
திமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுகவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக நடந்த ஆலோசனையில் மறைமுகமாக இவ்வாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
தவெக, விசிக, பாமக கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற செய்திகள் பரவி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு இப்படி அறிவுறுத்தி இருப்பதான் மூலம் பரவும் செய்திகளை உறுதிப்படுத்துகிறது.

அடுத்த மாதம் அதிமுக பொதுக்குழுவை கூட்ட இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது மழை அதிகமாக இருந்தால் ஜனவரி மாதத்திலோ பிப்ரவரி மாதத்திலோ நடத்துவது என்றும் முடிவெடுத்துள்ளார். அதே நேரம், வழக்கம் போல் சென்னையில் நடத்தாமல் வேறு மாவட்டத்தில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
பொதுக்குழுவை அடுத்து அதிமுக உட்கட்சி தேர்தலையும் நடத்த வேண்டியது இருப்பதால், அதிமுக பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்பது குறித்து இன்று எம்.ஜி. மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் திமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

தவெகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவில் பாமக இருப்பதால் அக்கட்சியுடனுன் அதிமுக பேச்சு நடத்துவதாகவும், இன்னொரு பக்கம் விசிகவுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல் பரவும் நிலையில்தான் மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.