’’ஒரு கட்சிக்கு தொடர்ந்து தலைமை ஏற்பதுதான் வாரிசு அரசியல். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது வாரிசு அரசியல் அல்ல. ஏன் என்றால் இன்றைக்கு போட்டியிடும் தொகுதியில் நாளை வேறொருவர் போட்டியிடுவார். அதனால், ஒரு கட்சிக்கு தொடர்ந்து தலைமை ஏற்பதுதான் வாரிசு அரசியல்’’ என்று அதிமுகவில் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக் கப்படுகிறதே? என்ற கேள்விக்கு இந்த விளக்கத்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
ஓபிஎஸ், ஜெயக்குமார் போன்றோரின் வாரிசுகளின் வருகையை வைத்து அதிமுகவிலும் வாரிசு அரசியல்தான் என்று இருந்த விமர்சனத்தை தனது புது விளக்கத்தினால் காலி செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதுமட்டுமல்லாமல், ‘’வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள்’’ என்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால், இன்று அவரே தனது வாரிசை அதிமுகவுக்குள் கொண்டு வருகிறார் என்று தகவல் பரவுகிறது. அவரே சொன்னது மாதிரி தேர்தல் அரசியல் அல்ல; கட்சிக்கு தலைமை ஏற்கும் வாரிசு அரசியல் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்புக்கு ஒத்துவராமல் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் நிலையில், அவராக இப்படி பேசவில்லை. அவரை இயக்குபவர்கள்தான் பேச வைக்கிறார்கள். அரசியல் வியூக அமைப்பாளர் சுனிலும் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனும்தான் அந்த இயக்குநர்கள் என்று சசிகலா கூறி வருகிறார்.
இத்தனை அரும்பாடுபட்டு கட்சியை தன் கைக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில், மீண்டும் பழைய நிலைக்கே செல்லும்படியாக ஒருங்கிணைப்புக்கு வரும் அழைப்புகளை நிராகரித்து வந்தாலும், தனக்கு பிறகு அதிமுகவின் சொத்துக்கள் வேறு யார் கைக்கும் செல்வதை விரும்பவில்லையாம் எடப்பாடி பழனிச்சாமி. அதனால் தன் மகன் மிதுனை தனது அரசியல் வாரிசாக கொண்டு வரும் முயற்சியில் உள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் பரவுகிறது.
அதிமுக மொத்தமும் எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டதால் ஆத்திரத்தில் இருக்கும் சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கு இந்த செய்தி மேலும் ஆத்திரத்தை மூட்டி இருக்கிறதாம். எடப்பாடி பழனிச்சாமி மிதுனை அரசியல் வாரிசாக அறிவிக்கும் நாளில் அதிமுகவில் பெரும் பூகம்பம் வெடிக்கலாம் என்கிறார்கள்.