இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழங்களில் முதன்மையானது டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்லைக்கழகம்(JNU). பல ஆளுமைகளை வழங்கிய அந்தப் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி இயக்கத் தலைவர்களான சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் உருவாகியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் அந்த பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள். அதே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்தான் இன்றைய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களும்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜவகர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க.வை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ABVPயின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அது பல துறைகளிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியக் கல்வியையும் இந்திய வரலாற்றையும் முழுக்க முழுக்க காவிமயமாக்கத் திட்டமிட்டுள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கேற்ற வகையில்JNUவில் ABVPயின் ஆதிக்கம் பயன்பட்டு வந்தது. மாணவர் பேரவைத் தேர்த்ல்களிலும் அதன் ஆதிக்கம் அதிகரித்து வந்தது.
இடதுசாரி சிந்தனை கொண்ட முற்போக்கான மாணவர்களின் செயல்பாடுகளை முடக்குவது, அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்வது, பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, சமூக நீதிக் கொள்கை பேசுபவர்களைத் திட்டமிட்டு பழிவாங்குவது என அந்தப் பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இதனை முறியடித்து, பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென்றால், JNUவில் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட மாணவர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைவதே முதன்மையான செயல் என்பதை முன்வைத்து இடதுசாரி மாணவர் அமைப்புகள் இயங்கின. அதற்கேற்ப ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டன. சரியான வியூகத்துடன் களமிறங்கின. தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. ,

மாணவர் அமைப்புக்கான JNUSU தேர்தல்களில், இடதுசாரி ஒற்றுமை அணி, 4 மத்திய குழு பதவிகளையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. RSS துணை அமைப்பான ABVP படுதோல்வி கண்டது.
அகில இந்திய மாணவர் சங்கம் (AISA),இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மற்றும் ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) ஆகியவற்றின் கூட்டணியின் வெற்றி, JNU வளாகத்தில் சமூகநீதி -சமத்துவ சித்தாந்தத்தின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டது.
RSS மாணவர் அமைப்பின் எந்த ஒரு நபரும் மத்திய குழுவிற்கு தேர்வுபெற முடியவில்லை. தலைவர் அதிதி மிஸ்ரா RSS ஆதரவு பெற்ற ABVP இன் விகாஸ் படேலை 449 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிதிமிஸ்ரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) இளங்கலைப் பட்டம் படிக்கும்போதே,BHU-வில், ஜனநாயக விரோத மற்றும் ஆணாதிக்க விடுதி ஊரடங்கு நேரங்களை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடியவர் இவர். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர்,வளாகத்தில் அதிகரித்து வரும் காவிமயமாக்கலை எதிர்த்து தீவிரமாக களமாடியவர். துணைத் தலைவர் கோபிகா பாபு, கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த மலையாள மாணவி கோபிகா பாபு, கணிசமான பெரும்பான்மையுடன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், ABVP-யின் தன்யா குமாரியை 1,236 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2,966 வாக்குகளுடன் துணைத் தலைவர் பதவியைப் பெற்றார். கல்லூரி வளாகங்களில் மாணவர் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கோபிகா.
பொதுச் செயலாளர் சுனில் யாதவ் மற்றும் இணைச் செயலாளர் டேனிஷ் அலிஆகியோர், தங்கள் வலதுசாரி போட்டியாளர்களை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பொறுப்புகளை வென்றனர்.
RSS தனது எல்லா அஸ்திரங்களையும் ஏவிப்பார்த்தது. ஆனால் இடதுசாரி ஒற்றுமை, இந்தமுறை வீழ்த்த முடியாத அளவுக்கு வலுவாக இருந்தது. தேர்தல் முடிவு குறித்து, மாணவர் அமைப்பான SFI வெளியிட்ட அறிவிப்பு முக்கியமானது.
“JNU மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி ஒற்றுமைக் கூட்டணியின் வெற்றி என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. வெறுப்பு அரசியல், வகுப்புவாத திணிப்பு, மாணவர்களை பிளவுபடுத்தல், மற்றும் காவிமயமாக்கல் நஞ்சுக்கு எதிரான அரசியல் பிரகடனம் இது” என்று SFI கூறியது. JNUSU தேர்தல் இந்தியாவுக்கான பாடம். காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்டுகள் – திமுக உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் உணர்வுபூர்வமாக ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,ஒற்றுமையை உருவாக்கிவிட்டால் RSS – BJP – ECI – ED நச்சுக் கூட்டணியை வீழ்த்துவது சாத்தியமே.
