தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறது என்று கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்கிறார். விஜய் தலைமையிலான த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க முயற்சி நடப்பதாக சில காங்கிரஸ்காரர்களே சொல்கிறார்கள். ராகுல்காந்தியின் நண்பரான ப்ரவீன் சக்கரவர்த்தி என்பவர் விஜய் தரப்பை சந்தித்ததுடன், தி.மு.க. அரசை விமர்சிக்கிறார். திருச்சி வேலுச்சாமி என்ற பதவி இல்லாத காங்கிரஸ்காரர், ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார். இல்லையென்றால், விஜய் பக்கம் போவோம் என்கிறார்.காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னை கட்சி நிர்வாகிகள் மதிப்பதில்லை என்றும், பாக நிலை முகவர்கள் பட்டியல் தயாரிப்பில் எந்த ஒத்துழைப்பும் இல்லை என மாநிலத் தலைமை மீது குற்றம் சாட்டுகிறார். ஜோதிமணியின் கருத்தை ஆதரிப்பதாக மற்றொரு எம்.பி.யான மாணிக் தாக்கூர் சொல்கிறார். கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தி.முக.. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கூட்டணி உறுதியாக இருக்கிறது என்கிறார். அவருடைய மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் அடிக்கடி சேம் சைடு கோல் போடுகிறார்.
கூட்டணித் தொடர்பாகப் பேசுவதற்காக நியமிக்கப்பட்ட மேலிடப் பொறுப்பாளர்களுக்கு இது புதிதாகத் தெரியவில்லை. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி என எல்லா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் இப்படிப் பல குரக்ள் கேட்கும். எது அதிகாரப்பூர்வக் குரல் என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்துவதுதான் மேலிடப் பொறுப்பாளர்களின் வேலையாக அமைகிறது. அதனால், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் உட்கார்ந்து மேலிடப் பொறுப்பாளர் ஊடகத்தை சந்தித்து விளக்கமளிக்கிறார். இவை அத்தனையும் தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ்நாடு (Tamilnadu) அரசியல் களத்திற்கு விறுவிறுப்பான செய்திகளாக அமைகின்றன.
காங்கிரஸ் (Congress) கட்சி தி.முக.. கூட்டணியில் நீடிக்குமா, விஜய் கட்சியுடன் சேருமா, ஆட்சியில் தி.மு.க. பங்கு தருமா, விஜய் கட்சிக்குப் போய் துணை முதல்வர் பதவி பெறுமா என்று அவரவர் விருப்பங்களை செய்திகளாகவும் விவாதங்களாகவும் முன்வைக்கின்றனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டக் காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிறகும் பல வகைக் குரல்கள் ஒலிப்பதுதான் இந்திய தேசிய காங்கிரசின் இயல்பு.
இந்தியாவில் உள்ள கட்சிகளில் மூத்த அரசியல் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ்தான். வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், 1885ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன் என்ற இரண்டு வெள்ளைக்காரர்களின் சிந்தனையில் உதித்து, அவர்கள் இருவரும் தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸ்ஷா மேத்தா, உமேஷ் சந்திர பானர்ஜி உள்ளிட்ட இந்தியர்களையும் இணைத்து உருவாக்கியதுதான் இந்திய தேசிய காங்கிரஸ். அன்றைய காங்கிரசின் நோக்கம், உடனடி சுதந்திரமல்ல. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இந்தியாவுக்கும் நிர்வாகப் பதவிகள் வேண்டும் என்பதுதான்.
பின்னர் மெல்ல, மெல்ல சுதந்திர உணர்ச்சி வளர்ந்தது. அப்போதே கோபாலகிருஷ்ண கோகலே அணியினர், பாலகங்காதர அணியினர் என இரண்டு கோஷ்டிகள் உருவாகிவிட்டன. அதன்பிறகு, மகாத்மா காந்தி வந்தார். அவர் நாடு முழுவதும் சுதந்திர உணர்வை வளர்த்தார். அவர் காலத்திலும் கோஷ்டிகள் இருந்தன. இந்திய அளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவார்கள், பட்டாபி சீதாராமையா ஆதரவாளர்கள் என்று கட்சித் தலைவர் தேர்தலில் இரண்டு அணிகள் இருந்தன. தமிழ்நாட்டு அளவில் சத்தியமூர்த்தி கோஷ்டி, ராஜாஜி கோஷ்டி என்று இரண்டு இருந்தன.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நேருவின் வழிகாட்டுதலில் இயங்கியது. அவருடைய மறைவுக்குப் பிறகு, பல பிளவுகள் உருவாகின. இந்திராகாந்தி (Indira Gandhi) தலைமையில் காங்கிரஸ்(இந்திரா) என்றும், காமராஜர் உள்ளிட்ட மூத்தவர்கள் தலைமையில் காங்கிரஸ்(ஸ்தாபனம்) என்றும் இயங்கின. காமராஜர் போன்ற தலைவர்கள் மறைவுக்குப் பிறகு, இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் வலுப்பெற்றது. ஆனாலும், அதன்பிறகும் மாநிலத்திற்கு மாநிலம் பல பிரிவுகளை சந்தித்து.
கர்நாடகத்தில் அர்ஸ் காங்கிரஸ், தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ், காமராஜ் காங்கிரஸ், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், வாழ்ப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ், கேரளாவில் உன்னிகிருஷ்ணன் காங்கிரஸ், சரத்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், மத்திய பிரதேசத்தில் சிந்தியா காங்கிரஸ் இப்படி மாநிலத்திற்கு மாநிலம் பல புதிய காங்கிரஸ் கட்சிகள் உருவாகின. பிரிவதும் பின்னர் சேர்ந்து கொள்வதும் காங்கிரசின் கலாச்சாரம்.
தலைமையின் பார்வையை ஈர்க்கவும், அதன் மூலம் தனக்கான பதவியை உறுதி செய்து கொள்வதற்கும் இப்போதுள்ளவர்கள் தனியாகக் கட்சி ஆரம்பிக்காமல், சொந்தக் கட்சிக்குள்ளேயே திசைக்கொருவராகக் குரல் கொடுக்கிறார்கள்.
