
வேளாண்மை என்பது மனிதர்களின் உயிர் ஆதாரமான உணவை வழங்கும் முதன்மையானத் தொழில். எனினும், வேளாண்மை செய்யும் விவசாயிகள் நிலை என்பது எப்போதும் போராட்டத்திற்குரியதாகவே உள்ளது. இயற்கைப் பருவங்கள் சரியாக அமையாவிட்டாலும், நிலம் மற்றும் வணிகக் கட்டமைப்பு சரியில்லாவிட்டாலும் விவசாயிகளின் நிலைமை மோசமாகிவிடும். அதனைக் கவனித்து சரி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் விவசாயிகளின பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தபோது விவசாயிகள் மிகக் கடுமையாக அதனை எதிர்த்துப் பேராடினர். தலைநகர் டெல்லியை நோக்கி பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பக்கத்து மாநில விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக வந்து, டெல்லியிலேயே முகாமிட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டு இரவு பகலாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஒப்புக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் அப்போது பா.ஜ.க. தலைவராக இருந்தவர், “ஒரு புள்ளி, கமா கூட மாற்றமாட்டோம்” என்றார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, “நானும் விவசாயிதான். இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்புமில்லை. தி.மு.க. போன்ற கட்சிகள் இதை வைத்து அரசியல் நடத்துகின்றன” என்றார். ஆனால், விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாகவும், தேர்தல் களத்தை மனதில் வைத்தும், மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிட்டது மோடி அரசு.
தன்னை விவசாயி என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா மாவட்டமான தஞ்சைக்கு சென்று, அங்கு நெல்கொள்முதல் சரியாக நடைபெறவில்லை என்பதைக் குறிப்பிட்டு, விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி என்று விமர்சித்திருக்கிறார். விவசாயிகளின் நிலையை கவனத்திற்கு கொண்டு வரவேண்டியது எதிர்க்கட்சியின் கடமையே.
நேரடி கொள்முதல் நிலையங்கள் அருகே நெல் குவிந்து கிடப்பதையும் அவை மழையில் நனைவதையும் செய்திக்காட்சிகளில் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்துவிட்டதாக விவசாயிகள் வேதனையோடு தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது. அரசுத் தரப்பில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், விரைந்து கொள்முதல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது குறித்து சட்டமன்றத்திலேயே அமைச்சர் தெரிவித்திருந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. ஜூன் 12 அன்று மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையின் கொள்ளளவும் விவசாயத்திற்கு போதுமான அளவில் உள்ளது. நெல் விளைச்சலும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து சாதனை படைக்கிறது.

டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையத்தால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ரெட் அலர்ட்டாக மாறிய நிலையிலும், கன மழைக்கிடையிலும் கொள்முதல் நடைபெற்றுள்ளது. கடந்த 2022 முதலே நெல் விளைச்சலும் கொள்முதலும் அதிகரித்து வரும் நிலையில், இந்த 2025ஆம் ஆண்டு அறுவடைக் காலத்தில் அக்டோபர் 18ந் தேதி வரை 9,67,024.92 மெட்ரிக் டன் நெல் என்கிற சாதனை அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கான ஆதார விலையும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை குறித்த முதல்வர் தலைமையிலான ஆய்வுக்கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் குறித்தும் விவாதிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படும் நெல்லை சரக்கு ரயில் மூலம் உரிய இடங்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு, தஞ்சாவூரிலிருந்து 4 இரயில்கள், திருவாரூரிலிருந்து 5 ரயில்கள், மயிலாடுதுறையிலிருந்து 2 இரயில்கள், நாகப்பட்டினத்திலிருந்து ஒரு இரயில் இயக்க ஏற்பாடு செய்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இத்தனை ஏற்பாடுகளுக்குப் பிறகும் நெல் கொள்முதல் தேக்கம், மழை நீரில் நனைந்து பாதிப்பு போன்றவை நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டைக் கவனித்து, அதில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கைகள் எடுப்பதுடன், இழப்பீடும் வழங்கப்படவேண்டும்.
பருவமழை நேரத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தும்படி மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், தன்னுடைய கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. தலைமையிடம் ஈரப்பத அளவை உயர்த்திட வலியுறுத்த வேண்டும். வெற்று அரசியல் வேலைக்கு ஆகாது.