அண்டை நாடான வங்கதேசம் – கிழக்கு பாகிஸ்தானாக இருந்து அங்கு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் காரணமாக பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றது. வங்கதேசத்தை உருவாக்குவதில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தீவிர செயல்பாடுகளும் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தனிநாட்டை உருவாக்கியதும், அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்பான போராட்ட வரலாறு.
வங்கதேசம் விடுதலை போராட்டத்தை முன்னின்று நடத்திய அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறகு அந்த நாட்டின் பிரதமராக ஆனார். போராடி சுதந்திரம் பெற்ற வங்கதேசம் வளர்ச்சிப்பாதையில் மெதுவாகவே நகர முடிந்தது.
இந்தியாவை ஒட்டிய பகுதி என்பதால் மேற்கு வங்க மாநிலத்திற்கும் வங்கதேச நாட்டிற்கும் மொழி அடிப்படையில் சில ஒற்றுமைகள் உண்டு. மத அடிப்படையில் சில வேற்றுமைகளும் உண்டு. எனினும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு பகை நாடாகவே இருக்கின்ற சூழலில், வங்கதேசம் நட்பு நாடாக இருந்து வருகிறது.
வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஷ்ரின் அவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியாதான் அவருக்கு தஞ்சம் அளித்தது. இவையெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகள்.
இப்போது வங்கதேசம் உள்நாட்டு போராட்டத்தில் உச்சத்தில் இருக்கிறது. முஜ்புர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா அந்நாட்டின் பிரதமராக செயல்பட்டு வந்தார்.
வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அவருடைய புதிய அறிவிப்பு , ஏற்கெனவே வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்கக்கூடிய வங்கதேச இளைஞர்களையும், மாணவர்களையும் கோபத்திற்கு உள்ளாக்கி விட்டது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் அது ஷேக் ஹசீனாவின் அப்பா உருவாக்கிய அவாமி லீக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே கிடைக்கும் . அதாவது ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கே கிடைக்கும் என்பதுதான் போராட்டக்காரர்களின் எதிர்ப்புக்கு காரணம்.
இந்த இட ஒதுக்கீட்டிற்கு வங்கதேச உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள், தடைகள் விதித்தபோதும் பிரதமர் ஷேக் ஹசீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் மாணவர்களின் போராட்டத்தை வெகுண்டெழச்செய்து ஆயிரம் பேருக்கு மேல் கைதானதுடன், ஆங்காங்கே நடைபெற்ற கலவரங்களில் 300 பேருக்கு மேல் பலியாகி இருக்கிறார்கள்.
மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முழக்கங்கள் நாடு முழுவதும் எதிரொலித்து அதன் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் தங்கையுடன் தனி விமானத்தில் புறப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அடுத்ததாக அவர் பிரிட்டன் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய ஒரு போராட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை தக்கவைத்துக்கொள்வது என்பது சாதாரணமானது அல்ல. மொழி உணர்வின் அடிப்படையில் உருவானதுதான் வங்கதேசம். அந்த மொழி உணர்வின் விளைவாக வரக்கூடிய வாய்ப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எப்படித் தர வேண்டும் என்பதில் ஏற்பட்ட குழப்பங்களும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று அடிக்கடி ராணுவ ஆட்சிக்கு வழிவகுத்தது.
தற்போதும் அதிபர் ஆட்சி என்ற முறையில்தான் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி இருப்பதும் வங்கதேசத்தின் வளர்ச்சியை பாதித்துவிட்டன. வங்கதேசத்திற்கு முன்பாகவே மொழி போராட்டத்தை கையில் எடுத்த மண் தமிழ்நாடு. இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த அந்த போராட்டம் பிரிவினை கோரியது அல்ல. தன்னுடைய தாய்மொழியை காப்பதற்காக தமிழர்கள் தங்களின் உயிரையே மாய்த்துக்கொண்டார்களே தவிர, கலவரத்தை தூண்டி பிறமொழிக்காரர்களையோ அதிகாரத்தில் இருப்பவர்களையோ தாக்கவில்லை.
’’எந்த ஒரு போராட்டமும் கட்டுப்பாடாகவும், ஒரு தலைமையின் கீழும் பயனித்தால்தான் அது முழு பயனைத்தரும்’’ என்று 1965 மொழிப்போராட்ட காலத்திலேயே எச்சரித்தவர் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணாவும் கட்டுப்பாடான போராட்டத்தை நடத்தும்படி மாணவர்களிடம் நேரிலேயே கேட்டுக்கொண்டார். எனவே, அந்தப் போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக அரசியல் மாற்றம்தான் திராவிட இயக்கத்தின் ஆட்சி.
சமூக நீதியையும் சமூக நலத்திட்டங்களையும் முன்வைத்து மக்களுக்கான வளர்ச்சியைக் கொடுத்ததுடன் தாய்மொழி வளர்ப்பதற்கென்றும் தனித்தனி துறைகளை உருவாக்கி இன்றைய கணினி தொழில்நுட்பம் வரையிலும் தமிழை வளர்த்தெடுத்த ஆட்சி முறையும் திராவிட மாடல் ஆட்சி முறை.
ஒரு போராட்டம் எத்தகைய விளைவுகளை மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்கு தமிழ்நாடும், எத்தகைய விளைவுகளை தரக்கூடாது என்பதற்கு வங்கதேசமும் பாடமாக இருக்கின்றன. வங்கதேச மாணவர்களின் போராட்டத்தால் அந்த நாட்டின் விடுதலைக்கு காரணமான முஜ்புர் ரஹ்மானின் சிலை சிதைக்கப்படுகின்ற அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இன்றைய தலைமுறையினர் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் வருகிறார்கள். பெரியார் சிலை முன் தங்களது திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் பெரியாருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.
இதுதான் தமிழ்நாடு, வங்கதேசத்திற்கு சொல்கின்ற பாடம்.