இந்தியா சுதந்திரம் பெற்ற போது இருந்த மாகாணங்கள் பின்னர் பிரதமர் நேரு ஆட்சியில் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. பிரதமராக இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் இருந்தபோது மேலும் சில புதிய மாநிலங்கள் உருவானதுடன் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் உருவாயின. மன்மோகன்சிங் ஆட்சியில் தெலங்கானா மாநிலம் உருவானது. இந்தியாவில் ஒவ்வொரு பிரதமர் ஆட்சியிலும் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட வரலாறுக்கு நேர் மாறாக நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செயல்பட்டது.
2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த வேகத்தில், ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சட்டத்தின் 370வது பிரிவின்படியிலான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அதன் மாநில அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீரை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இந்தியாவில் ஒரு மாநிலத்தின் எண்ணிக்கையை குறைத்த ஆட்சி, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிதான். ஆனாலும், பா.ஜ.க.வினர் இதற்கும் ஃபயர் விட்டார்கள். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கே போய் இனி நிலம் வாங்கிப் போடலாம் என்று தமிழ்நாட்டில் இருந்த பா.ஜ.க.வினர் துள்ளிக் குதித்தார்கள். ஆனால், பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்குப் பிறகு காஷ்மீரில் ஜனநாயகமும், அமைதியும் கேள்விக்குறியானது என்பதே உண்மை.

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்துவிட்டுத்தான் மாநில அந்தஸ்தையும் சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்யும் அறிவிப்பை நாடாளுமன்றத்தில் அறிவித்தார் உள்துறை அமைச்சர் அமீத்ஷா. யூனியன்பிரதேசமாகிவிட்ட ஜம்மு-காஷ்மீருக்கு பின்னர் தேர்தல் நடந்து தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. லடாக் என்கிற யூனியன் பிரதேசம் நேரடியாக துணை நிலை ஆளுநர் நிர்வாகத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த போது, லடாக் எம்.பி.யான பா.ஜ.கவின் ஜம்யாங் செரிங் நம்யல் என்பவர் ஆவேசத்துடன் அதற்கு பதிலளித்தார். ஜம்மு-காஷ்முர் மாநிலத்துடன் இணைந்திருந்ததால், லடாக் மக்களின் உரிமைகளை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என்றும், லடாக் பகுதிக்கான தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், இனிதான் லடாக் வளர்ச்சி பெறும் என்றும் அவர் பேசியது எல்லாப் பக்கமும் பரவலானது.
2019ல் ஜம்யாங் செரிங் லடாக்கிற்காகப் பேசினார். ஆனால், தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகும் லடாக் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என 2021ஆம் ஆண்டே லடாக் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கின. இந்தியாவில் மாநிலங்களே இருக்கக்கூடாது என்று நினைக்கிற பா.ஜ.க. அரசு எப்படி லடாக்கை மாநிலமாக அறிவிக்கும்?
பா.ஜ.க.வின் நோக்கமே, ஜம்மு-காஷ்மீர் ஒரு மாநிலமாக இருந்தபோது அதில் இருந்த முஸ்லிம்கள், புத்த மதத்தினர், இந்துக்கள் ஆகியோரை மத ரீதியாகப் பிரித்து அரசியல் நடத்துவதுதான். அதனால்தான் மாநில அந்தஸ்தை ரத்து செய்து, யூனியன் பிரதேசங்களாக அதிகாரத்தைக் குறைத்தது. லடாக் மக்கள் இந்த சதியை எளிதில் புரிந்துகொண்டதால்தான், தங்கள் பகுதியின் வளர்ச்சிக்காக மாநில அந்தஸ்து கோரி குரல் எழுப்பிய நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. பா.ஜ.க. அலுவலகம் உள்பட பல கட்டடங்கள் எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக சூழலியல் செயல்பாட்டாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது பா.ஜ.க. அரசு.
ஜம்மு-காஷ்மீருக்கான 370வது பிரிவை ரத்து செய்து, லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மோடி அரசு அறிவித்தபோது அதனை வரவேற்றவர்களில் ஒருவர் சோனம் வாங்சுக். லடாக் முன்னேற்றமடையும் என நம்பியவர். எந்த வளர்ச்சியும் இல்லாமல், மக்களை மதரீதியாகப் பிரிப்பதை மட்டுமே பா.ஜ.க. நோக்கமாகக் கொண்டிருப்பதால், மாநில அந்தஸ்து கோரும் மக்களின் குரலுக்கு அவர் ஆதரவாக இருந்தார். அவர்தான் வன்முறைப் போராட்டங்களுக்கு காரணம் என்றும், அவர் பாகிஸ்தானின் ஆதரவில் செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கிறது அதே மோடி அரசு.
ஆதரித்தால் தேசபக்தர். எதிர்த்தால் பாகிஸ்தான் கைக்கூலி. லடாக்கில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே இதுதான் பா.ஜ.க.வின் அரசியல்.
