
ஓபிஎஸ் காலில் விழுந்தும் கூட காரியம் ஆகவில்லை என்றதும் அவரின் காலையே வாரிவிட்ட ராஜ்சத்யன் இப்போது அதே வேலையை எடப்பாடியிடமும் காட்ட, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக தனது கோபத்தை காட்டி இருக்கிறார் பழனிசாமி.
அனுமதியின்றி பழனிசாமியின் வீட்டுக்குள் எந்த நேரமும் செல்லும் நபராக அதிமுகவில் செல்வாக்குடன் வலம் வந்தவர்தான் ராஜ்சத்யன். மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகனான ராஜ்சத்யன், அதிமுக ஐடி விங்கின் மாநில செயலாளராக இருந்தவர்.
ஜெயலலிதாவின் ஆசியால் அதிமுக ஐடி விங்கின் முதல் மாநில செயலாளராக இருந்தவர் அஸ்பய ஸ்வாமிநாதன். அதன் பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவாளரான சிங்கை ராமச்சந்திரனை அந்த பொறுப்புக்கு கொண்டு வந்தார். அவருக்கு துணையாக ராஜ்சத்யனை நியமித்தார் பழனிசாமி.

ஓபிஎஸ் ஆதரவாளர்களை பழனிசாமி ஓரங்கட்டியபோது சிங்கை ராமச்சந்திரனும் ஓரங்கட்டப்பட்டார். இதனால் அந்த பொறுப்புக்கு ராஜ்சத்யன் வந்தார்.
தலைமைப்பொறுப்பும், பழனிசாமியின் ஆதரவும் அமோகமாக இருந்ததால் பல மட்டங்களிலும் காசு பார்த்து கல்லா கட்டி வந்திருக்கிறார் ராஜ்சத்யன். கல்லா கட்டிய தெம்பில் மத்தியில் தனக்கு அதிகாரம் வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
அந்த நேரத்தில் ஓபிஎஸ்சுடன் பழனிசாமி மீண்டும் கை கோர்த்தபோது சிங்கை ராமச்சந்திரனை மீண்டும் கொண்டு வர ஓபிஎஸ் அழுத்தம் கொடுத்ததால் சங்கடத்தில் நெளிந்தார் பழனிசாமி.
மாநில பொறுப்பை யாருக்கும் கொடுக்க விருப்பமில்லாமல் மண்டல வாரியாக ஐடி விங்கை பிரித்து அதில் கோவை மண்டலத்தை சிங்கை ராமச்சந்திரனுக்கும், மதுரை மண்டலத்தை ராஜ்சத்யனுக்கும் ஒதுக்கினார் பழனிசாமி.
மாநிலங்களவை சீட் விவகாரத்தில் ஓபிஎஸ் தன் தரப்பில் ஒரு ஆளுக்கு தர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அந்த ஒரு சீட் கொடுத்துவிடச் சொல்லி ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் முட்டி மோதிக்கொண்டனர். ஒருவருக்கும் ஓபிஎஸ் ஆதரவுக்கரம் நீட்டவில்லை.
இந்த நேரத்தில்தான் ராஜ்சத்யனும் தனக்கு சீட் வேண்டும் என்று பழனிசாமியிடம் கேட்க, தன் கையிலிருந்த சீட் கொடுத்தாகிவிட்டது என்று கையை விரித்தவர், பழனிசாமி நினைத்தால் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிவிட்டார். இதனால் ஓபிஎஸ்சை பிடிக்க பல வழிகளிலும் முயற்சி செய்தும் ராஜ்சத்யனால் முடியவில்லை. ஒருவழியாக உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் ஓபிஎஸ்சின் காரை மடக்கிவிட்டார் ராஜ்சத்யன். அங்கேயே நெடுஞ்சான் கிடையாக ஓபிஎஸ் காலில் விழுந்து தனக்கு சீட் கேட்டுப்பார்த்தும் பலனில்லை. தன் ஆதரவாளர் தர்மருக்கு கொடுத்துவிட்டார்.

இதில் ஓபிஎஸ் மீது ஆத்திரம் கொண்ட ராஜ்சத்யன், அவருக்கு எதிராக காய் நகர்த்தி வந்தார். ஓபிஎஸ்க்கு எதிரான கட்சியின் சீனியர்களுடன் சேர்ந்துகொண்டு ஓபிஎஸ் வெளியேற என்ன சதிவேலைகளை செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வந்தார் ராஜ்சத்யன் என்கிறது ஓபிஎஸ் வட்டாரம்.
இதனால் ராஜ்சத்யன் மீது பழனிசாமிக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படவே, அவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இதை பயன்படுத்திக்கொண்டு பழனிசாமியின் மகன் மிதுனுடன் நெருக்கம் ஆகி, தனது தொழிலையும் வருமானத்தையும் பெருக்கிவிட்டார் ராஜ்சத்யன் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக விளம்பர பொறுப்பை ராஜ்சத்யனுக்கு கொடுத்திருக்கிறார் பழனிசாமி. விளம்பரத்திற்காக 150 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் கடுப்பாகி இருக்கிறார் பழனிசாமி. அதே நேரம் எதிர் தரப்பில் ‘ஸ்டாலின் தான் வாராறு… விடியல் தரப்போராறு’ எனும் விளம்பரம் பட்டைய கிளப்ப, புலம்பிய பழனிசாமியிடம், ராஜ் சத்யனின் உள்ளடி வேலைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.
இதையடுத்து தீவிரமாக விசாரித்த போதுதான் திமுக புள்ளிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வாகன கட்டண வசூல், அரபு நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் அனுப்புவது உள்ளிட்ட தொழில்களில் கல்லா கட்டி வந்தது தெரியவந்ததும், ராஜ்சத்யனை ஓரங்கட்டிவிட்டார் பழனிசாமி.

கட்சி வட்டத்தில் இதை காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல் பழனிசாமியின் முழு அதிகாரத்தில் இருப்பதாகவே தன்னை காட்டி வந்திருக்கிறார் ராஜ்சத்யன். போதைப்பொருள் வழக்கில் ராஜ்சத்யன் பெயர் வந்ததும் தன் மகன் மிதுனை அழைத்து ராஜ்சத்யன் சகவாசத்தை விட்டு விடும்படி சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
பழனிசாமியும் மிதுனும் கை கழுவி விட்டதால் அதிமுகவில் தனக்கு முன்பு இருந்த பவர் இல்லாமல் போய்விட்டது என்பது தெரிந்தும், கட்சி மட்டத்தில் இதை காட்டிக்கொள்ளாமல் வலம் வருகிறார். பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் கூடவே சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து பழனிசாமி அருகே சென்றால் அவர் தூரத்திலேயே துரத்தியடுத்து விட்டார். இதனால் வேறு வழியின்றி கட்சியின் சீனியர்கள் வண்டிகளில் தொற்றிக்கொண்டு பிரச்சார பயணங்களில் தலைகாட்டி வருகிறார் என்று சொல்லும் எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம், இதற்கும் ஒரு ஆப்பு வைக்க தயாராகிவிட்டார் பழனிசாமி என்கிறது.
பழனிசாமி, மிதுனின் ஆதரவு இருந்ததால் ராஜ்சத்யன் போட்ட ஆட்டத்தால் அதிருப்தியில் இருக்கும் வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் பலரும் இதுதான் தருணம் என்று ராஜ்சத்யனை மேலும் டம்மியாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வருகிறார்களாம்.