கொடுக்க வேண்டி இருப்பதால், தனது மிடாஸ் தொழிற்சாலையை 2,800 கோடி ரூபாய்க்கு விற்கு முடிவெடுத்துள்ளாராம் சசிகலா.
இது தெரிந்தும் எடப்பாடி அசையாமல் அப்படியே இருப்பதால், எடப்பாடிக்கு செயலாளராக இருந்த ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். மூலம் எடப்பாடியிடம் பேசி கூட்டணிக்கு கதவை திறக்குமாறு பாஜக மிரட்டி வருகிறது என்கிறார்கள்.
இத்தனை நடந்தும் இன்னமும் தங்கள் வழிக்கு வராததால் அடுத்த அஸ்திரத்தை எடுத்திருக்கிறது பாஜக. மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த எடப்பாடிக்கு மிக நெருக்கமான நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடிக்கு எல்லாமுமாக இருந்து வரும் இளங்கோவன் இடங்களில் சோதனை நடத்துவதன் மூலம் எடப்பாடிக்கு மேலும் நெருக்கடி கொடுக்கிறது பாஜக என்ற தகவல் பரவுகிறது.
பாஜகவின் இந்த வேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் சிக்கி இருக்கிறார். ஓபிஎஸ் அணியில் பலமாக இருக்கும் இவரை தன் இழுத்துவிட எடப்பாடி முயன்று வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், ஒரத்தநாடு அருகே வைத்திலிங்க வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை சட்டமன்ற விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும், வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
வைத்திலிங்கம் வீட்டில் நடந்து வரும் சோதனையை வைத்து, அதிமுகவை வளைக்க பாஜக திட்டமா? இல்லை, ஓபிஎஸ்சை காலி செய்தது போல் ஒட்டுமொத்த அதிமுகவையும் காலி செய்ய பாஜக திட்டமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.