
போகிற போக்கைப் பார்த்தால் ‘திமுகவின் எதிர்க்கட்சி யார்?’ என்ற குழாயடி சண்டை, குடுமிப்பிடி சண்டையாக மாறிவிடும் போலிருக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி ஆனது. திமுக ஆளுங்கட்சியானது. என்னதான் அதிமுக எதிர்க்கட்சி என்றாலும், பாஜகவே எதிர்க்கட்சி. ஆளுங்கட்சியின் தவறுகளை நாங்கள்தான் சுட்டிக்காட்டி வருகிறோம் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே வந்தார் அண்ணாமலை.
ஏற்கனவே இருந்த ஏகப்பட்ட எரிச்சலில் இந்த எரிச்சலும் தாங்க முடியாமல்தான் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இத்தனை நாளும் அதிமுக கூட்டணியில் சேர்ந்து அதிகாரத்தில் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்ற கனவில் இருந்த விஜய், இப்போது அந்த கனவு பகல் கனவாகி விட்டதால் கடுப்பாகிப் போய், ’’ரெண்டே ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி. ஒண்ணு டிஎம்கே. இன்னொண்ணு டிவிகே’’ என்று தவெக முதல் பொதுக்குழுவில் வெடித்திருக்கிறார்.
விஜய்க்கு பேராசை, தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் அவ்வாறு பேசியுள்ளார் விஜய் என்று அதிமுகவின் மாஜிக்கள் சிலர் எளிதில் கடந்து போனாலும், அதிமுக – பாஜக என்பதுதான் உண்மையான அரசியல் களம் என்றே ஆவேசப்படுகின்றனர் அதிமுக தொண்டர்கள் பலரும்.

‘’பாஜகதான் திமுகவுக்கு எதிராக நிற்கிறது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாக கைதான தொண்டர்கள் உள்ள கட்சி பாஜகதான். அதனால் பாஜகதான் திமுகவுக்கு எதிரி’’ என்கிறார் அண்ணாமலை.
அதே அண்ணாமலை, ’’யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள்’’ என்கிறார். அந்த வகையில் அதிமுகதானே எதிர்க்கட்சி? என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.