Glycidyl esters (GE) மற்றும் 3-monochloropropane-1,2-diol esters (3-MCPD) போன்ற புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப் பொருட்களை கொண்ட சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தாவர சமையல் எண்ணெய்களில் உள்ள GE மற்றும் 3-MCPD ஆகிய இரசாயன கலவைகளின் அளவைக் குறைக்க வேண்டிய சவால், உலகளாவிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது, விரும்பத்தகாத சுவைகள், நிறங்கள் அல்லது நாற்றங்களை அகற்றுவதற்காக, அதிக வெப்பநிலையில் எண்ணெய்களை ஈடுபடுத்தும் போது, GE மற்றும் 3-MCPD நச்சுப் பொருட்கள் உருவாகலாம் என கூறப்படுகிறது.
“சுத்திகரிப்பின் போது, எண்ணெய்யை அதீத வெப்பநிலையில் வெளிப்படுத்தினால் GE மற்றும் 3-MCPD நச்சுப் பொருட்கள் உருவாகும்”
பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட(Refined) பாமாயில் மற்றும் பாம் ஓலின் எண்ணெயில் இந்த நச்சுப் பொருட்கள் காணப்பட்டாலும், இந்த அசுத்தங்கள் மற்ற சுத்திகரிக்கப்பட்ட (Refined) தாவர எண்ணெய்களிலும் (எ.கா., குங்குமப்பூ, தேங்காய், சூரியகாந்தி, அரிசி தவிடு எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்றவை) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கடல் எண்ணெய்களிலும் உள்ளன (எ.கா., மீன் எண்ணெய் வகைகள்).
இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பொரித்தல், வறுத்தல் போன்ற பல்வேறு சமையல் முறைகளில் பயன்படுத்தும்போது, இந்த விரும்பத்தகாத சில இரசாயன கலவைகள் இயற்கையாகவே உணவில் இடம்பெயர்ந்து உடல்நல அபாயங்களை அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பாவைப் போல எண்ணெய்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரிகளுக்கு சுகாதார நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
GE மற்றும் 3-MCPD ஆகிய இரசாயன கலவைகள் வரம்புக்கு மீறி மனித உடல்களுக்கு சென்றால், சிறுநீரகங்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்(FSSAI) மற்றும் சம்பந்தப்பட்ட பிற அரசு அமைப்புகள் GE மற்றும் 3-MCPD ரசாயன பொருட்களுக்கு வரம்புகளை விதித்து புதிய விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
News Source: IANS