
இரவு நேரம் என்று கூட பாராமல் கூப்பிட்டு வச்சு பேசி எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தி அனுப்பியும் கூட ராபா – மாஃபா இடையேயான மோதல் வெப்பம் இன்னும் தணிந்த பாடில்லை.
ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன் இருவருமே முன்னாள் அமைச்சர்கள் என்றாலும் இருவரில் பாண்டியராஜன் சில கட்சிகள் மாறி வந்தவர் என்பதால், தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ் பக்கம் நின்றவர் என்பதாலும் பாண்டியராஜனை மறைமுகமாக இத்தனை நாளும் இழித்தும் பழித்தும் பேசி வந்துள்ளார் ராபா.
தற்போது நேருக்கு நேராகவே ராபா இப்படி பேச ஆரம்பித்து விட்டதால் பிரச்சனை பெரிதாகி இருக்கிறது.

விருதுநகரில் கடந்த 5ஆம் தேதி அன்று அதிமுக பொக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் விருதுநகரைச் சேர்ந்த பாண்டியராஜனும் பங்கேற்றிருந்தார்.
விழாவில் மா.செ. ராபாவுக்கு வெள்ளி வாள் கொடுத்து பொன்னாடை அணிவித்தார்கள் நிர்வாகிகள். அப்போது விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமார் பாண்டியராஜனுக்கு பொன்னாடை போர்த்த வந்தார். இதைக்கவனித்த ராபா, நந்தகுமாரின் கன்னத்தில் அறைந்து அவரை பிடித்துத் தள்ளினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த பாண்டியராஜன், ‘’குறுநில மன்னன் போல் செயல்படுகிறார் ராபா’’ என்று தனது ஆதரவாளர்களிடம் ஆத்திரப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து மறுநாள் சிவகாசியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராபா, பாண்டியராஜனை மிரட்டும் தொனியில் பேசினார். ’’மாவட்ட செயலாளர் நான் இருக்கும்போது பல கட்சிகளுக்கு சென்றவருக்கு பொன்னாடை போர்த்த விடுவேனா? அதனால்தான் அப்படிச்செய்தேன்’’ என்று பாண்டியராஜன் ஆதரவாளரை அடித்ததற்கு விளக்கம் கொடுத்தார்.
மேலும், பாண்டியராஜனை ஒருமையில் கடுமையாக விமர்சித்து, ‘’நான் குறுநில மன்னன் தான். விருதுநகரில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது’’ என்று எச்சரித்தார் ராபா.

இந்த விவகாரம் விருதுநகர் அதிமுகவில் பெரிதாக வெடித்த நேரத்தில், கடந்த 7ஆம் தேதி இரவு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு பாண்டியராஜனை அழைத்து சமாதானப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதில் திருப்தியடையாத மாஃபா ஆதரவாளர்கள்,

‘’எங்கள் சமூக, படித்த பண்பாளர், அதிமுக முன்னாள் அமைச்சர், கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் மாஃபா பாண்டியராஜனை அவ மரியாதையாக பேசி மிரட்டிய ராஜேந்திரபாலாஜியே! நாடார்கள் வாக்கு உனக்கும் உன் கட்சிக்கும் வேண்டாமா? நாவை அடைக்கி பேசு! – காமராஜர் சமூக அறக்கட்டளை , விருதுநகர் மாவட்டம்’’ என்று போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தலைமைக்கு சென்று, ராபாவை போட்டு வறுத்தெடுத்திருக்கிறார் இபிஎஸ். அதனால்தான், ‘’மாஃபா பாண்டியராஜன் விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. பாண்டியராஜன் பற்றி நான் எதுவும் பேசவில்லை. அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்’’ என்று கோவையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் ராஜேந்திரபாலாஜி.