
ஆறு மாதம் கழித்துச் சொல்கிறேன் என்று சொல்லி வந்த பழனிசாமியை இப்போதே பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்று சொல்ல வைத்துவிட்டார் அமித்ஷா. அதிலிருந்து இந்த கூட்டணி வென்றதும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று சொல்லி வருகின்றனர் பாஜகவினர்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று, ‘’வருங்கால முதல்வரே!’’ என்று தமிழக பாஜகவின் புதிய தலைவர் நயினாருக்கு போஸ்டர் ஒட்டுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதை பழனிசாமி கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது என்று பழனிசாமி எவ்வளவுதான் சொல்லி சமாளித்தாலும், பாஜகவினர் வாயிலிருந்து ஆமாம் என்ற வார்த்தை வரவேயில்லை. ‘இலையின் மீது தாமரை மலரும்’ என்று கூட்டணி ஆட்சியை சூசகமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார் நயினார். சில நேரம், ’அதுபற்றி அமித்ஷாதான் முடிவெடுப்பார்’ என்கிறார். ஆக, கூட்டணி ஆட்சி இல்லை. அதிமுக ஆட்சிதான் என்று பாஜகவினரும், நயினாரும் சொல்ல மறுக்கிறார்கள்.
இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரப்போகும் அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் இது பெரிதாக வெடிக்கும் போலிருக்கிறது. இதில் பழனிசாமி படு அப்செட்டில் இருப்பது நயினாரின் கவனத்திற்கு போயிருக்கிறது. கூட்டணியை விட்டு பழனிசாமி வெளியேறப்போகிறார் என்று வேறு செய்திகள் பரவுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இது என்னப்பா புது பிரச்சனை? என்று யோசித்த நயினார் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் பழனிசாமியை சந்தித்து சமாதானப்படுத்தி இருக்கிறார்.
மொத்தம் நடந்த 35 நிமிட சந்திப்பில் 15 நிமிடங்கள் பழனிசாமி, நயினாருடன் அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்களும் உடனிருந்தனர். பின்னர் தனியாக 20 நிமிடங்கள் பழனிசாமியும் நயினாரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
இப்படியே போனால் தேர்தல் வரைக்கும் கூட இந்த கூட்டணி தேறாது போலிருக்கிறது என்று சொல்லி ஆத்திரப்பட்டிருக்கிறார் பழனிசாமி. ‘’அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது’’ என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார் நயினார்.