
VIJAY SEEMAN
எட்டு சதவிகித வாக்குகளை பதினாறு சதவிகித வாக்குகளாக மாற்றிவிடலாம். அடுத்து 30 சதவிகித வாக்குகளாக மாற்றி ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற சீமானின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது ரகசிய சர்வே முடிவு.
8.19 % வாக்குகள் கிடைத்து மாநில கட்சி அந்தஸ்தை பெற்றதும் இதை தக்க வைக்க கூட்டணி முடிவுதான் சீமானுக்கு அடுத்தகட்ட வளர்ச்சி என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் சொன்னபோதெல்லாம், ‘கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்குச் சமம்’ என்று சொல்லி வந்த சீமான், விஜய்யின் வருகைக்கு பின்னர் அந்த முடிவில் கொஞ்சம் பின்வாங்கினார்.
அதிமுக , திமுகவுடன் மும்முனைப்போட்டி என்று நினைத்திருந்தபோது போட்டி களத்தில் தவெகவும் இறங்குவதால் கிடைக்கப்பெற்றிருக்கும் வாக்குகள் சதவிகிதம் ஏறுவதற்குப் பதிலாக இறங்கிவிட்டால் என்னாவது? என்று நாம் தமிழரும் சீமானுக்கு அறிவுறுத்தி வந்த நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணி வைக்க முன் வந்தார் சீமான்.

ஆனால், தன்னிடம் பல காலம் பேசியதை வைத்து, தன்னைப்போல் தமிழ்தேசியத்தை முன்னிறுத்துவார் விஜய் என்று நினைத்திருந்த சீமானுக்கு, ‘திராவிடமும் தமிழ்தேசியமும் தவெகவின் இரு கண்கள்’ என்று சொல்லி அதிர்ச்சி அளித்துவிட்டார் விஜய். இதனால் விஜய்யுடன் கூட்டணி முடிவில் இருந்து பின்வாங்கிய சீமான், தவெகவையும் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதே நேரம் தம்பி பாசத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியே வந்தார்.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் ஆகிவிடலாம் என்ற விஜய்யின் நினைப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே முட்டுக்கட்டை போட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற தொகுதியில் சரிபாதி, இல்லையேல்80 இடங்கள், 60 இடங்கள், அமைச்சரவையில் ஐந்து இடங்கள், துணை முதல்வர் பதவி என்று விஜய் தரப்பு வைத்த எந்த நிபந்தனையையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாவின் படி தவெகவுக்கு 25% வாக்குகள் நிச்சயம் என்று சொன்னாலும், தவெகவுக்கு 4% வாக்குகள்தான் நிச்சயம். கூடுதலாகப் போனால் 7% தான் வாய்ப்பிருக்கிறது என்று தான் எடுத்த ரகசிய சர்வேயினை தவெக தரப்பிடம் எடுத்துக்காட்டி, ‘’இந்த சதவிகிதத்திற்கு 15 சீட்டுகள்தான் தர முடியும். 2026ல் உங்க பலத்தை நிரூபிச்சிடுங்க. அடுத்த தேர்தல்ல கூடுதல் சீட் பற்றி பேசிக்கலாம். மற்றபடி ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் அதிமுகவில் கிடையாது’’ என்று திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார்.
இதனால் விஜய் தரப்பு கூட்டணிக்கு சம்மதிக்காமல் இழுத்தடிப்பதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, சீமானை கட்சிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்க, அதிமுக தரப்பு சீமானிடம் பேசியிருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் சரி, 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் சரி கூட்டணி நிலைப்பாட்டினை எடுத்திருந்தால் பல தொகுதிகளில் அதிமுக – நாதக வென்றிருக்கும். கூட்டணி இல்லாததால் வாக்குகள் சிதறிவிட்டது என்று சீமானும் அதிமுக தரப்பிடம் சொல்லி இருக்கிறார். பொதுவெளியிலும் கூட இதை பேச ஆரம்பித்திருக்கிறார் சீமான். அவரின் இந்த மனமாற்றத்தை பார்த்துதான் பிரிந்து சென்ற பலரும் சீமானிடம் வந்து மீண்டும் இணைந்து வருகிறார்கள்.

சீமானின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் தான் ரகசிய சர்வே முடிவுதான் காரணமாம். தனித்து நின்றால் 8 .19 சதவிகித வாக்குகள் 3% வாக்குகளாக சரிய வாய்ப்பிருக்கிறது என்று சர்வே காட்டியதாம். சர்வே முடிவு மட்டுமல்ல, சொந்த மற்றும் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கூட்டணிதான் சரியாக இருக்கும் என்று கயல்விழி அறிவுறுத்தியதால்தான் சீமான் முழு மனதோடு கூட்டணி முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.
50 சீட், 500 ஸ்வீட் பாக்ஸ் என்று ஆரம்பித்த நாதகவின் பேச்சுவார்த்தை இப்போது 25 சீட், 250 ஸ்டீட் பாக்ஸ் என்று வந்திருக்கிறது. தவிர நாதக வேட்பாளர்களின் தேர்தல் செலவை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுகவுக்கு சீமான் நிபந்தனை வைத்திருக்கிறார்.
இதைக்கவனித்த பாஜக, அதிமுகவிடம் முதலில் வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளத் தாங்கள் தயார் என்று வந்து நிற்கிறதாம். பாஜகவுடன் கூட்டு என்றால் கூடுதலாக துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம் சீமான்.

அதிமுகவுடன் சீமான் போய்விட்டாலோ, அதிமுக – பாஜக – நாதக எல்லாம் சேர்ந்து இணைந்துவிட்டாலோ நம் கதி என்ன? என்று யோசித்திருக்கிறார் விஜய். அதனால்தான் ’நடுரோட்டில் அடிபட்டுச் செத்துடுவ’ என்று சீமான் பேசியதை எல்லாம் மறந்து, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டு, சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி இருக்கிறார் விஜய்.
விஜய் முதல்வர்- சீமான் துணை முதல்வர். தவெகவுக்கு 150 சீட், நாதகவுக்கு 84 சீட் என்று நாதக தரப்பு பேசியதற்கு, நாதகவுக்கு 175 சீட், தவெகவுக்கு 59 சீட், சீமான் முதல்வர் – விஜய் துணை முதல்வர் என்று பேசி இருக்கிறது நாதக தரப்பு.
இரண்டு தரப்பும் தங்கள் தரப்பில் எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்திருப்பதால் இழுபறியில் இருக்கிறது பேச்சுவார்த்தை.
’ஆறு மாசம் பொறுத்திருந்து பாருங்க’ என்று எடப்பாடி பழனிசாமி ’டைம்’ கொடுத்திருப்பதால் , அதுவரை இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் தொடரவேச் செய்யும் போலிருக்கிறது.
yak9yp
i0093b
g7xzia
lvdjay
wclpui