பெண்களை இழிவாகப் பேசின வழக்கில், கஞ்சா வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுத்து வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
பெண் காவலர்களைப்பற்றி அவதூறாகப்பேசின வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் நீதிமன்றக்காவலில் உள்ளார் யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் தேனி அருகே பழனி செட்டிப்பட்டியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைதானார்.
பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் சவுக்கு சங்கருடன் தங்கியிருந்த சென்னை நுங்கம்பாக்கம் ராம்பிரபு, பரமக்குடி ராஜரத்தினம் ஆகியோரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சவுக்குசங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை அவதூறாகப்பேசின வழக்கில் கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ராம்பிரபு, ராஜரத்தினம் இருவரும் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சவுக்கு சங்கர் டீமுக்கு கஞ்சா விற்ற ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் என்ற 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்தும் 2.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரு கிலோவுக்கு உட்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமே தேனி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும் என்பதால் 3 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதால் தேனியில் இருந்து மதுரை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது.
நீதிமன்றக்காவலில் இருக்கும் சவுக்கு சங்கரை கஞ்சா வழக்கிலும், சைபர் கிரைம் வழக்கிலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சவுக்கு சங்கர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி அன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைச் சந்தித்து ‘’தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஒருதுளி போதைப்பொருள் கூட தமிழ்நாட்டில் விற்பனை ஆகாதவாறு தடுக்க வேண்டும்’’ என்று அந்த சந்திப்பில் அவர் கேட்டுக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆளுநரிடம் வைத்த அந்த கோரிக்கையினை தமிழக காவல்துறையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. அது தொடர்பான தீவிர நடவடிக்கையினையும் எடுத்து வருகிறது. ஆனால், நடவடிக்கை எடுத்தால் அதற்கு கண்டனம் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்? பெண்களை இழிவாக பேசின ஒருவருக்கு, கஞ்சா வழக்கில் கைதான ஒருவருக்கு ஆதரவாகப்பேசுவது சரியா? என்று பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.