
தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களை தவிர்த்து தன்னை மட்டுமே அதிமுகவின் முகமாக
கோவை மாவட்டத்தில் அன்னூர் கஞ்சப்பள்ளியில், ‘அத்திக்கடவு – அவிநாசி’ திட்டம் நிரைவேற்றப் பட்டதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா எடுத்தனர். இந்த மேடையில் இந்த திட்டம் நிறைவேற முதல் காரணமாக இருந்த ஜெயலலிதாவின் படம் இடம்பெறவில்லை. அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் படமும் இடம்பெறவில்லை. இந்த விழாவுக்கான அழைப்பிதழிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாமல் இருந்தது. இதனால் வெகுண்டெழுந்த அதிமுகவின் சீனியர் செங்கோட்டையன், பழனிசாமியின் இத்தகைய செயலை கண்டித்து அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் செய்து வரும் பழனிசாமி, இந்த பயணத்தை தொடங்கும் போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு தொடங்கவில்லை. இதுவும் கட்சிக்குள் பெரிதாக வெடித்திருக்கிறது.
அதிமுக என்றாலே எம்.ஜி.ஆரின் முகமும், ஜெயலலிதாவின் முகமும்தான் நினைவுக்கு வரும். இந்த பழனிசாமியின் முகம் எல்லாம் தொண்டர்களின் நினைவுகளில் இல்லை. ஆனால் அதிமுகவை தனது முகமாக மாற்ற முயற்சிக்கிறார் பழனிசாமி என்று அக்கட்சியினர் பலரும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர்., இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்திருக்கும் பழனிசாமிக்கு அந்நிர்வாகிகள் நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். இந்த போஸ்டர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாமல் அதிமுக இல்லை. அவர்களின் படங்களை தவிர்த்துவிட்டு பழனிசாமியின் படத்தை பெரிதாக போடுவது அதிருப்தியை தருகிறது. இது ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டு தலைமைக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்..

இது குறித்து அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி, ‘’கடந்த காலங்களில் “அம்மா அரசாங்கம்” என்ற பெயரில் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி, இன்று அவர்களை மறந்தது போல செயல்படுகிறார்.
கட்சியின் அடையாளமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரை விலக்கி தன்னுடைய நிழலின் கீழ் மட்டுமே அரசியல் செய்ய நினைக்கும் எடப்பாடியின் செயல் அகந்தையை வெளிப்படுத்துகிறது.

அம்மாவின் பெயரால் அரசியல் சுகம் அடைந்தவர், இன்று அவரின் புகைப்படத்தையே விலக்கி, தன்னை மட்டுமே கட்சியின் முகமாக காட்ட முனைந்துள்ளார். அவர் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் வழியில் நடத்துவரா என நினைத்தால் சந்தேகமாகவே உள்ளது’’ என்கிறார்.