
File Pic
சென்னையில் 48 ஆண்டுகளாக புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. அறிவார்ந்த இந்த தொடர் முயற்சியின் தாக்கத்தால் ஈரோடு, நெய்வேலி போன்ற நகரங்களிலும் பல ஆண்டுகளாக புத்தகக் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளாக மாவட்டங்கள் தோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. எல்லாப் புத்தகக் காட்சிகளிலும் அன்றாடம் வெளியீட்டு விழாக்கள், கருத்தரங்குகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
பபாசி என்ற அமைப்புதான் சென்னையில் புத்தகக் காட்சியை நடத்துகிறது. தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் என்பதன் ஆங்கில சுருக்க வடிவம்தான் பபாசி. இந்நிறுவனம் அரசின் உதவியுடன்தான் சென்னையிலும் பிற இடங்களிலும் புத்தக் காட்சியை நடத்துகிறது. ஆட்சியாளர்கள் யாரோ அவர்களின் தயவை நாடியே இந்த அமைப்பு செயல்படும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் ஒரு போதும் புத்தகக் காட்சியைத் திறந்து வைக்கவோ விருது வழங்கவோ வந்ததில்லை. கல்வித்துறை அமைச்சர் வந்து திறந்து வைப்பதற்கே பபாசி நிர்வாகிகள் அலையாய் அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், புத்தகக் காட்சி வளாகத்தில் ஆங்காங்கே ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும். கசங்கிய தாளையோ, காலி காபி கப்பையோ அதனருகே போட்டுவிட்டால், “அம்மா காலடியில் குப்பை போடுறியா?” என்று பபாசி நிர்வாகம் பாய்ந்து கொண்டு வரும்.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அவரே பபாசி நடத்தும் புத்தகக் காட்சிக்கு பாய்ந்து வருவார். கண்காட்சியைத் திறந்து வைப்பார். புத்தக வெளியீட்டை தொடங்கி வைப்பார். ஒரு சில அரங்குகளை சுற்றிப் பார்ப்பார். ஆலோசனை சொல்வார். அத்துடன், தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாய் நிதியளித்து, அதன் மூலம் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் பொறுப்பையும் பபாசியிடம் ஒப்படைப்பார். யார் யாருக்கு விருது என்ற விவரத்தைக்கூட கலைஞர் கருணாநிதியிடம் பபாசி நிர்வாகம் தெரிவிக்காது. கலைஞர் கருணாநிதியோ அவரது ஆட்சியில் இருந்த அமைச்சர்களோ, நிர்வாகிகளோ இது பற்றிக் கேட்க மாட்டார்கள். இப்படியொன்று நடந்து கொண்டிருப்பது அவர்களில் பலருக்குத் தெரியவும் தெரியாது
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர்தான் அடுத்து வந்த புத்தகக் காட்சியைத் திறந்து வைத்தார். விருதுகளை வழங்கினார். துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர்தான் இந்த ஆண்டு புத்தக் காட்சியைத் திறந்து வைத்து விருதுகளை வழங்கினார். அதன்பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட முடியாத அளவிற்கு அரசு சார்ந்த பணிகளில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.
அரசு உதவியுடன் நடைபெறும் புத்தகக் காட்சியின் கருத்தரங்குகளில் பேச அழைக்கப்படும் நபர்கள் முதல், கடைகள் ஒதுக்கப்படுவது வரை எல்லாவற்றிலும் பபாசி நிறுவனம்+அதிகாரிகள்+தனிப்பட்ட செல்வாக்குள்ள பதிப்பாளர்களின் உள்ளரசியல் உண்டு. இந்த நிலையில்தான், ஒரு பதிப்பகத்தின் சார்பில் ஜனவரி 4ந் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்காக சென்னை புத்தகக் காட்சி அரங்கில் பேச வந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டபோது, ஒலிபரப்பான பாடலோ நீராருங்க கடலுடத்த பாடல் அல்ல. வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே..’ என்கின்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல். அது தமிழின் சிறப்பை சொல்லும் பாடல் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது, புதுச்சேரி மாநிலத்தின் வாழ்த்துப்பாடல். தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து அல்ல. சீமானின் திராவிட அலர்ஜி அரசியலுக்காக இசை இசைத்து, மாநில அரசையும் தமிழ்த்தாயையும் அவமதித்தார்கள். அதன்பிறகு, சீமான் தனது பேச்சில், புத்தக அரங்கின் ஒரு பகுதியில் இருந்த கலைஞர் பெயரை சுட்டிக்காட்டி கேவலமாகப் பேசிவிட்டும், வழக்கம்போல மலிவான விளம்பரம் தேடும் அரசியல் வார்த்தைகளை உதிர்த்துவிட்டும் சென்றார். இதில் பபாசி நிர்வாகிகள் மவுன சாட்சிகளாக உட்கார்ந்திருந்தார்கள்.
பபாசி நிறுவனமோ, நிகழ்ச்சிகளை பதிப்பாளர்கள் பொறுப்பில்தான் விடுகிறோம் என்று சொல்லி நழுவுகிறது. புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் தனக்கு எதுவுமே தெரியாது என்றும் அறியாமல் நடந்துவிட்டது என்றும் சொல்லி சமாளிப்பு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறார். அறிவார்ந்த புத்தக அரங்கில் கேவலங்களும் கேலிக்கூத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. கேடு கெட்டவர்களை மேடையேற்றினால் கேடுகெட்ட வார்த்தைகள்தான் வெளிப்படும்.