கூவத்தூர் பங்களாவில் இருந்து தப்பித்து ஓடி வந்து தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ் பக்கம் நின்றவர்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் தப்பித்து ஓடி வந்து ஓபிஎஸ் பக்கம் நின்றார். ஆனால், பின்னாளில் அவர் இபிஎஸ் ஆதரவாளர் ஆகிப்போனார்.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களை எடப்பாடி பழனிசாமி ஏன் மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியாது என்கிறார் என்கிற கேள்விக்கு, அவர் மனம் திறந்திருக்கிறார்.

’’பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள் பேசுகிற பேச்சு காரணம். ‘துரோகி’ என்று எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடுகிறார்கள். இதை கூட பொறுத்துக்கொள்ளலாம். இந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர், எங்கள் பொதுச்செயலாளரை பார்த்து ‘அரக்கன்’ என்று சொல்லுகிறார். அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை அரக்கன் சொல்லுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
சூரசம்ஹாரம் செய்வேன். அரக்கனை ஒழிப்பேன் என்று சொல்லுவதெல்லாம் நியாயமாகுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டுமானால் இது போன்ற செயல்களுக்கு எல்லாம் மன்னிக்கும் குணம் இருந்திருக்கும். இதை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு எம்.ஜி.ஆரிடம் இருக்கும் அந்த பொறுமை குணம் எங்களிடம் இருக்கும் என்று எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை’’என்கிறார்.

பசும்பொன்னில் தேவர் பூஜையின் போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைப்பை செங்கோட்டையன் முன்னெடுத்து வலியுறுத்தி வந்த வேளையில் இதைக்கண்டு வெகுண்டெழுந்தார் டிடிவி தினகரன்.

அவர், ‘’செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பழனிசாமியின் பதவி வெறியும், சுயநலமும்தான் காரணம். குரங்கு கையில் பூமாலை போல் அதிமுக எடப்பாடி கையில் இருக்கிறது. எங்களை துரோகி என்று சொல்லும் இபிஎஸ்தான் துரோகி. துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும். 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் நடக்கும் பழனிசாமி வீழ்த்தப்படுவார்’’என்று வெடித்திருந்தார். இதற்குத்தான் இப்போது செம்மலை பதிலடி கொடுத்திருக்கிறார்.
