
இது அதிமுக இல்லத்திருமணமா? பாஜக இல்லத்திருமணமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியது அதிமுக முக்கிய நிர்வாகி எஸ்.பி.வேலுமணி இல்லத்திருமணம். அந்த அளவுக்கு பாஜக நிர்வாகிகள் இத்திருமணத்திற்கு திரண்டு வந்திருந்தனர். முக்கியமாக வந்திருந்து முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்க வேண்டிய எடப்பாடி வரவே இல்லை. அவரை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றப்போகிறார்கள் என்கிற செய்தி உறுதியாகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றோர் அதிமுகவுக்கு வெளியே இருந்து எதிராக இருப்பதால் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று அதிமுகவினர் நினைக்கிறார்களோ இல்லையோ பாஜக ரொம்பவே நினைத்து வருத்தப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக அனைவரையும் ஒருங்கிணைக்கச் சொல்லி இருக்கிறது பாஜக என்ற பேச்சுக்கள் கசிந்தன.

அந்த நிலையில்தான் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோருடன் சென்று பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று எடப்பாடியிடம் வலியுறுத்தினார் எஸ்.பி.வேலுமணி. உடன் சென்ற 6 பேரும் இதையே எடப்பாடியிடம் வலியுறுத்தினர். ஆனால் கடைசி வரையிலும் எடப்பாடி பிடி கொடுக்கவே இல்லை. இதனால் 6 பேரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
அந்த சந்திப்பில் எடப்பாடியிடம் அதிகமாக பேசி வலியுறுத்தியது செங்கோட்டையன் என்பதால் அவரை ஓரங்கட்ட ஆரம்பித்தார் எடப்பாடி. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டார் செங்கோட்டையன்.
ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நினைக்கிறது பாஜக. ஆனால் எடப்பாடியோ ஒன்றுபடவும் முடியாது, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் முடியாது பிடிவாதமாக இருந்து வருகிறார்.
மார்ச் மாதம் வரைக்கும் கெடு. அதற்குள் ஒத்துவராவிட்டால் எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை வழி நடத்தப்போகிறார்கள் என்ற தகவல் பரவி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளன எஸ்.பி.வேலுமணியின் நடவடிக்கைகள்.

ஜெயலலிதாவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார் அண்ணாமலை. அப்படி இருக்கும் போது தன் மகன் திருமண அழைப்பிதழை அண்ணாமலைக்கு கொடுத்த போதே வேலுமணி மீது அதிருப்தியில் இருந்து வந்தார் எடப்பாடி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்த அமித்ஷாவையும் வேலுமணி சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பாஜகவுடன் எடப்பாடி கூட்டணியை விரும்பாத நிலையில் இது எடப்பாடிக்கு ரொம்பவே எரிச்சலைத் தந்தது. இதில் அண்ணாமலை, வேலுமணி மகன் திருமணத்திற்கு செல்வதாக தகவல் தெரிந்ததுமே அவர் வேலுமணி மகன் திருமணத்தின் வரவேற்பு மற்றும் திருமணத்திற்கு செல்லவே இல்லை.
வேலுமணி அதிமுகவின் முக்கிய நிர்வாகி என்பதால் அவரது இல்ல திருமணத்திற்கு எடப்பாடியின் வருகை இல்லாது போனது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட பாஜக பிரபலங்கள் திரண்டு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். தமிழிசை, அண்ணாமலையின் காலில் விழுந்து மணமக்கள் வாழ்த்து பெற்றனர்.

அண்ணாமலை புறப்பட்டுச் செல்லும்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் கைகுலுக்கி பேசிவிட்டுச் சென்றார். அப்போது அண்ணாமலையின் கைகளை விடாமல் இறுக பிடித்துக்கொண்டு அதிக நேரம் பேசினார் தங்கமணி.
பாஜகவினர் வருவதால்தான் எடப்பாடி ஆப்சென்ட் என்பதால், கட்சி தலைவர்தான் முக்கியம் என்று பாஜகவினரை வேலுமணி தவிர்த்திருக்கலாம். ஆனால், எடப்பாடி வராவிடாலும் பரவாயில்லை. அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் வரவேண்டும் என்றே நினைத்திருக்கிறார் வேலுமணி.
இதனால் எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றத்திட்டமா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.