இரண்டு கட்டங்களாக பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் நவம்பர் 6ஆம் நாள் 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11ஆம் நாள் 122 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று தெரிந்துவிடும்.
தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் உள்ளடக்கிய மகா கூட்டணிக்கும் இடையில் முதன்மையான போட்டி நிலவும் நிலையில், வேறு சில கட்சிகளும் களத்தில் நிற்பதால், யாருக்கு வெற்றி என்ற கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எந்த ஒரு கணிப்பாக இருந்தாலும், வாக்காளர்களின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமையும். பீகார் மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு கட்டாயத் திருத்தத்தால் குளறுபடி செய்த தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியக் குடியுரிமை அல்லாதவர்கள் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பதாகக் கூறி, 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம், உரிய ஆவணங்களைக் காட்டி, வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதாடும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் எழுத்துப்பூர்வமான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதில், “பீகார் மாநிலத்தில் செப்டம்பர் 2025 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 18வயது நிரம்பியவர்களின் எண்ணிக்கை 8.22 கோடி ஆகும். இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி பேர் மட்டுமே உள்ளனர். 80 லட்சம் பேர் வித்தியாசம் என்பது 10% அளவிற்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமான வாக்கு வித்தியாசம் 2% முதல் 3% அளவில் மட்டுமே உள்ள நிலையில், 10% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது, நேர்மையான நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநில பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையும் செப்டம்பர் மாதக் கணக்கிற்கும், இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் வேறுபடுவதையும் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 17 இலட்சம் பெண் வாக்காளர்கள் காணாமல் போய்விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 25% முஸ்லிம் வாக்காளர்கள். இறுதிப்பட்டியலில் நீக்கப்பட்ட 3.66 இலட்சம் வாக்காளர்களில் 34% முஸ்லிம்கள் என்பதையும் பிரசாந்த் பூஷணின் எழுத்துப்பூர்வமான அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, 5.17 இலட்சம் வாக்காளர்கள் டபுள் என்ட்ரியாக இருப்பதையும், சரியான வீட்டு முகவரி, பாலினம், கணவர்-தந்தை பெயர் இல்லாத வாக்காளர்கள் உள்ளிட்ட பல குளறுபடிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான நேரடி வாதங்கள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இறுதிப்பட்டியலில் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களில், எத்தனை பேர் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்? இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் புதிய வாக்காளர்களா? நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதா? தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டும் வகையில் விண்ணப்பிப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா? எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒருவர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் தங்களின் நியாயமான வாக்குரிமையைப் பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவார். அதனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இறுதிப்பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன் நீக்கப்பட்டுள்ள 3 இலட்சத்து 66 இலட்சம் வாக்காளர்கள் பற்றிய தரவுகளை தேர்தல் ஆணையம் 9ந் தேதியன்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடிமகன் அல்லாத வெளிநாட்டினர் என்று கூறி இலட்சக்கணக்கானவர்கள் பெயர்களை நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், யார் யார் அந்த வெளிநாட்டினர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள், உச்சநீதிமன்றம் என அனைத்துத் தரப்பிலிருந்தும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, தேர்தல் ஆணையம் நியாயமான பதிலை அளிக்குமா?
